வியாழன், 10 ஜூன், 2010

தமிழீழம் என்று சொல்லப் பழகு -கண்மணி


தமிழ்நாட்டிலே ஒட்டுமொத்த தமிழர்களும் எழுச்சியோடு தமது உணர்வுகளை பதிவு செய்து உலக போர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இன அழிப்பு கொலைகாரன் மகிந்தாவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு, மகிந்தா சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டார். தமிழின அழிப்புக்குத் துணைப்போன இந்தியாவின் அரசத் தலைவர்கள் மகிந்தாவோடு குலாவினார்கள்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தமிழர்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற மனவோட்டத்தோடு மகிந்தாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல் காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழர்களையும், இந்தியர் என்று அடையாளப்படுத்தும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இந்தியர்களான தமிழர்களை அலட்சியப்படுத்திய அவலத்தை நிகழ்த்திக் காட்டினார்கள்.

நம்மையும் அறியாமல் நாம் இந்த துரோகக் கூட்டத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றோம். தமிழர்களிடையே ஓர்மை பண்பு அற்றுப்போய், அவர்கள் கட்சி சார்ந்த நிலைபாடுகளுக்குள் தமது முகம் தொலைத்து வாழ்கின்ற காரணத்தால் உலகெங்கும் வாழும் தமிழர்களில் வாழ்வியல் தன்மைகளுக்குள் தம்மை பொருத்திக் கொள்ள முடியாமல் தாம் சார்ந்திருக்கின்ற அரசியல் கொள்கைகளில் தம்மை முழுமையாக இழந்து, அவர்களுக்கான ஒரு அரசியல் தளத்தை தேர்வு செய்யாமல், யாரோ ஒரு தலைவர் செய்யும் சிந்தனையை இவர்களின் சிந்தனையாக மாறி விடுகிறது. ஆகவேதான் ராசபக்சே இந்தியாவிற்கு திமிரோடு வர முடிந்தது. சோனியாவும் மன்மோகனும் அந்த கொலைக்காரனை கரம் குலுக்கி வரவேற்க முடிந்தது.

தமிழர்கள் தாம் அணி பிரியாமல் ஓரணியில் திரண்டிருப்பார்களே யாயின், நிச்சயமாக காங்கிரஸ் அரசுக்கு ஒரு அச்ச உணர்வு இருந்திருக்கும். தமிழர்களை கொன்றொழித்த இந்த ராசபக்சே இந்தியாவிற்கு வந்தால், இந்தியாவின் காலணியான தமிழ்நாடு பொங்கி எழும். அது நமக்கு பேராபத்தை விளைவிக்கும் என்கின்ற உளவியல் தாக்கம் அவர்களுக்குள் எழுந்திருக்கும். ஆனால் என்ன செய்ய? தமிழர்கள் சாதிவாரியாக, அரசியல்வாரியாக, மதவாரியாக, தம்மை பல்வேறு திசைகளுக்கு முகம் திருப்பி வாழ்கின்ற காரணத்தால், தமிழன் என்கின்ற அடையாளம் நம்மிலிருந்து தொலைந்து, யார் நம்மை தாக்கினாலும், யார் நம்மை தொடர்ந்து கொன்றொழித்தாலும் நாம் இணைய முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை ஒழிவதற்கு என்ன செய்வது? என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு அவசிய, அவசர காலத்தில் நமது தமிழ் விடுதலை பயணம் தொடங்குகிறது. தமிழர்களுக்கான துரோக வடிவமைப்புகளை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் நடுவண் அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் வாழும் பல்வேறு அமைப்புகள் மிகக் கடுமையாக சாடியும், எதிர்த்தும் வரும் நிலையில் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத மனப்போக்கு நடுவண் அரசுக்கு இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதற்குக் காரணம், தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமது தன்னல பயனுக்காக தம்மை இழந்து, தம்மோடு தமது மக்களையும் இழக்கச் செய்யும் கேவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தூ.ராஜா அவர்கள் தமிழர்களுக்கு நடுவண் அரசு கடும் துரோகம் செய்திருக்கிறது என்று சாடியிருக்கிறார். அவர் மேலும் கூறும்போது, பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால் அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா-இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

மேலும் தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. இது தமிழர்களுக்கு எதிராக நடுவண் அரசு செய்யும் கடும் துரோகம் என கூறியிருக்கிறார். ராசபக்சே இந்தியாவிற்கு வரும் நேரத்தில்கூட ராமேஸ்வர மீனவர்கள்மீது இலங்கை இனவெறி கடற்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஜூன் 7ந்தேதி சுமார் 800 விசைப் படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற இந்த படகுகளை, இந்திய எல்லைக்குள்ளாகவே இலங்கை அரசின் கப்பற்படை தடுத்துநிறுத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கரைக்குச் செல்லுமாறு விரட்டியிருக்கிறது. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அல்போன்ஸ், சூசை ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்து, பின்னர் படகுகளில் இருந்த மீனவர்களை கம்பு, கயிறு போன்றவற்றால் கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

அதோடல்லாமல் இனி எங்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து விரட்டியிருக்கின்றார்கள். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் வெறுமையுடனும், ஏமாற்றத்துடனும் மீண்டும் கரைக்கு திரும்பி இருக்கிறார்கள். கடலை நம்பி மட்டும் தமது வாழ்வை ஒப்படைத்துள்ள தமிழக மீனவர்கள், இப்படி தொடர்ந்து சிங்கள பேரினவாத படையினரால் துன்பத்திற்கு உள்ளாவது தடுக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்க, ராசபக்சே இந்தியாவிற்கு வந்தபோது நேரிடையாக தமிழ்நாட்டு முதல்வர் ராசபக்சேவை சந்தித்து எமது மக்களை தொடர்ந்து தாக்கும் உமது ராணுவத்தை அடக்கி வையுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

இல்லையெனில் ஊடகம் வாயிலாக ஒரு எச்சரிக்கையாவது விடுத்திருக்கலாம். நாம் நடுவண் அரசை சுட்டிக்காட்டுவதற்கு முன்னால் தமிழ்நாடு அரசையும் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் தமிழ்நாடு அரசு என்பது நடுவண் அரசோடு பங்காளியாக இருக்கிறது. நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பை பகிர்ந்து கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, தமிழக முதல்வர் தமது தூதுக் குழுவிற்கு சொல்லிய செய்திகளில், தமிழக மீனவர்களின் துயர் குறித்த செய்தி எதுவும் இல்லை. இந்தநிலை நீடிக்குமேயானால், இருக்கும் நிலையிலிருந்து இதைவிட மோசமான ஒரு அதிரடியான இன ஆதிக்க ஆற்றல் வாய்ந்தவனாக ராசபக்சேவை நாமே திட்டமிட்டு உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தட்டிக்கேட்க வேண்டிய நாம், அவனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்டிய கேவலத்திற்கு வந்துவிட்டோமே என்ற மனஉளைச்சல் தமிழ்நாட்டு தமிழரிடம் இழையோடி இருக்கிறது. இந்த சிவப்பு கம்பளம் தமிழர்களின் குருதியால் நெய்யப்பட்டதோ என்கின்ற உளவியல்தான் நமக்குள்ளும் உட்கார்ந்திருக்கிறது. ராசபக்சே சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த காட்சியை நாம் கண்டபோது நாம் அதிர்ந்துபோனோம். தமிழர்களை தள்ளி, அவர்களை கொன்று, அவர்களின் குருதி வழிந்தோடுவதிலே அந்த குருதி சகதியில் ராசபக்சே நடந்து வருவதைப் போன்ற ஒரு மனநிலையே நமக்கு உருவானது. இப்படி தமிழர்களின் குருதியில் ஒரு இனவெறியன் போர் குற்றவாளி, தமிழர்களை கொன்றொழித்த கொலைக்காரன் நடந்து வருவதற்கு இந்திய அரசு துணைபோன கேவலம் கொடுமை. மாந்த நேயத்திற்கு சவால்விடும் ஒரு செயல் நடைபெற்றது.

நமது தூது குழுவினர் ராசபக்சேவை சந்தித்து, கெஞ்சி கூத்தாட வேண்டிய ஒரு கேவலம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கூட இல்லாத சிங்களர்களின் அதிபர், தமிழர்களின் பிரதிநிதிகளை மிகக் கேவலமாக பார்க்க வேண்டிய நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கிவிட்டது. 14 பேர் கொண்ட மக்களவை உறுப்பினர் குழு ராசபக்சேவை சந்தித்து திரும்பியதும், குழுவின் தலைவராக செயல்பட்ட முன்னாள் நடுவண் அமைச்சர் டி.ஆர்.பாலு, ராசபக்சேவை சந்தித்ததில் நிறைவு ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அவரவர் வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல், அந்த வதைமுகாம்களுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டுள்ள நிலையை மாற்ற வேண்டும் என்று ராசபக்சேவிடம் இத்தூதுக்குழு கெஞ்சியிருக்கிறது.

கடந்த ஆண்டு சந்தித்து பேசிய தூது குழுவில் இடம்பெற்றவர்கள்தான் மீண்டுமாய் இத்தூதுக்குழுவிலும் சற்றேறக்குறைய இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் வெல்ல முடியாத சூழ்நிலை. சிங்களர்களோடு இணைந்து வாழ்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை. இரண்டு வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு உளவியலோடு, கலாச்சார, பண்பாடு, கலை இலக்கியத் தளங்களில் பிளவு பட்டிருக்கும்போது அவர்களை உருக்கி ஒன்றாக்கிவிட வேண்டும் என்கின்ற ஒரு அடக்குமுறை சிந்தனையை திணிப்பது போன்று, மீண்டுமாய் இத்தூதுக்குழு அந்த இனவெறியனிடம் பறிந்துரை செய்துள்ளது. 1987ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே ஏற்பட்ட 13வது அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தின்படி இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று ராசபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ராசபக்சே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் என்கின்ற கணக்கு தவறு. வெறும் 54ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாக கூறியிருக்கிறான். நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அப்படியானால் தமிழ்நாட்டு முதல்வர் 80 ஆயிரம் பேர் என்று சொல்கிறார். ஊடகங்கள் அதை உண்மை என்று சொல்கிறது. ராசபக்சே 54 ஆயிரம் என்று சொல்வாராயின், மீதம் இருக்கும் 26 ஆயிரம் பேரை கொல்வதற்கு இந்த மூன்று மாத கெடுவை ராசபக்சே எதிர்பார்க்கிறானோ என்கிற அச்சம் நமக்கு இயற்கையாக எழுகிறது. காரணம், போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இன்னமும் மூன்று மாதங்கள் அவர்களை மீள்குடி அமர்வுக்கு செய்ய வேண்டுமென்றால் இந்த மூன்று மாதங்களில் தகுதி வாய்ந்த இளைஞர்களை எல்லாம் தரம்பிரித்து கொன்றுவிட்டு முதியோர்களையும், பெண்களையும் மட்டும் மீள் குடியமர்த்த திட்டம் வகுக்கப்படுவதாக நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.

தூது குழுவின் தலைவர் தமிழர்களுக்கான பிரச்சனையில் உறுதியான நம்பிக்கைத் தரும் பதிலை ராசபக்சே அளிக்காததால், அவரின் சந்திப்பு நிறைவு தரவில்லை என்று கூறியிருப்பதின்மூலம் ராசபக்சே மிகத் தெளிவாக இருக்கிறான். ஆனால், நாம் தான் தொடர்ந்து முட்டாளாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆக, ராசபக்சேவின் இந்திய வருகை என்பது தமிழர்களுக்கு மேலும் ஒரு அவமான அடையாளத்தையே தந்திருக்கிறது. தமிழர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் நடுவண் அரசு இந்த செயலின் மூலம் தம்மை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்வரை விடுதலைக்கான காரணங்கள் இருந்துக் கொண்டேத்தான் இருக்கும். அந்த விடுதலைக் காரணங்கள் நிறைவு செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒட்டுமொத்த தமிழர்களையும் கொன்றொழித்தப் பின்னும்கூட ஏதோ ஒரு மூலையிலிருந்து விடுதலையின் துளிர் முளைக்கத்தான் செய்யும். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழர்கள் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதை புரிந்துக் கொண்ட பின்னரும், மீண்டும் மீண்டும் அவர்களை இணைந்துதான் வாழ வேண்டும் என்று வலியுறுத்துவது மாந்த நாகரீகத்தின் அடையாளமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து போகும் தூதுகுழுவினர் பேசும்போது அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லாமல், தமிழீழ மக்கள் என்று சொல்ல பழக வேண்டும். இதுதான் தமிழீழ மக்களுக்கான தீர்வாக இருக்கும். தனிநாடு என்பது விருப்பத்தின்பால் எழும் கோரிக்கை அல்ல. அது தேவையினால் அமைகிறது என்பதை தொலைநோக்கோடு புரிந்து கொள்ள அரசு அதிகாரங்கள் முயற்சிக்க வேண்டும். மக்களின் வாழ்வியலை அவர்களின் தளத்திலிருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமேத் தவிர, நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சிந்திப்பது மேலும் மேலுமாய் அவர்களை ஒடுக்குவதாகவே அமையும்.

இந்த ஒடுக்குமுறை என்பது வளர்ந்துவரும் மாந்தநேயத்திற்கு மரணக் குழியை ஏற்படுத்தும் என்பதை தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு தடையாக இருக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டும். தமிழீழம் என்பது தமிழர்களின் உரிமை. அதை அடையும்வரை போராட்டத்திற்கான காரணம் இருக்கும் வரை போராட்டம் தொடரும். அந்த போராட்டத்தை உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, தேசிய விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் எல்லோரும் ஆதரிக்க வேண்டும். அது உலகெங்கும் இருக்கும் மாந்தத்தை வெற்றிக் கொள்ளச் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக