வெள்ளி, 25 ஜூன், 2010

இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் ....!

 இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகைளை இடைநிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையினை 6 மாத காலங்களுக்கு நீடிப்பதாயின் தனது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என 15 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆவ் நிபந்தனைகள் வருமாறு.



1. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஊறுபாடாக அமையும் இலங்கையின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும்;


2. இலங்கைச் சமுதாயத்தில் இருக்கின்ற சகல அரசியல் கட்சிகள், இன, மதக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினங்களின் நலன்களைப் போதுமான அளவில் பிரதிபலிக்கக் கூடியதாக அரசியலமைப்புப் பேரவையை நிறுவி அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது முக்கிய அரச பதவிகளுக்குச் சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான நியமனங்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்;


3. 2005 அவசரகால ஒழுங்கு விதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள எஞ்சிய பகுதிகளையும் இரத்துச் செய்ய வேண்டும். குறிப்பாக, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பிலான ஒழுங்கு விதிகளை இல்லாமற் செய்ய வேண்டும். 2006 அவசரகால ஒழுங்கு விதிகளையும் இரத்துச் செய்யவேண்டும்.


4. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றுக்கு ஒத்திசைவான குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை, அதாவது ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை தொடர்பிலான ஏற்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் கருதினால் அந்த ஏற்பாடுகள் குற்றவியல் கோவைக்கு மாற்றப்பட வேண்டும்;


5. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒத்திசைவாக அமையாத (குறிப்பாக 9, 10, 11, 14, 15, 16 மற்றும் 26 பிரிவுகள்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பகுதிகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். அல்லது அந்த உடன்படிக்கைக்கு ஒத்திசைவான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;


6. பொதுப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் வருகின்ற 8 ஆம் பிரிவில் உள்ள உடமை கைப்பற்றல் மற்றும் விடுபாட்டு உரிமை தொடர்பிலான ஏற்பாடுகளை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கைக்கு இசைவான முறையில் அதில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;


7. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் சட்டத்தரணி ஒருவரைப் பார்ப்பதற்கான உரிமையை வழங்குவதற்கு வகைசெய்யும் உத்தேச திருத்தங்களை நிறைவேற்றவேண்டும்;


8. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தனிநபர்களை ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிப்பதற்கு அவசியமான சட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்;


9. தனிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் குழு தெரிவித்திருக்கக் கூடிய அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்;


10. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் ஐ.நா. விசேட அறிக்கையாளர்களுக்கு (ஆட்கள், காணாமல் போதல் தொடர்பான ஐ.நா.செயற்குழு, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.விசேட அறிக்கையாளர், கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளர்) அமைப்பை விடுக்க வேண்டும்.


11. பலவந்தமான சூழ்நிலைகளில் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா.செயற்குழு முன்னிலையில் உள்ள தனிப்பட்டவர்களின் விசாரணைகள் தொடர்பில் பதில் தரவேண்டும்.
2008 விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை முழுமையாகப் பிரசுரம் செய்ய வேண்டும்.


12. அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளினதும் பெயர்ப்பட்டியலை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடக்கூடியதாக பிரசுரம் செய்ய வேண்டும்; அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதன் மூலம் அல்லது அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமாக தடுப்புக்காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்;


13. ஆட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகல இடங்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழு போன்ற சுயாதீனமான மனிதாபிமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சென்று நிலைவரத்தை கண்காணிக்கக் கூடியதாக வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.


14. தேசிய மனித உரிமைகள் செயல்திட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.


15. ஊடகவியலாளர்கள் எந்தவிதமான தொந்தரவும் இன்றி தங்களது கடமைகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக