வெள்ளி, 25 ஜூன், 2010

பெண்களின் அழுகை நின்றபாடில்லை!!!!

போரின் காரணமாக தமது கணவன்மாரை இழந்து பல ஆயிரம் பெண்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் தமது சமூக வழக்கங்களுக்கு எதிராகவும் அதேவேளை ஆதரவளிக்காத அரசாங்கத்துடனும் போட்டியிட்டு வாழவேண்டியுள்ளது.


தனியார் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினாலே இவர்கள் தமது சுய கௌரவத்தை மீண்டும் நிலைநாட்ட முடியும். போரின் பின்னான நிலமைகள் தொடர்பாக ஏசியாநியூஸ் செய்தியாளர் வழங்கிய அறிக்கை வருமாறு:



பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் துணை இழந்தோர் ஆக்கப்பட்டுவிட்டார்கள்.


எவ்வாறிருந்தும், அரசாங்கம் இவர்களது நிலமைகள் தொடர்பில் பாராமுகமாக இருப்பதுடன் குறிப்பாகத் தமிழ் சமூகம்கூட இவர்களைக் புறந்தள்ளி வருகிறது. நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவுகள் தொடர்பாக விபரிக்கிறார் ஏசியாநியூஸ் செய்தியாளர்.


பொழுது போக்குக்காக யாராவது யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்கிறார்களெனில் அவர்கள் குறைந்தது அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கிறார்கள்.


அழகான யாழ்ப்பான நகரமும் ஏ9 வீதியின் இருமருங்கும் மொதுவாக நவீனமாகி வருகின்றன. வீதிகள், தொடருந்துப் பாதைகள் மற்றும் பாலங்கள் என்பன திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன.


நயினாதீவிலுள்ள நாகதீப விகாரை போன்ற இடங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன. குடாநாட்டுக்குக் குறுகிய நாள் பயணிப்பவர்களுக்கு அனைத்துமே அழகாகத்தான் தெரியும்.


எவ்வாறிருப்பினும், குடாநாட்டு மக்களின் வாழ்க்கை தொடர்பில் யாராவது ஆழமாக ஆராய முற்பட்டால் மாத்திரமே அவர் குடாநாட்டின் உண்மையான நிலைமையினை விளங்கிக்கொள்வார்கள்.


யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் இடையில் தொடர்ந்த போரின் விளைவாக எண்ணற்ற பெண்கள் தங்களது கணவன்மாரை இழந்துவிட்டார்கள்.


போர் தந்த இந்த துணை இழந்த பெண்களுக்குகு உதவுவதற்கும் அவர்களைப் பாதுகாப்பதற்கும் உருப்படியான திட்டம் எதுவும் அரசாங்கத்திடமும் இல்லை, அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் இல்லை.


பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகளுடன் வசிக்கும் இவர்கள் தங்களது வாழ்க்கையினைக் கொண்டுசெல்வதற்காக பலதரப்பட்ட கூலி வேலைகளைச் செய்கிறார்கள்.


போதிய உணவு கிடைக்காவிட்டல் இவர்களது பிள்ளைகள் பசி கிடக்கிறார்கள். போரினால் தனித்து விடப்பட்ட இவர்களுக்குப் பொருத்தமான தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதில் சில தனியார் நிறுவனங்கள் உதவுகிறார்கள்.


குடாநாட்டில் மாத்திரம் 26,300 துணையை இழந்த பெண்கள் இருப்பதாகவும் நாட்டினது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுபோல பல்லாயிரக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லீம் கணவனை இழந்தோர் வாழ்ந்துவருவதாகவும் கூறுகிறார் பெண்களுக்கான கலாச்சார மையத்தின் இணைப்பாளர் சுபாசினி துரைராஜா.


குடாநாட்டில் நிலைகொண்டிருக்கும் படையினரால் இந்த பெண்கள் 'தொந்தரவுக்கு' உள்ளாகிறார்கள். இந்தப் பகுதிகளில் தற்காலிகமாக நிலைகொண்டிருக்கும் படையினர் இவர்களுடன் தாம் 'மகிழ்வாக இருப்பதற்கு' இவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள் என்கிறார் சுபாசினி.


ஆண்துணை அற்ற நிலையில் தனித்திருக்கும் இந்த பெண்களுக்கு மதிப்பளிப்பதற்குப் பதிலாக, படையினர் பெண்கள் தனித்திருப்பதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகிறார்கள்.


"போரின் போது இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களால் இந்த பெண்கள் இன்னமும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். தங்களது கண்களுக்கு முன்னால் கணவன்மார் கொல்லப்பட்ட நினைவுகள் இவர்களது நெஞ்சங்களில் தொடர்ந்தும் நிழலாடுகிறது.


தங்களது அன்புக்குரிய தந்தை உயிரோடு இல்லை என்ற செய்தியினை எவ்வாறு பிள்ளைகளுக்குக் கூறுவது எனத்தெரியாமல் சில பெண்கள் தவிக்கிறார்கள். உங்களது தந்தை எங்கிருந்தோ வந்து வீழ்ந்து வெடித்து குண்டினால் இறந்துபோனார் எனப் பிள்ளைகளுக்குச் எடுத்துக் கூறுவது கடினமான பணியே".


2008ம் ஆண்டு வரைக்குமான காலப்பகுதியில் கணவன் கொல்லப்பட்டவர்களுக்கு மாத்திரமே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது, ஏனையோருக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.


ஏன், இளம் வயதில் தங்களது கணவன்மாரைப் பறிகொடுத்து நிற்கும் இவர்களை ஒரு துர்க்குறியாகவே தமிழ்ச் சமூகத்தினர் இன்னமும் கருதுகிறார்கள். இவர்களில் விழித்துப் போனால் நினைத்துச் செல்லும் காரியம் கைகூடாது என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது. மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நிகழ்வுகளுக்கு இப்பெண்கள் அழைக்கப்படுவதில்லை. அத்துடன் உயர்சாதியினர் இந்த பெண்களை ஒதுக்கிவைக்கிறார்கள்.


"நாங்கள் இந்த முறையினை விரும்பவில்லை. வாழ்க்கையினைத் தொலைத்துவிட்டு நிற்கும் இந்தப் பெண்களுக்கு உதவவே நாம் விரும்புகிறோம். அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்கும் சமூகத்தில் தமக்கானதொரு இடத்தினை இவர்கள் பெறுவதற்கும் நாங்கள் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம்.


பெண்களாகவும், தாய்மாராகவும் அவர்களுக்கே உரித்தான கௌரவத்தை நாங்கள் போரின் விளைவாக கணவர்களைப் பறிகொடுத்த இந்தப் பெண்களுக்கும் நாம் வழங்கவேண்டும்" என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக