ஞாயிறு, 27 ஜூன், 2010

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது!

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. முதலாவது -தரப்பு ஐ.நாவும் அதன் பொதுச்செயலர் பான் கீ மூனும். இரண்டாவது -தரப்பு ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.



ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூன், இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை கடந்த வாரம் அறிவித்தார். நிபுணர்குழு அறிவிப்பு வரப்போகிறது என்று பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இது வெறும் பூச்சாண்டியாகப் போய் விடுமோ என்ற பேச்சு வலுப்பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் ஒருவாறு இந்த நிபுணர்குழுவை அமைத்தார் பான் கீ மூன்.


இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தலைமையிலான இந்த நிபுணர்குழு அறிவிக்கப்பட்டதுமே ‘இது ஏற்கக்கூடியதல்ல தேவையற்றது’ என்று அறிவித்தது இலங்கை அரசாங்கம். இப்போது இந்தக் குழுவை நாட்டுக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்.


இந்தப் பிரச்சினை உருவெடுப்பதற்கு முதல் நாள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நீடிப்பதாகவும் ஆனால் அந்த ஆறு மாதங்களுக்குள் 15 நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.


ஐ.நா. பொதுச்செயலர் நிபுணர்குழுவை அமைக்கப்போவதாக வெளியான தகவல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளையும் கண்டு அரசாங்கம் ஆடிப்போய் விட்டது. இதனால் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கிய அமைச்சர்களை அழைத்து இதை எப்படி முறியடிக்கலாம் சமாளிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் முதல் முறையாக இப்படியொரு மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.


இது சர்வதேச அரசியல், இராஜதந்திர நடவடிக்கையாக இருப்பதால் இலங்கை அரசு இந்தச் சிக்கலைச் சமாளிப்பது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை. இது ‘நாட்டின் இறைமையை மீறுகின்ற செயல்’ ‘உள்நாட்டு விவகாரங்களில் செய்யபடும் தலையீடு’ என்று அரசாங்கம் வழக்கமான தொனியில் அறிக்கைகளை விடுத்திருக்கிறது.


அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் ஐ.நா. செயலரின் நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.


இது அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்புகளே தவிர இந்தப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழி முறையாக இருக்காது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழக்க நேரிடும். அதனால் ஆடைத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.


நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்திக்கும். அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளருடனான முரண்பாடுகளும் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.


நிபுணர்கள் குழு விசாரணைக் குழுவாக நடந்துகொள்ளாது ஆலோசனைக் குழுவாகவே செயற்படும் என்றும் அது புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் கவனம் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சர்வதேச அளவில் பல நாடுகள் இந்த நிபுணர் குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


இலங்கையின் நெருங்கிய நண்பனான ஜப்பான் கூட நிபுணர் குழுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவோ உத்தரவு போடவோ கூடாது என்று கூறியிருந்தது. ஆக, இலங்கை அரசு இந்த நிபுணர்குழு விவகாரத்தால் சர்வதேச அளவில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கப்போகிறது.


அதேவேளை நிபுணர் குழு அமைக்கப்பட்டதுமே ரஷ்ய வெளிவிவகார அமைச்சு வரிந்து கட்டிக்கொண்டு இலங்கைக்கு ஆதரவு கொடுக்க கிளம்பியிருக்கிறது. ஐ.நா.செயலருக்கு இந்த நிபுணர் குழுவை அமைக்க அதிகாரம் இல்லை என்றும் அவர் பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெறாமல் இதை நியமித்திருக்கக் கூடாது என்றும் துள்ளிக் குதிக்கிறது ரஷ்யா.


இரண்டாவது தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் முதலாவதாக ரஷ்யாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். அதன் பலன் என்னவென்பதை இந்த அறிக்கையில் இருந்து உணர்ந்து கொள்ளடிகிறது.


ரஷ்யாவைப் போன்று சீனா, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கலாம். ஏனென்றால் இவை தான் இலங்கையின் இப்போதைய நெருங்கிய நட்பு நாடுகள். ஆனால், இந்த எதிர்ப்புக் குரல்கள் நிபுணர் குழுவின் நடவடிக்கைகளை முடக்கி விடுமா என்பது சந்தேகமே.


எதிர்ப்புக் குரல்கள் சர்வதேச அளவில் அதிகரிக்க அதிகரிக்க இந்த விவகாரம் மேலும் மேலும் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெறும். இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கம் அதன் நேசநாடுகளும் எந்தளவுக்கு எதிர்க்கின்றனவோ அந்தளவுக்கு இலங்கை தொடர்பான சர்வதேச அபிப்பிராயம் தேய்ந்து போகும்.


இவையெல்லாம் நாட்டில் அதிகரித்து வருகின்ற சுற்றுலா வாய்ப்புகளுக்கு ஆபத்தைத் தேடித்தரப்போகின்றன. பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவை உள்ளே வர அனுமதித்து அதன் வழியில் சென்று அதை முறியடிக்க முனையாமல் வந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போயிருப்பது ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திரம் இவ்வளவு தானா என்று கேள்வி எழுப்ப வைத்துள்ளது.


புலிகளை ஒடுக்கும் விடயத்தில் இலங்கை அரசின் இராஜதந்திரம் பலம்மிக்க தொன்றாக இருந்தது.


ஆனால், இந்த விவகாரத்தில் இலங்கை அரசு நடந்து கொள்கின்ற முறையானது சர்வதேச ஒழுங்குக்கு முரணான போக்கைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கையையும் இடம்பெறச் செய்து விடும். அப்படியானதொரு நிலைக்கே அரசாங்கம் இலங்கையை இழுத்துச் செல்கிறது.


இந்த நிலையில் நிபுணர் குழுவுக்கு ஐ.தே.க, ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. போர்க்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை மனிதாபிமான ரீதியாக படையினர் நடந்துகொண்டனர் என்று அடித்துச் சொல்கின்ற அரசாங்கத்தினால், ஏன் இத்தகைய குற்றச்சாட்டுகளை முறியடிக்க முடியாதிருக்கிறது.


அரசாங்கத் தரப்பு தன்மீதோ படையினர் மீதோ தவறில்லையென்றால் எதற்காக நிபுணர் குழுவுக்கு அச்சப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த எதிர்ப்பு, போர்க்காலத்தில் சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மையே என்ற முடிவுக்கு சர்வதேசம் வருவதற்கே வாய்ப்பை ஏற்படுத்தும். இலங்கைக்கு வருவதற்கு நிபுணர் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அது வெளியே இருந்து விசாரணைகளை நடத்தும்.


அது இலங்கை அரசுக்கு இன்னமும் பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தும்.


இதை இலங்கை அரசு உணராமல் போனதாலா அல்லது சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற உலகின் பலம்மிக்க சக்திகள் தன்னோடு இருக்கின்றன என்பதற்காகவா இப்படி நடந்து கொள்கிறது என்பது தெரியவில்லை. அவசரப்பட்டு நிபுணர் குழுவுக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்து விட்டது என்பதே உண்மை.


இலங்கை அரசு இனிமேல் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிக் கொண்டு நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாலும் சிக்கல். அப்படி ஒத்துழைப்புக் கொடுக்காமல் முட்டிமோதிக் கொண்டாலும் சிக்கல் தான். ஆக இலங்கை அரசு சர்வதேச அளவில் மிகப்பெரிய சிக்கலுக்குள் சிக்கிப் போயிருக்கிறது.


இதிலிருந்து மீண்டு கொள்வது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்கமாட்டாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக