திங்கள், 21 ஜூன், 2010

இலங்கை அரசின் போலி முகத்திரையைக் கிழிப்போம் !

சில தினங்களுக்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்களும் மற்றும் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவரும் இணைந்து 9 பேர் கொண்ட ஒரு குழு அமைத்திருப்பதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்னணி என்ன, இதில் வெளிவராத செய்திகள் என்ன என்பதை ஆராய்வோம்.

மலேசியாவில் கைதாகிப் பின்னர் இலங்கை கொண்டு செல்லப்பட்டதாக் கூறப்படும் கே.பி என்பவர் தற்போது சண்டே ஒப்சேவருக்கு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளதாகவும் அதில் அவர் சமாதானத்திற்காகப் பாடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு நின்றுவிடாமல் பிரித்தானியா, கனடா உட்பட பல புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் பிரமுகர்கள் தம்மோடு இணைந்துசெயல்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் இவரை பேட்டி எடுத்ததாகக் கூறும் சண்டே ஒப்சேவர் பத்திரிகை அவரின் சமீபகாலப் படத்தை வெளியிடவில்லை அல்லது நேர்காணலின் போது எடுக்கப்பட படத்தைக் கூட வெளியிடவில்லை.
இது ஒரு புறம் இருக்க பிரித்தானியாவில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் சென்ற தமிழ் பிரமுகர்கள் தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். சிறையில் இருக்கும் முன் நாள் போராளிகளை விடுவிப்பது தொடர்பாகவும், அவர்கள் புனர்வாழ்வு தொடர்பாகவும் பேசி, அத்தோடு தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தையும் ஏற்படுத்தவே இலங்கை வருமாறு இவர்கள் அழைக்கப்பட்டுளனர். இதில் அடங்கியிருக்கும் சூட்சுமம் தெரியாமல் இலங்கை அரசின் பொறியில் சில தமிழ் பிரமுகர்கள் விழுந்துள்ளதாக அறியப்படுகிறது.
இலங்கை அரசு கே.பியைப் பயன்படுத்தி தந்திரமாக பல நகர்வுகளை தற்போது மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், மற்றும் அரசியல் நகர்வுகளால், இலங்கைக்கு வெளிநாடுகள் பெரும் அழுத்தங்களை பிரஜோகித்து வருகின்றது. குறிப்பாக ஜ்க்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் சர்வதேச சிக்கல் சபை போன்ற அமைப்புக்களால் இலங்கை தொடர்ந்தும் பல அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருவது யாவரும் அறிந்ததே.
இதனைச் சமாளிக்க உடனடியாக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை உடைக்க இலங்கை அரசு தீட்டியுள்ள சதித்திட்டமே இதுவாகும். சண்டே ஒப்சேவர் தெரிவித்திருப்பது போல புலிகளுக்காகச் சேகரிக்கப்பட்ட பெரும் தொகை நிதியானது இலங்கை அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை. தாம் கொடுத்த நிதிகள் இலங்கை அரசின் கைகளுக்கு போய்ச் சேர இருப்பதுபோல தமிழர்களிடையே ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசு முயல்கிறது. இதனால் இனி வெடிக்க இருக்கும் போராட்டத்தில் மக்கள் நம்பிக்கை இழத்தல், அதற்கு தமது பங்களிப்பை செய்யாமல் தடுத்தல், ஒரு உளவியல் போரைத் தொடுத்து மக்களை சோர்வடையச் செய்தல் என்பதையே இலங்கை அரசு தற்போது அரங்கேற்றியுள்ளது.
இலங்கையின் கைகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் கே.பி, தவிர்க்க முடியாத காரணத்தால் இலங்கை அரசுக்கு சார்பான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். அவர் நிலை அவ்வாறு அமைந்து விட்டது, இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கை அரசு விரிக்கும் இந்த வலையில் சிக்கிவிடக் கூடாது. குறிப்பாக இன்று கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாட்டில் புலிகளின் கட்டமைப்பு முழுப்பலத்துடன் இயங்குவதாத் தெரிவித்துள்ளமையும் அவதானிக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
சமீபத்தில் அவர் பி.பி.சி க்கு வழங்கியபேட்டியில் கடுமையாகவும், ஆத்திரமடைந்தும் சில வார்த்தைகளை உளறி இருந்தார் என்பதை பலர் கவனித்திருப்பார்கள். நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகி பொன்சேகாவை தூக்கில் இடுவேன் என்று அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் போராளிகளை அவர் அவ்வளவு சுலபமாக விடுவித்துவிடுவாரா என்பதை சம்பந்தப்படவர்கள் ஒரு முறை கருத்தில் கொள்வது நல்லது. தற்போது விடுவிக்கப்பட்ட போராளிகள், இறுதிநேரத்தில் புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும், அங்கமிழந்தவர்களும், காயப்பட்டவர்களுமேயாகும். இன்னும் பல ஆயிரம் போராளிகள் சிறையில் அடைபட்டு உள்ளனர். இவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட நிலையில், இவர்களை பேச்சுவார்த்தை மூலம் விடுவிக்கலாம் என ஆசைகாட்டி சில தமிழ் பிரமுகர்களை ஏமாற்ற நினைக்கிறது இலங்கை அரசு.
புலம் பெயர் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும், இனிவரும் காலங்களில் உதவிகளை தடுக்கவும், புலத்தில் இருந்துவரும் அழுத்தங்களை சமாளிக்கவும், இலங்கை அரசு இவ்வாறான பொய்யான செய்திகளைப் பரப்பி, சிலரை தம்பால் இணைத்து குழப்பங்களை விளைவிக்க முனைகிறது. இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் முதலில் உணர்ந்து ஒன்றுபடவேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தமிழர்கள் ஆதரித்து, ஒரு நம்பிக்கையைக் கட்டி எழுப்பவேண்டும், எப்போதுமே எங்கள் பொதுவான எதிரி சிங்களமும், அதன் அதிகார வர்க்கமுமே என்பதை நாம் முதலில் உணரவேண்டும், தற்போது புலம் பெயர் சமூகம் வேறு திசைநோக்கி மிகச் சாதூரியமாக இலங்கை அரசால் அவர்களுக்கே தெரியாமல் நகர்த்தப்படுகிறார்கள். தமிழீழம், சுயநிர்ணய உரிமை, யுத்கக்குற்றம், இனப்படுகொலை, என்ற எமது குறிக்கோளை விடுத்து நாம் தற்போது வேறு திசைநோக்கிச் செல்ல தூண்டுகிறது இலங்கை அரசின் புலனாய்வுத் துறை.
இதனை நாம் வெற்றிகரமாக முறியடிக்கவேண்டிய நேரம் இதுவாகும். அனைத்து தமிழர்களும் ஒன்றுசேர்ந்து மீண்டும் எமது பலத்தை நீரூபிக்கும் நாட்கள் நெருங்கிவருவதை அனைவரும் உணரவேண்டும். இலங்கைக்கு உலகநாடுகளூடாக நாம் கொடுக்கும் அழுத்தங்களூடாகவே எமது குறிக்கோளை நாம் அடைய முடியும். பல உலக நாடுகளிடம் பில்லியன் கணக்கில் கடன் வாங்கி அரசை நடத்திவரும் மகிந்தவுக்கு, பல பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவதன் மூலம், சிங்கள மக்கள் மகிந்தமேல் வெறுப்படையும் ஒரு நிலையை நாம் தோற்றுவிக்கமுடியும். இதன் மூலம் மகிந்த குடும்ப ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க முடியும். இதைவிடுத்து நடக்க முடியாததை பேசித் தீர்க்கலாம் என்று நினைப்பதும், இன வெறி கொண்ட அரசு தற்போது நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறுவதும், இனி நாங்கள் சமாதானமாகப் போவதே நல்லது என்று கூறுபவர்களும் ஒரு முறை எண்ணிப் பாருங்கள், இது சாத்தியமா என்று?
முன்னாள் போராளிகளை, சர்வதேசம் அடைத்துவைத்திருக்கவில்லை. இலங்கை அரசே அடைத்து வைத்துள்ளது. இவர்களை விடுவிப்பதும், தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதும் இலங்கை அரசின் கைகளில் உள்ளது, சுமார் 9 பிரமுகர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் இது சாத்தியமாகுமா? இல்லை சர்வதேச சமூகம் பல பொருளாதாரத் தடைகளையும், அழுத்தங்களையும் பிரயோகிப்பதால் இது சாத்தியமாகுமா என எண்ணிப் பாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக