திங்கள், 21 ஜூன், 2010

பிரிவினைவாத உணர்வைத் தூண்டுகிறது ஜேவிபி

வடக்கு, கிழக்கு தமிழ்மக்களிடம் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஜேவிபி நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்விலேயே ஜேவிபி மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



கடந்தவாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிக்கு ஜேவிபியின் உயர்மட்டத் தலைவர்கள் சென்றிருந்தனர். இதன்போது யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, அரசாங்கத்தின் உத்தரவின்படி, வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படையினர் இடையூறு ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.


அத்துடன் ஆளும்கட்சியின் அரசியலுக்கு படையினரை ஒரு ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்துவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச,


“வடக்கு, கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற இயல்புநிலை இல்லை என்று கூறுவதே ஜேவிபியின் குறியாக இருந்துள்ளது. யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம், அரசாங்கம் ஆகியனவற்றின் செயற்பாடுகள் குறித்து ஜேவிபி வெளியிட்டுள்ள கருத்து- 1970களில் தமிழ் அரசியல் கட்சிகள் பிரிவினைவாத உணர்வுகளைத் தமிழ மக்களிடம் தூண்டியது போன்று அமைந்துள்ளது.


ஜேவிபி பிரிவினைவாத உணர்வுகளை வடக்கு, கிழக்கில் தூண்டிவிட்டு அரசியல் நடத்த முனைகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து குழப்பம் விளைவிப்பதற்கும் ஜேவிபி முனைந்துள்ளது.


அது வெற்றி பெற்றிருந்தால் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குளேயும் அவர்கள் தமது நடவடிக்கைகளை விரிவாக்கியிருப்பார்கள்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே இன்று முல்லைத்தீவில் முதலாவது பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,


“சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல் இன்னமும் உயிரோடு இருந்தாலும்- இப்போது போர் ஒன்றை நடத்தும் அளவுக்கு அவர்களிடம் திறன் இல்லை” என்று கூறியுள்ளார்.


“பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவை, அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசு, நோர்வேயில் சில குழுக்கள் என்று புலிகளின் இலட்சியத்துடன் இயங்குவதால், இராணுவம் மற்றும் அனைத்துப் படைகளினதும் புலனாய்வுச் சேவைகள் விழிப்பாக இருக்க வேண்டும்.


வேறுநாடுகளில் பயிற்சி பெற்றவர்களை நாட்டுக்குள் புகவிடாமல் தடுக்கின்ற முக்கிய பொறுப்பு கடற்படைக்கே உள்ளது.


புலிகளின் புலனாய்வுத் திறன் குறித்து படையினர் அறிந்திருக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக