சனி, 5 ஜூன், 2010

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!


”தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”
வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.
நாம் எதிரியை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில் அவன் எதிரி, அவன் எதிரி மட்டுமல்ல, அறநெறிகள் சிறிதும் இல்லாத எதிரி. ஆதலால் நாம் வீழ்ந்துபட்டதற்கான கேள்விகளை முதலில் எம்மை நோக்கியும், அடுத்து சர்வதேச சமூகத்தை நோக்கியும் எழுப்ப வேண்டி உள்ளது.

காகக் கூட்டுக்குள் குயில் முட்டையிட்டுத் தன் முட்டைகளை காகத்தின் வாயிலாக அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்கும் திறன் குயிலுக்கு இருப்பது போல, தம் எதிரிகளைப் பயன்படுத்தியே தம் திட்டங்களை நிறைவேற்ற வல்ல ஆற்றல் சிங்களத் தலைவர்களிடம் காலம் காலமாய் உண்டு.
சிங்களவரின் பிரதான எதிரிகள் இந்தியாவும், ஈழத்தமிழரும் தான். ஆனால் கால கட்டத் தேவைக்கேற்ப இவ்விரு தரப்புக்களையும் பயன்படுத்தி சிங்கள தலைவர்களும், சிங்கள இராஜதந்திரிகளும் பல நூற்றாண்டுக் கணக்காய் தொடர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது ஆங்கிலப் பத்திரிகையாளரான காமினி நவரட்ணவுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் தமிழரின் நியாயங்கள் பற்றியும், ஜே.ஆர். இன் இராணுவ அட்டூழியங்கள் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதி வந்த அவர் ஒரு சிங்களப் பௌத்தனாவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்த மதிப்பார்ந்த ‘Saturday Review ‘ என்ற பத்திரிகையின் ஆசிரியருமாவார்.
காமினி நவரட்ணவை மிக நன்றாக உபசரித்த ஜே.ஆர் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதுமாறும், அதற்குத் தேவையான பணத்தையும் மற்றும் சகல உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறித் தனது நூலகத்தையும் காண்பித்தாராம்.
ஆனால் காமினி நவரட்ண இதற்கு சம்மதிக்க மறுத்தார். இதன் பின்பு என்னை ஒரு நாள் சந்தித்த காமினி நவரட்ண இக்கதையைக் கூறிவிட்டு இதன் உள்ளடக்கம் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.
அதாவது அந்த வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான தெரிவில் உண்மையாகவே தனது பெயர் ஜே.ஆர். இன் மனதில் இல்லை என்றும், ஆனால் இப்படித் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான கௌரவத்தை அவர் தனக்கு அளித்தார் என்ற உணர்வின் பெயராலேயே, தனக்கெதிராக நான் எழுதுவதை நிறுத்தச் செய்வதே ஜே.ஆர்.இன் நோக்கமாக இருந்தது என்றும் காமினி நவரட்ண கூறினார்.
அதேவேளை, ஜே.ஆர் அரங்கேற்றிய இன்னொரு நாடகத்தைப் பார்ப்போம். அப்போது தமிழரின் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை வசியம் செய்ய தந்தை செல்வாவின் மருமகன் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனைத் தேர்ந்தெடுத்தார் ஜே.ஆர்.
கனடாவிலிருந்த ஏ.ஜே.வில்சனை விசேட அழைப்பின் மூலமும், விசேட ஏற்பாடுகளுடனும் ஜே.ஆர் அவரைக் கொழும்பிற்கு அழைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் அவருடனான விசேட சந்திப்பின் போது ஜே.ஆர். Tea pot இல் இருந்து தானே வில்சனுக்கான ரீயைத் தயாரித்துத் தன் கையால் வில்சனுக்கு பரிமாறினார்.
ஓர் அறிஞன் என்ற வகையில் தன்னை ஜே.ஆர். கௌரவித்த வகையும் உபசரித்த விதமும் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக ஏ.ஜே.வில்சன் கூறினார். ஜே.ஆர் தன் கையால் தேனீர் தயாரித்து தனக்கு பரிமாறியதை ஒரு பெருந்தன்மை என ஏ.ஜே.வில்சன் வாய்விட்டு தன்னிடம் கூறியதாக ஒரு பல்கலைக்கழக கல்விமான் என்னிடம் கூறி வேடிக்கையாகச் சிரித்தார்.
இதன் பின்பு தன் மீது மதிப்புக் கொண்ட ஏ.ஜே.வில்சனைப் பயன்படுத்தி ஜே.ஆர் அமிர்தலிங்கத்தை திறமையாகக் கையாண்டார். 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்பது ஜே.ஆர்.க்கு தெரியும்.
எனவே ஜனாதிபதித் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி பகிஸ்கரிக்க வேண்டுமென ஜே.ஆர். கோரி ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இதற்கான சம்மதத்தை அமிர்தலிங்கத்திடம் ஜே.ஆர். பெற்றார்.
இறுதியில் தாம் ஜே.ஆர்.ஆல் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை Break-up of Srilanka என்ற தனது நூலில் ஏ.ஜே.வில்சன் எழுதியுள்ளார். இப்படி காகக் கூட்டுக்குள் குஞ்சு பொரிக்கும் வித்தை சிங்களக் குயில்களுக்கு நன்றாகவே தெரியும்.
கொழும்பிற்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிட் ஜே.ஆர். இன் திறமைகளைப் பற்றி Assignment Colombo என்ற நூலில் எழுதியுள்ளதுடன் ”culpa.mea culpa’ (நான் பாவி, நான் பெரும்பாவி) என்ற கிறிஸ்த்தவ மத பாவ மன்னிப்பு பதத்தை பயன்படுத்தி தான் ஜே.ஆர். இடம் ஏமாந்தமைக்காக வருந்தியுள்ளார்.
1987ஆம் ஆண்டு ஒரு ஜனாதிபதி தாம் எதிரியாகக் கருதிய இந்தியாவைப் பயன்படுத்தி தமது இன்னொரு எதிரியான விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தினர். அடுத்து வந்த மற்றைய ஜனாதிபதி தமது எதிரியான விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி 1990ஆம் ஆண்டு தமது மற்றைய எதிரியான இந்திய இராணுவத்தை வெளியேற்றினார். இந்தியாவைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி இந்தியாவையும் என தம் இரு எதிரிகளையும் இப்படித்தான் தோற்கடிக்கும் கலையை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
இராஜபக்சக்கள் 2005ஆம் ஆண்டு பதவிக்கு வர முன்னிருந்தே தமிழ்மக்கள் தரப்புச் சக்திகள் பலவற்றையும் எவ்வெவ் வகைகளில் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவது, இந்தியாவை எப்படிப் பயன்படுத்துவது, மேற்குலகை எப்படிப் பயன்படுத்துவது, கிழக்குலகை எப்படி பயன்படுத்துவது என்ற வித்தைகளை நுணுக்கமாக வகுத்து கையாளத் தொடங்கினார்கள்.
இலங்கையின் நவீன வரலாற்றில் ஜே.ஆரைத் தான் முதல்தர இராஜதந்திரியாக பலரும் கருதுவதுண்டு. இரண்டாவதாக டீ.எஸ்.சேனநாயகாவையும், மூன்றாவதாக பண்டாரநாயக்கவையும் கருதுவதுண்டு. ஆனால் இராஜபக்சக்கள் இம் மூவரின் கூட்டுத் தொகையை விஞ்சி முன்னணியில் நிற்கிறார்கள்.

சகோதரர்களான நான்கு இராஜபக்சக்களும் ஒன்றாய் திரண்டு அரசியல் அரங்கில் செயல்படுவதும் இம் முன்னணிப் பாத்திரத்திற்கு முக்கிய காரணம். இராஜபக்சக்கள் அரச கட்டில் ஏறத் தொடங்கியதிலிருந்து இற்றை வரை பறந்து கொண்டிருக்கும் அவர்களது வெற்றிக் கொடியை மேற்படி அவர்களது ராஜதந்திர மெருகிலிருந்தே நாம் புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.

‘வரலாறு எமக்குச் சொல்லும் பாடம் என்னவெனில் நாம் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான்’ என்ற ஹெகலின் கூற்று தமிழரைப் பொறுத்து பெரிதும் பொருத்தமாக உள்ளது.

வரலாற்றை விருப்பங்களல்ல, வாய்ப்புக்களே வழி நடத்துகின்றன என்பதால் வாய்ப்புக்களை ஒருங்கிணைக்கும் வித்தையே தலைமைத்துவம் என்பதாகும். கனிந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் அதேவேளை காயாய் இருக்கும் வாய்ப்புக்களை கெடுத்திடாது, அவற்றை கனியவைக்க வேண்டும் அல்லது அவை கனியும் வரை காத்திருக்கும் பக்குவம் வேண்டும். வாய்ப்புகளைச் சேதப்படுத்தினால் வரலாறு ஸ்தம்பித்து நிற்கும் அல்லது எதிர்ப்பக்கம் வீழ்ந்துவிடும்.

‘தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று தன் தலைமைத்துவம் ஓய்ந்து அடங்கும் இறுதிக் காலத்தில் தந்தை செல்வா கூறினார். சிங்களத் தலைமைகளிடம் தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தோல்வி அடைவது பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலமே அது. அதாவது தனக்கு முற்பட்ட தலைவர்களும் தோல்வி அடைந்து விட்டார்கள், தனது தலைமையும் தோல்வி அடைந்து விட்டது. இனிமேலும் வரப்போகும் தலைமைகளாலும் முடியாது. ஆதலால் ‘இனி’ கடவுள் காப்பாற்றினால் சரி அல்லது ஒன்றுமில்லை என்பதே இதன் வியாக்கியானமாகும்.

சுமாராக 20,000 போராளிகள் எதிரியிடம் சரணடைந்தும், இலட்சக்கணக்கான மக்கள் எதிரியிடம் அகதிகளாய் அகப்பட்டும், துன்புற நேர்ந்த கதியை நாம் நுண்மான் நுழை புலன் கொண்டு ஆராய வேண்டும் என்பது உண்மைதான். அதேவேளை நாம் எவ்வாறு எம்மைக் கைவிடமுடியும்? ‘உன்னை நீ கைவிட்டுவிட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது’ என்று பிரஞ்சுப் பழமொழி ஒன்று உண்டு.

எதிரி எமக்கு பாரிய தோல்வியை மட்டும் தரவில்லை, கூடவே மகத்தான பாடங்களையும் எமக்கு தந்திருக்கிறான். எதிரி எமது கால்களில் பாரிய விலங்கை மட்டும் மாட்டவில்லை, கூடவே தனக்கெதிராக பொங்கி எழவல்ல கோபக் கனலையும் எம் நெஞ்சில் மூட்டி உள்ளான். எதிரி எமது இராணுவ அரண்களை மட்டும் நொருக்கவில்லை, கூடவே எம்மிடமிருந்த கற்பனைகளையும் தவறான சிந்தனைகளையும் நொருக்கியிருக்கிறான்.

இவை எல்லாவற்றிற்கும் ஊடாக வரலாற்றில் நாம் புதிய வாய்ப்புக்களைத் தேடுவோம். தவறுகளை நாம் களையத் தவறினால் தவறுகள் எம்மை களைந்து விடும். உள்ளும் புறமும் இவற்றை நாம் ஆழமாக சிந்தித்து எம்மை புதுமெருகிட்டு எதிரியை நாம் எதிர்கொண்டு வென்றாக வேண்டும்.

‘தமிழ்மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று சிங்கள எதிரி தொடக்கம் சர்வதேச அரசுகள் ஈறாக ஐ.நா பொதுச் செயலர் உட்பட அவைரும் கூறிவரும் கூற்றாகும். அப்படி இருந்தும் தீர்வை ஏற்படுத்த சர்வதேச சமூகம் என்ன செய்கின்றது என்ற வினா ஆழமாக எழுகின்றது.

சிங்கள அரசுதான் தமிழரை ஒடுக்குகிறது என்பதும், அரசியற் தீர்வைக் காண வேண்டிய பொறுப்பு சிங்கள அரசுக்கு உண்டென்பதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். தமிழ் மக்களின் உரிமைகளை அரசு மறுத்ததன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது என்பது குழந்தைப் பிள்ளைக்குக் கூடத் தெரியும்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்’ என்று கூறிக்கொணடு சர்வதேச அரசுகள் எல்லாம் சிங்கள அரசுக்கு முழு அளவிலான ஆயுத, இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவுகள் அனைத்தையும் வழங்கின. இப்போது தமிழரின் கரங்களில் வெங்காயம் உரிக்கும் கத்தியையும், சட்டை தைக்கும் ஊசியையும் தவிர ஆயுதங்கள் என்று எதுவும் இல்லை. இத்தனைக்கும் பிறகு இராஜபக்சக்கள் சொல்கிறார்கள், ‘அரசியல் தீர்வு காணவேண்டும்தான். ஆனால் இப்போது முக்கியம் அதிகாரப் பரவலல்ல – அபிவிருத்தி தான்.’

‘பயங்கரவாதம்’; என்றதன் பெயரால் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்றொழிக்க உதவிய சர்வதேச அரசுகள், சிங்கள அரசு உரிமை வழங்க மறுப்பதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றன என்பதே பிரதான கேள்வியாகும்.

இப்போது சர்வதேச அரசுகளின் பொறுப்பு என்ன?

போராளிகள் பல ஆயிரக்கணக்கில் சிங்கள இராணுவ சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழ் மண் முழுவதும் சிங்கள இராணுவ பிரசன்னம். 1983ஆம் ஆண்டு 30,000 படையினரே இலங்கையில் இருந்தனர். ஆனால் இப்பொழுது 3,00,000 இராணுவத்தினரும், கடற்படை – விமானப்படை – அதிரடி பொலிஸ் படை என மொத்தம் 1,50,000 படையினரும், எல்லைக்காவல் படை என 60,000 படையினரும் என மொத்தம் 5,10,000 படையினரும் இதற்கும் அப்பால் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பிரிவு வேறு.

ஒவ்வொரு தமிழரின் வீட்டு வாசலிலும் தலா மூன்று ஆயுதம் தாங்கிய சிப்பாய்களென ஒவ்வொரு தமிழனுக்கு பின்னாலும் இராணுவமும் துப்பாக்கியுமே நீண்டு நிற்கின்றன. இத்தகைய அச்சமூட்டும் அரச பயங்கரவாத இராணுவத்தின் முன்னால் தமிழரின் வாழ்வு புழுப்போன்றதாகி விட்டது. ஒடுக்கும் சிங்கள இனவாதத்தை ஆயுதபாணிகளாக்கி தமிழினப் படுகொலைக்கு துணை புரிந்த சர்வதேச அரசுகளின் பொறுப்புத்தான் இனி என்ன?

அரசுகளைப் பொறுத்தவரையில் தர்மம் என்றும், நியாயம் என்றும் எதுவுமில்லை. நலன்கள் என்கின்ற தத்துவம்தான் உண்டு. ‘சொந்தக்காலில் நின்று சொந்தப் பலத்தில் போராடுவோம்’; என நாம் கூறிக்கொண்டிருந்த அதேவேளை எமது சிங்கள எதிரியோ அமைவிடம் என்னும் வளத்தை சந்தை விரித்து வைத்துக் கொண்டு வெளிநாடுகளை அவை அவற்றிற்கான நலன்களால் கவர்ந்திழுத்து முழுச் சர்வதேச அரசுகளையும் தன்னகத்தே கொண்ட பெரும் வியூகத்தை அமைத்துக் கொண்டான்.

இலங்கைத்தீவின் சிங்கள பகுதிக்குரிய அமைவிட முக்கியத்துவத்தை விடவும் தமிழீழ தரை மற்றும் கடல் அமைவிட முக்கியத்துவம் பெரிது. இத்தகைய முக்கியத்துவத்தை முதலீடாகக் கொண்டு நாம் எமக்கான வெளியுறவுக் கொள்கை வியூகத்தை அமைப்பது பற்றி சிந்திக்கவே இல்லை.

இலங்கையின் அமைவிட வழி நலனை நோக்காக கொண்ட சீனா இனப் பிரச்சினையையும், யுத்தத்தையும் பயன்படுத்தி சிங்கள அரசின் நிரந்தர நண்பனாய் திகழும் நிலைக்கு வந்துவிட்டது.

இனி இலங்கை ஏட்டிக்குப் போட்டியாய் வல்லரசுகளின் யுத்தகளமாய் அமையும். இதுதான் இனி இலங்கையின் வரலாற்றை முற்றிலும் நகர்த்தப் போகிறது. எமது நிலப்பரப்பின் அளவை விடவும் எமது சனத்தொகையின் அளவை விடவும் எமக்கிருக்கும் அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அளவு மிகப்பெரிது.

எம்மீது இரங்கி யாரும் எமக்கு உதவுவார்கள் என்றோ அல்லது தர்ம நீதிக் கோட்பாடுகளின் பெயரால் யாரும் எமக்கு உதவுவார்கள் என்றோ நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மேற்படி நலக்கோட்பாட்டை சரிவரப் புரிந்தும் கையாண்டும் கொள்வதன் மூலமே எதிரிக்கு எதிரான வியூகத்தை வகுப்பதன் மூலமே நாம் விடுதலை அடைய முடியும். இலட்சக்கணக்கான தமிழர்கள் சிந்திய இரத்தத்தில் இந்து சமுத்திரத்தின் உப்பு ஊறி இருக்கிறது.

முள்ளிவாய்க்காலுக்கும் வல்லரசுகளின் தலை நகரங்களுக்கும் இடையே குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டுள்ள கேந்திர கணித கோடுகளை விளங்கிக் கொள்ளாமல் முள்ளிவாய்க்கால் இரத்த ஆற்றை விளங்கிக்கொள்ள முடியாது.

இதில் புதிதாக எழுந்த சிவப்புக் கோடு கவர்ச்சி விசை மேலிட்டு மற்றைய கோடுகளுடன் சிக்குண்ண தொங்கிய போது இரத்த ஆறு அவசர கதியில் பெருக்கெடுத்தது. இந்த யுத்தத்தின் ஊற்றிலிருந்து சிங்கள – சீன உறவு ஓங்கத் தொடங்கியதால் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் சீனா முன்னணி வகிக்கக்கூடிய நிலையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது

தன் சொந்த சகோதர இனமான தமிழருடன் உரிமைகளை பகிர்ந்து கொள்ளத் தயாரில்லாமல் அச்சகோதர இனத்தை ஒடுக்க சிங்கள அரசு அன்னிய அரசுகளிடம் கை ஏந்தியதன் விளைவாய் சிங்கள தேசமும் இன்று அன்னிய வல்லரசுகளின் கால்களுக்குள் சிக்குண்டு விட்டது.

இந்த யதார்த்தத்தை கற்பனைகளின்றி, கற்காலக் கனவுகளின்றி, இருபத்தோராம் நூற்றாண்டிற்கான சிந்தனைகளின் அடிப்படையில் எப்படி இரத்தமும் தசையுமாகச் சிந்தித்து எம்மால் அணுகமுடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு நாம் விடுதலையை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

இந்த யதார்த்தத்தை சரிவரக் கையாண்டால் இரத்தம் சிந்தா விடுதலைக்கு வாய்ப்பிருக்கிறது.

எதிரி எவ்வளவு தான் இராஜதந்திர மெருகுள்ளவனாய் இருக்கின்ற போதிலும் அவர் கிளப்பி விட்ட சிங்கள இனவாதத்தின் தர்க்கபூர்வப் போக்கானது ‘தொடர்ந்து வடக்கே போகும்’ இயல்பை கொண்டுள்ளதால் அது ஒரு நாள் தெற்கே மிதக்கும். இதை நாம் சரிவர அறுவடை செய்ய முற்பட்டால் அந்த அறுவடை தமிழீழமாய் அமையும். அதுவே முள்ளிவாய்க்கால் சொல்லக்கூடிய எதிரிக்கான பதிலாகும். அந்தப் பதில்தான் மாண்டு போன தமிழ்மக்களுக்கான சாந்தியுமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக