சனி, 5 ஜூன், 2010

மட்டக்களப்பு மீளக்குடியேறிய மக்களின் துயரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னர் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக முன்னணிப் பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் அனைத்தும் வரட்சியால் வற்றிவிட்டதால் அம் மக்கள் குடிநீரைப் பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இப் பிரதேசத்தில் மருத்துவமனை மற்றும் போக்குவரத்து வசதிகள் முழுமையாக இல்லாத காரணத்தில் அப் பகுதி மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பத்திரிகையின் செய்தியாளர் பி.கே.பாலசந்திரன் எழுதிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள 37,068 குடும்பங்களில் 7,206 குடும்பங்களுக்கு மட்டுமே உதவிப் பணமாக 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றச் செயலாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.
இம் மாவட்டத்தில் 29,862 குடும்பங்களுக்கு இதுவரை மீள்குடியேற்ற உதவிப் பணம் வழங்கப்படவில்லை. தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25,000 ரூபாப் படி இக் குடும்பங்களுக்கும் உதவிப் பணம் வழங்குவதற்கு 746 மில்லியன் ரூபா தேவை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வுதவிப் பணத்தினை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் 1.4 பில்லியன் ரூபா தேவையாகவுள்ளது.
இம் மாவட்டத்தில் போரினால் முழுமையாகச் சேதமடைந்த 13,777 வீடுகளில் கடந்த மூன்று வருடங்களில் 5,017 வீடுகள் மட்டுமே மீளப் புனரமைக்கப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் போரின் போது கொல்லப்பட்ட 346 பேருக்கும், காயமடைந்த 394 பேருக்கும் பொருத்தமான தீர்வு வழங்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆயினும், அவர்களுக்கான ஆவணங்களை வழங்குவதைக் கூட சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
போரின் போது இடம்பெயர்ந்து தங்களின் கிராமங்களுக்கு மீண்டும் திரும்பும் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் சிறிலங்கா அரசு வழங்க வேண்டும்.
ஆனால், இவ் விவகாரத்தில் சிறிலங்கா அரசு முழுமையாகச் செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
போரின் போது இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருக்கின்ற மக்களை மூன்று மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அவரின் இவ்வறிவிப்பினை உள்ளூர் அதிகாரிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேற்கின்ற அதேவேளை, மீள்குடியேற்றம் என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் நடைபெற வேண்டும் என சுட்டிக்காட்டுகின்றனர்’ என அவர் தனது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்னயில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருவதாக மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை அவதானித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சர்வதேச ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக