சனி, 5 ஜூன், 2010

இந்தியாவை வைத்து காரியம் சாதிக்க முனைகிறதா இலங்கை ?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.
இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவியேற்கின்ற எவரும் முதலில் இந்தியாவுக்குத் தான் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்யவில்லை. ரஷ்யாவுக்குத் தான் முதற்பயணத்தை மேற்கொண்டார்.



அதற்குப் பிறகு பூட்டான், ஈரான் என்று பல பயணங்களை மேற்கொண்ட பின்னர் தான் இந்தியாவுக்கான பயணத்தை இந்த வாரம் மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பேச்சுக்களிலும், மூன்று முக்கிய உடன்பாடுகளிலும் அவர் கைச்சாத்திடப் போகிறார். அதேவேளை அவரது பயணத்தின் மற்றொரு முக்கியமான விடயம், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான நகலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் கையளிக்கப் போகிறார்.


13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்த நகல் என்று முன்னர் அரசாங்கம் கூறியிருந்தது. 1988 இல் இந்தியாவின் அழுத்தத்தின்பேரில் தான் இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன செய்திருந்தார். அதே திருத்தத்தில் செய்யவுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவின் கருத்தை அறிவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கம் என்று தெரிகிறது.


ஜே.ஆர்.ஜெயவர்தன 13 ஆவது திருத்தத்தில் வழங்கியிருந்த பொலிஸ், காணி அதிகாரங்கள் எதையும் மாகாண சபைகளுக்கு வழங்கப் போவதில்லை என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிடிவாதமான நிலைப்பாடு. அதை அவர் கடந்த வாரம் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதும் தெளிவாகக் கூறியிருந்தார்.


13 ஆவது திருத்தத்தில் இருப்பதை விடவும் குறைந்தளவிலான ஒரு அதிகாரப் பகிர்வை தனது அரசியலமைப்புத் திருத்த யோசனையாக மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.


இதற்கு இந்தியாவின் பதில் எத்தகையதாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தது. ஆனால், அதைவிடவும் குறைந்தளவு அதிகாரங்களையே பகிருகின்ற தீர்வுத் திட்டத்துக்கு இந்தியா இணக்கம் தெரிவிக்குமா என்பது மற்றொரு கேள்வி.


அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்வுத்திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவது ஒரு சம்பிரதாயத்துக்காகவா அல்லது இந்தியாவின் அனுமதியை, கருத்தை அறிவதற்காகவா என்பது தெரியவில்லை. இந்தத் தீர்வு யோசனைக்கு இந்தியா கொடுக்கப் போகும் பதிலைப் பொறுத்தும், அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையைப் பொறுத்துமே இதைக் கணிக்க முடியும்.


அதேவேளை, அரசாங்கம் இந்தத் தீர்வுத் திட்டம் குறித்து உள்நாட்டில் எவருடனும் இதுவரையில் விவாதித்ததாகவோ பேச்சு நடத்தியதாகவோ தெரியவில்லை. எல்லாமே மூடுமந்திரமாக நடத்தி முடித்திருக்கிறது. குறிப்பாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மைத் தேர்தல் மூலம் நிரூபித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு ஒப்புக்காவது இதுபற்றிக் கலந்துரையாடல் நடத்தவில்லை.


பொதுத்தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைப்போம் என்று கூறியிருந்தது அரசாங்கம். அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கம் பேச்சுக்கு அழைத்தால் பங்கேற்கத் தயார் என்று கூறியது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களாகியுள்ள போதும் அரசாங்கம் கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசவில்லை.


இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோதுதான் நாளை திங்களன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேசப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆயினும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் அதற்கான அழைப்பு கூட்டமைப்புக்கு விடப்படவில்லை.


தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கான தரப்பாக தம்மை நிரூபித்துள்ள கூட்டமைப்பை கலந்தாலோசிக்காமல், தாமாகவே ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்து அதற்கு இந்தியாவின் ஒப்புதலைப் பெறுகின்ற அளவுக்குப் போய்விட்டது அரசாங்கம். இங்கு தீர்வுத் திட்டம் என்பதும் அரசியலமைப்புத் திருத்தம் என்பதும் ஒன்று தான்.


அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்தால் சரி, அதுவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமாகக் கருதுகிறது அரசாங்கம்.


அதற்கு இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் போதும். அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு விடும் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இப்படிச் செய்கிறதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அறியாமல், அவர்களின் விருப்பங்களை தெரிந்து கொள்ளாமல் ஒரு தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகிறதா என்பது புரியவில்லை.


அரசாங்கம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையாவது முன்வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கினாலும் அது நிரந்தர அமைதிக்கான வழியாக இருக்காது.


நாளை மறுநாள் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லப் போகும் நிலையில் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க கடைசி நேர அழைப்பை விடுப்பது கூட வெறும் சம்பிரதாயத்துக்காகத்தான். ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்ட, அரசியலமைப்புத் திருத்த யோசனைகளில் மாற்றம் செய்வதற்கோ, அதுபற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்கோ கூட்டமைப்புக்கு அவகாசம் கொடுக்கக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகத் தெரிகிறது.


இது பற்றி கூட்டமைப்பையும் அழைத்துப்பேசி கருத்துகளைப் பெற்றதாகச் சொல்வதற்கு மட்டுமே இந்தச் சந்திப்பு உதவப் போகிறது. எனவே, இந்தச் சந்திப்பு நடந்தால் அது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே அமையும். அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் பேச வேண்டும்.


இலங்கை அரசின் தீர்வை இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ திணித்து விடமுடியாது. தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள், அதற்குப் பொருத்தமான தீர்வு என்ன என்று இன்னொரு நாடோ தரப்போ கூறிவிட முடியாது. அது பொருத்தமான தீர்வு தானா என்பதைத் தீர்மானிக்கின்ற திறனும் தகுதியும் தமிழ் மக்களுக்கே உரியது. அப்படியிருக்க, இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றால் கூட்டமைப்பு அதற்குத் தலையாட்டும் என்று அரசாங்கம் கருதினாலும் சரி, அதன்படி கூட்டமைப்பு நடந்து கொண்டாலும் சரி, தமிழ் மக்களால் நிராகக்கப்படும் நிலை உருவாகும்.


இன்னொன்று கூட்டமைப்பை ஒதுக்கிவிட்டு இந்தியாவின் ஆதரவுடன் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று நினைத்தாலும் அது நடக்கப் போவதில்லை. கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒன்று. அது ஜனநாயகத் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் எப்படி தேர்தல் வெற்றியை வைத்து நாடு முழுவதிலும் தமக்கு பேராதரவு இருப்பதாக உலகத்துக்குச் சொல்லிக் கொள்கிறதோ, அது போலத்தான் தமிழ் மக்களின் ஆணையை கூட்டமைப்பு பெற்றிருக்கிறது. எனவே, ஒப்புக்காக அழைத்துப் பேசி விட்டோ, அவர்களின் கருத்தை நிராகரித்து விட்டோ அரசியல்தீர்வு ஒன்றை ஏற்படுத்த முனைவது சாத்தியமற்றதாகவே அமையும்.


இந்தக் கட்டத்தில் அரசாங்கம் தீர்க்க தரிசனத்துடன் நடந்து கொள்ளத் தவறினாலோ, தமிழர் தரப்பின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை கருத்தில் எடுக்காத தீர்வு ஒன்றை திணிக்க முயன்றாலோ, அது இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானத்துக்கு வழி கோலுவதாக அமையாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக