திங்கள், 14 ஜூன், 2010

பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய இலங்கை அரசு!

சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இந்த விழாவைப் பயன்படுத்தி பெரியளவிலான பிரசாரத்தைத் தேடிக்கொள்ள முயன்ற இலங்கை அரசுக்கு தோல்விதான் மிஞ்சியுள்ளது. இந்தியத் திரைப்பட விருது விழா அரசியலாக்கப்பட்டு விட்டதாக ஒரு தரப்பினர் குறைபட்டுக் கொள்கின்றனர்.


இன்னொரு தரப்பினரோ அரசியலாக்கும் வகையில்தான் இது இலங்கைக்கு மாற்றப்பட்டதாகச் சொல்கின்றனர். எது எப்படியோ இந்தத் திரைப்பட விழா வைப்பயன்படுத்தி இலங்கை அரசு நிறைவேற்றுவதற்குப் போட்டிருந்த பல திட்டங்கள் தவிடு பொடியாகிவிட்டன என்பதே உண்மை. இந்த விழாவின் மூலம் இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாகவும், சுற்றுலாத் துறையின் சொர்க்கமாகவும் சர்வதேச அளவில் காண்பிப்பதே இலங்கை அரசின் பிரதான நோக்கம்.


சுற்றுலா அபிவிருத்தியை மையமாகக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பல்வேறு திட்டங்களும் இருந்தன. சர்வதேச அளவில் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என்று இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை இந்த விழா கொஞ்சமேனும் மறைத்து விடும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே இந்த விழாவை இங்கு நடத்துவதற்கு ஒற்றைக்காலில் நின்றது. இப்படியானதொரு விழாவை நடத்துவதற்கு பொருத்தமான தருணமாக இது இல்லாத போதும் இலங்கை அரசு இத்தகைய முயற்சியில் இறங்கியது.


போரினால் பொருளாதாரம் சீரழிந்து போய்க் கிடக்கின்ற நிலையில் உதவி கேட்டுப் பிறநாடுகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்ற நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்படாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை அரசுக்கு இப்படியொரு விழா தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.


ஆனாலும் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட்டு இந்த விழாவை நடத்தியது அரசாங்கம். இந்த நிதியை மக்களின் நலனுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது எதிர்க் கட்சிகளின் பொதுவான கருத்தாக உள்ளது.


கடந்த மூன்று வருடங்களாக குறைக்கப்பட்டு வந்திருக்கும் கல்விக்கான செலவினம், கடந்த வருடத்தைவிட பாதியாகக் குறைக்கப்பட்டு விட்ட புனர்வாழ்வு அமைச்சுக்கான ஒதுக்கீடு, சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுவிட்ட நிலைமை என்று அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைத்த அரசாங்கம் அந்தப் பணத்தையெல்லாம் கொண்டு போய் இந்த விழாவில் தான் கொட்டியது.


இந்த விழாவுக்கு சுமார் 1000 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ 1100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டதாகக் கூறியுள்ளார். இந்த விழாவுக்காக சுகததாஸ விளையாட்டரங்கைப் புதுப்பிப்பதற்கு மட்டும் 450 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் சொல்கிறது..


விருது வழங்கும் விழாவுக்காக மாற்றியமைக்கப்பட்ட இந்த மைதானத்தை விளையாட்டு மைதானமாகத் திருத்தியமைப்பதற்கும் மேலதிக நிதி தேவை. குறைந்தது 1000 மில்லியன் ரூபாவைச் செலவிட்டு நடத்தப்பட்ட இந்த விழாவின் மூலம் இலங்கை அரசு எதைச் சாதித்தது?


திட்டமிட்டபடி இந்திய சினிமா நட்சத்திரங்கள் வரவில்லை. விவேக் ஓபராய், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய்தத் போன்றவர்கள் தான் வந்தனர். ஹிந்தித் திரையுலகின் சுப்பர் ஹீரோக்களான அமிதாப், அபிஷேக், சாருக்கான், அமீர்கான் போன்றவர்களும் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே போன்ற முன்னணி நடிகைகளும் இந்த விழாவைப் புறக்கணித்து விட்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி இந்த விழாவில் இருந்து நழுவிக் கொண்டனர்.


அவர்கள் வெளிப்படையாக உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தாது போனாலும் பெரும்பாலானோர் விழாவுக்கு வராமைக்கான காரணம் ஒன்றுதான். அது தென்னிந்தியாவில் இருந்து கிளம்பிய எதிர்ப்புகள்தான். போர்க்குற்றங்களை மறைப்பதற்கு நடத்தப்படும் விழாவில் பங்கேற்கக்கூடாது என்று தென்னிந்தியாவில் இருந்து எழுந்த எதிர்ப்புத்தான் இவர்களைக் கட்டிப்போட்டது. அதற்கு முன்னதாகவே தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் இந்த விழாவுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.


பிரதான திரை நட்சத்திரங்கள் எவரும் வராது போனதால் இந்த விழா களையிழந்து, பொலிவிழந்து போனது. முன்னைய திரைப்பட விருது விழாக்களைப் போன்றில்லாமல் இது படுத்துப்போனது.


சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா 2000ஆம் ஆண்டு தொடக்கம் நடந்து வருகிறது. இந்தப் பத்தாண்டு வரலாற்றில் மிகவும் களையிழந்து போன விழா என்றால் இதுதான். அறிவிக்கப்பட்ட பல விருதுகளை வாங்குவதற்குக் கூட யாரும் வரவில்லை. இது இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசியதாக அமைந்துவிட்டது. இது யாரும் பூசிய கரி அல்ல - இலங்கை அரசாங்கம் தேடிப்போய் பூசிக்கொண்ட கரி தான்.


இது பொல்லைக் கொடு த்து அடிவாங்கிய கதையாகி விட்டது.


ஆனால், விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, அமைச்சர்கள் பலரும் இந்த விழாவினால் இலங்கைக்குப் பெரியளவிலான பிரசார வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறுகின்றனர். இலங்கை பற்றிய விளம்பரங்களை இலவசமாக உலகமெங்கும் ஒளிபரப்ப முடிந்ததாகவும் இதன்காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஒரு இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவரமுடியும் என்று எதிர் பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


எது எவ்வாறாயினும் இப்போதைக்கு இலங்கை அரசு செலவிட்ட இந்த நிதிக்கு பெரிதாக எந்த வருவாயும் கிடைக்கும் போலத் தெரியவில்லை. வடலி வளர்த்துக் கள்ளுக்குடிக்கின்ற செயலுக்கு இது ஒப்பானது. இந்த நிதியை எப்போது மீளப்பெறமுடியும் என்பது கேள்வியாக உள்ளது.


அழிந்து போன அடிப்படைக் கட்டுமானங்களை மீளக் கட்டமைக்க வேண்டிய பொறுப்புகள் இலங்கை அரசுக்கு நிறையவே இருக்கின்றபோது இந்த விழாவை நடத்தி பெருமளவில் பணத்தைச் செலவழித்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் நோக்கம் தான்.


தென்கொரியாவின் சியோல் நகருக்கே இந்த விழாவுக்கான வாய்ப்பு செல்லவிருந்தது. அதைத் தட்டிப் பறித்து இலங்கைக்குக் கொடுத்தது இந்திய அரசாங்கம் தான். இந்திய சினிமா நட்சத்திரங்களைக் கொண்டு வந்து விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவவேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்டிருந்தது இலங்கை அரசாங்கம். ஆனால், கடைசியில் எல்லாமே பிசு பிசுத்துப்போக வெறுத்துப்போன நிலையில் இருக்கிறது இலங்கை அரசு.


இதன் பிரதிபலிப்புகளை விழாவின் இறுதி நாள் நிகழ்வில் உணர முடிந்தது.


இந்த விடயத்தில் இலங்கை அரசை, இந்தியா கூட கைவிட்டு விட்டது. குறிப்பாக, அமிதாப்பச்சன், ராஜீவ்காந்திக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ஆனால் அவரைக் கூட இந்தியா அனுப்புவதற்கு முயற்சிக்கவில்லை என்பது தான் இலங்கையின் கவலை. மொத்தத்தில், இந்த விழாவின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தைக் கொடுத்து முகத்தில் கரியைப் பூசிக் கொண் டதுதான் மிச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக