புதன், 7 ஜூலை, 2010

இளைய சமுதாயமே!

உலகமெங்கும் வாழும் எம் தமிழ் இளையோர்களே... எம் இனத்திற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. எமது தேசியத் தலைவரின் நன்மதிப்பை பெற்றவர்கள் நீங்களே. எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கப்போகின்றவர்கள் நீங்களே. மாவீரர்களின் கனவுகளை நிஜமாக்கப்போகின்றவர்கள் நீங்களே.
இனி எதிர்காலம் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. புலம்பெயர்ந்த போராட்டங்கள் யாவிலும் உங்களது பெயர்களே பதியப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் உங்கள் செயல்டிவம் யாவும் காத்திரமாக பதியப்படும். எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கு காட்டிய வழிகள் அனைத்தையும் சிங்களவன் அடிமேல் அடியடித்து மூடினான்.


இரத்தம் சிந்த பயப்பட்டவர்களும் சுயநல மற்றும் சொந்த குடும்ப நலன்கொண்டவர்களும் கால காலமாக வாய்ப் போராட்டம் ஜனநாயகம் என்ற பெயரிலும் இவர்கள் செய்த போராட்டங்கள் அனைத்தும் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை என்கின்ற போது இலங்கை அரசு உலகநாடுகளையும் உலகநாடுகள் புலம்பெயர்ந்த மக்களையும் ஏமாற்ற இவர்களை அழைத்தே ஏமாற்று வித்தைகளை கால காலமாக எம்மை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். கொழும்பில் இன்று நடக்கும் அரசியல் நாடகங்களும் இவைகளையே காட்டிநிற்கின்றது. கொழும்பு மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகள் முழுவதும் இதே நிலைமைகள் தொடர்கின்றது. தானாக எழும் புரட்சிகளையே அடக்கி வைக்கவே முயல்கின்றனர் இவர்கள். உங்கள் இளையோர்களை முதலில் அடக்குங்கள் பிறகு உங்களோடு நாங்கள் பேசுகின்றோம் என்றவுடன் பெரும் எழுட்ச்சிகளை முடக்கி சில எம்.பிக்களுடன் கூடி கோப்பி குடிப்பதுடன் அல்லது மது குடிப்பதுடனும் நிறைவடைந்துபோகும் போச்சுவார்த்தைகள்.


எமது தேசியத் தலைவர், எமது மாவீரர்கள், விடுதலைப்புலிகள், அனைத்தையும் தவிர்த்துவிட்டு வாருங்கள் பேசலாம் என்றவுடன் ஆகா எங்களுடன் பேசினால் போதும் என போய் பேச்சுவார்தை மேசைகளில் அமர்ந்துகொள்கின்றார்கள் இவர்கள்.


அப்படியானால் எமது பிரதிநிதிகள் உலகநாடுகள் கூறுவதுபோல் இவர்களும் எம்மைத் தீவிரவாதி என்கிறார்களா? சரி அப்படி விட்டுவிட்டு வந்தால் மட்டும் தமிழீழத்தை பெற்றுத்தந்துவிடுவார்களா? அப்படி தருவார்கள் என உறுதி தந்தால் எமது தேசியத்தலைவரே தம்மை மறந்துவிடுங்கள் என்பார். பின்னிப்பினைந்திருக்கும் விடுதலைப்புலிகளையும் மக்களையும் பிரிக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு துணைபோவோர் தமிழ் மக்களால் என்றும் புறக்கணிக்கப்படுவார்கள். எமது தேசியத் தலைவரின் பெயர் எமது தேசியக் கொடி என எதையும் விட்டுக்கொடுக்காமல் எந்தப் பெரியவர்கள் போராட தயாரோ அவர்களுடனேயே இனி இளையோர்கள் வருவார்கள் என்பதைக் காட்ட வேண்டும்.


இளையோர்களின் பெரும் முயற்சிகள் யாவும் பலரால் பல வழிகளில் முடக்கப்படுகின்றன. எமது கோபங்களையும் நியாயங்களையும் இனி நாமே முன்னின்று நிறைவேற்ற வேண்டும். பெரியவர்களிடம் ஆலோசனைகளையும் ஆசியையும் பெற்றுக்கொள்வோம். எமது வீரியமான போராட்டங்களில் தங்களை மட்டுமே முன் நிறுத்தி தங்களின் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்துகொண்டார்களே ஒழிய ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப்பாட்டை அல்ல. அய்யோ நான் கொழும்பு செல்ல வேண்டும் எனது கட்சி என்னை தடைசெய்யப்பட்ட இயங்களுடன் செயற்படக்கூடாது என கூறியிருக்கின்றார்கள் என இவர்கள் கூறும் கூற்றுக்கள் முற்றிலும் சுயநலமுடையவையே.


ஆனால் மேடைகளில் இவர்கள் மாவீரர்களே என தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்து உயிர்நீத்தவர்களை போலியாக துதிபாடத் தயங்கியதில்லை. அப்படி மேடைகளிலும் சரி அதற்குத் தலைவர் இதற்குத் தலைவர் என கூறுவோர் எவராவது தேசியக்கொடியேந்தி வீதிகளில் நின்று போராடினதை பார்த்திருக்கின்றீர்களா? ஆனால் மாவீரர் என்ற சொல்லை மேடைகளில் மட்டும் பயன்படுத்துவார்கள். உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களை சந்தித்து மனுவொன்றைக்கொடுத்துவிட்டு இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றார்கள் என அறிக்கை விட்டவுடன் அதே இரவு பல இலட்சங்களை செலவிட்டு மதுபானங்களுடன் திரைப்படப்பாடல்களுடன் நடனமாடி குதூகல விருந்து என பெயரிட்டு ஏதோ இலங்கை அரசை நீதிமன்றில் நிறுத்தியது போல் பீற்றித்திரிவார்கள்.


இவைகள் மிக மேசமான வழிநடத்தலாகவே நாம் உணர்கின்றோம். போராட்ட ஒன்றுகூடல்கள் பேச்சுக்களின்போது வெளிநாட்டவர்களை மகிழ்விக்கின்றோம் என்கின்ற பெயரில் மதுக்கள் பாவிப்பதையும் குத்தாட்டம் போடுவதையும் தவிர்க்க வேண்டும் என இதனூடாக வேண்டுகோளும் விடுக்கின்றோம். இளையோர்களுக்கு சிறந்த முன்னுதாரணங்களை தந்துதவ வேண்டும். பாரம்பரியம் கலாச்சாரங்கள் இதன்முலம் பாதுகாக்கப்படல் வேண்டும். இளையோர்களாகிய நாம் அதில் மிகத் தெளிவாக இருத்தல் அவசியமாகின்றது.


17வயதில் வீரச்சாவடைந்த மாணவர் சிவகுமாரன் மரணத்தின்பின் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே சிவகுமாரன் இறந்த நாளை மாணவர் எழுச்சி நாளாக கடைபிடிக்கத் துவங்கியது அன்றும் புகழ்மிக்க அரசியல் தலைவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். இளையோர்களை தங்களுக்குப் பின்னால் அழைக்கும் எவரும் இளையோர்களை முன்னிறுத்த முன்வருவதுமில்லை. இளையோர்களை முன்னிறுத்தி ஆலோசனைகள் வழங்கி வழிநடத்த எவரும் தயாராக இல்லை. இனிவரும் காலங்கள் எமதே. இன்று வகுக்கப்படும் போராட்ட சிந்தனைகள் யாவும் எமது தலையிலேயே எதிர்காலத்தில் திணிக்கப்படும். ஆகவே நாம் இன்று தெளிவோடு சிந்திக்க வேண்டிய தருணங்கள் இது. எம்மவர்களாக இருந்தாலும் தவறுகளை தட்டிக்கேட்க நாம் இனி துணியவேண்டும். ஏனெனில் இவர்கள் விடும் தவறுகளால் எதிர்காலத்தில் அல்லற்படப்போவது இளையோர்களாகிய நாங்களே.


வீண் விவாதங்களுக்கு இடம் தராது எமது சிந்தனைகளில் மட்டும் தெளிவாக இருப்போம். எவன் கெட்டால் எமக்கென்ன என இருப்பவர்கள் சிந்தனையும் செயற்பாடும் விவாதமும் அப்படியே அமையும் ஏனெனில் அவர்கள் சரியானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களின் விவாதமும் அப்படியே அமையும். அவர்களுடன் போட்டி போட்டுக் கதைத்து எமக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இளையோர்களே... எமது தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரையில் கடைசி பந்தியில் இளையோர்களைப் பற்றியே குறிப்பிட்டு உரையை முடித்தார்.


ஆகவே எமது கரங்களில் நேரடியாக எமது தலைவர் ஒப்படைத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது எமது கடமையே ஆகவே மிகத் தெளிவாக சிந்தியுங்கள் வரலாற்றைப் படியுங்கள். உலக அரசியலைப் படியுங்கள் போராட்ட சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் ஊட்டுங்கள். எமக்கான வழிகளைத் தேடாமல் உருவாக்கும் பணியில் இறங்குவோம். எம் பின்னால் மக்கள் வருவார்கள் நேர்மையாளர்களின் பின்னாலும் சோதனைகளைத் தாண்டுபவர்களின் பின்னாலேயே மக்கள் எப்பொழுதும் வருவார்கள். நாம் மிகச்சரியான பாதையில் பயணிக்கும்போது எமது தேசியத்தலைவர் தம்மோடு எம்மையும் அணைத்துக்கொள்வார். களம் எமக்காகக் காத்திருக்கின்றது விரைவோம் தமிழரின் சுயம் காத்து தமிழீழம் பிறப்பெடுக்கச் செய்வோம் வாரீர்.


சு.பரமேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக