புதன், 7 ஜூலை, 2010

யுத்தத்தை வென்ற சண்டியன்களாகச் சர்வதேசத்துக்கு தம்மைக் காட்டிக் கொண்டு இருப்பதால்......!

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் தொடர்பில் இன்று மூன்று விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. தாமதமாகி வரும் மீள் குடியேற்றம், அவர்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளின்றி தொடரும் அவல வாழ்வு. இவை குறித்து இன்று உள்ளூர் மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்பத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தனர். காலப்போக்கில் அதிக எண்ணிக்கையிலானோர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால், இன்றும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். மீள்குடியேற்றம் இடம்பெறுகிறது என்பதற்காக நாளாந்தம் சில குடும்பங்களைக் குடியேற்றிக் கொண்டு மீள்குடியமர்வு இடம்பெறுவதாக அரசு தெரிவித்து வருகிறது.


கடந்த காலங்களில் விரைவுபடுத்தப்பட்ட இந்த மீள்குடியேற்றமானது இன்று மந்தகதியில் இடம்பெறுவதற்கான காரணம் என்ன? அரசாங்கம் ஏதோ ஒரு தேவைக்காகவே இந்த மக்களை இவ்வாறு தொடர்ந்தும் அகதிமுகாம்களில் வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காலத்துக் காலம் காலக்கெடுவை விதிக்கிறார்கள். ஆனால், ஜனாதிபதியோ இன்னும் ஆறுமாதங்கள் செல்லுமெனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.


ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வடமாகாணத்தில் அரசாங்கம் அடைந்த தோல்வியின் காரணங்கள் அறியப்பட்டு, விரைவில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசாங்கம் மீள்குடியேற்றத்தைத் தாமதப் படுத்துகிறதோ என்ற ஐயம் நிலவத்தான் செய்கிறது.


அகதி முகாம்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசு தரப்பு வேட்பாளர்களுக்கே வாக்களித்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அது ஏன் எவ்வாறு என்ற கேள்விக்கான தேடலின் பதில் என்னவென்பதும் தெரியும். ஆனால், மீள்குடியேற்றப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர் என்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.


இந்த விடயத்தை அரசு ஆராய்ந்தே தற்போது அகதிமுகாம்களிலுள்ள மக்களின் மீள்குடியேற்றப் பணியைத் தாமதப்படுத்தி வருகின்றதோ என்பதே அந்த ஐயமாகும். சுமார் ஐம்பதினாயிரம் பேர்தான் இன்னும் அகதிமுகாம்களில் உள்ளனரென்று அரசு கூறினாலும் வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் அவர்களின் வாக்கு என்பது பலம் பொருந்தியதொன்றாகவே கருத வேண்டும்.


இதேவேளை, தொடர்ந்தும் அகதிமுகாம்களில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையென்பது இன்று கற்றரையில் கைபோட்டு நீந்தும் கதையாகவே உள்ளது.


இதேபோன்றே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகளும். அள்ளிக் கொண்டு சென்று அவர்களின் பூமியில் கொட்டிவிடப்பட்ட மக்கள் இன்று அந்தரித்து நிற்கின்றனர். அது தருகிறோம் இது தருகிறோம் என்றெல்லாம் கூறியே அவர்களை அரசு மீள்குடியேற்றியது. ஆனால், அரசாங்கம் எதனையுமே செய்யவில்லை என்பதனை அரச தரப்பினரே ஒப்புக்கொள்கின்றனர்.


அனைத்தையும் வழங்குவது நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இந்தியாவும் உலக உணவு ஸ்தாபனமே. கைச்செலவை மட்டும் கொடுப்பது மட்டுமே அரசின் பாரிய பணியாகக் கருதப்பட்டு பெரிதாகப் பிரசாரப்படுத்தப் படுகிறது.


இவைகளுக்கு மேலாக இன்று புதுப்பிரச்சினையொன்றும் தோன்றியுள்ளது. வன்னி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஏமாற்றமே அது. பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கும் மீள்குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குமிடையில் காணப்படும் பாரிய வித்தியாசமானது பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.


யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிகளவில் நிதியும் அதே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வுக்கு குறைந்தளவு நிதியும் ஒதுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. நியாயத்தின் அடிப்படையில் எழுந்துள்ள இந்தக் கேள்விகள் கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனும் இந்த விடயம் தொடர்பில் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.


மீள்குடியேற்றத்துக்காக இந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியானது தமிழ் மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையீனத்தை வளர்ப்பதாகவும் இடம்பெயர்ந்து அல்லல்படும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லையென்று காட்டுவதாகவும் இவர்கள் தெரிவித்திருந்தனர். இதுதான் உண்மை நிலையும்.


இதே அதிருப்திதான் இன்று சர்வதேசத்திலும் நிலவுகிறது. இலங்கையுடன் இன்று தர்க்கம் புரியும் நாடுகள் கூட இந்த விடங்களைப் பாரதூரமானதாகவே கருதுகின்றன. இவை தொடர்பில் சில நாடுகள் வெளிப்படையாகவே கருத்துகளைத் தெரிவிக்கும்போது, “இது உள்நாட்டு விடயம். வெளியார் மூக்கை நுழைக்கத் தேவையில்லை’ என்பதே அரசின் பொறுப்பற்ற பதிலாக உள்ளது. ஆனால், அதே சர்வதேசத்தின் உதவியைப் பெற்று ஏதோ அதிலொரு பங்கை அகதிகளுக்குக் கொடுத்தே இந்த அரசு வாழ்கிறதென்பதனையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தால் தான் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இனி கூரைத்தகடு என்ற நிலை இன்று உருவாகியுள்ளது.


தமிழ் அகதிகள் என்போர் இந்த நாட்டின் வந்தான் வரத்தான்கள் அல்லர். ஆனால், அவர்கள் அரசினால் நடத்தப்படும் விதம், நோக்கப்படும் திசை ஆகியவற்றை அவதானிக்கும்போது அரசின் பார்வை அவ்வாறாகத்தான் தெரிகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


யுத்தம் முடிந்த கையுடன் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள், நம்பிக்கைகள் அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டுள்ளன. அவர்களது எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது அனுபவிக்காத கஷ்டங்களைத் தாம் இன்று அனுபவிப்பதாக அந்த மக்கள் உணர்ந்து வெளிப்படையாகவும் தெரிவிக்கத் துணிந்துவிட்டனர்.


யுத்தத்துக்கான காரணங்களையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நன்குணர்ந்துள்ள அரசாங்கம் இன்று அதற்கான பரிகாரங்களைத் தேடாமல் அப்பாவித் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் இவ்வாறு நடத்துவது மிகவும் வேதனைக்குரியது.


யுத்தத்தை வென்ற சண்டியன்களாகச் சர்வதேசத்துக்கு தம்மைக் காட்டிக் கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. அரசின் அழைப்பை ஏற்று ஓடிவந்த பல இலட்சக்கணக்கான மக்களை ஒரு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் நோக்கும் விதம் மனவேதனையை அளிக்கிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் தமிழ் மக்களின் மனதை வெல்லவில்லையென்றே கூறமுடியும். தமிழ் மக்களின் அபிலாஷைகள் கூட இன்று வன்னியில் புதைக்கப்படுகின்றன என்றே கூறலாம்.


ஆகவே, தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் தனது பரா முகப் போக்கையும் மாற்றான் தாய் மனப்பான்மையையும் கைவிட வேண்டும். வீறாப்பு வசனங்களைக் கைவிட்டு மனித நேயத்துடன் மக்களின் பிரச்சினைகள் நோக்கப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும். அந்த மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய விளைவுகள் பாரதூரமாக அமையலாம்.
யானை தன் தலையிலேயே மண்ணை வாப்போட்ட கதையாகவே அரசாங் கத்தை அதன் செயற்பாடுகளே சென்றடையும் என்பது மட்டும் நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக