செவ்வாய், 27 ஜூலை, 2010

மீள்குடியேற்றமின்றி அவஸ்தை படும் கிழக்கு மக்கள் ..!

மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசமான தோணிதாண்டமடு எனும் எல்லைக் கிராம (மட்டக்களப்பு பொலநறுவை எல்லையில் உள்ள கிராமம்) மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து கதிரவெளி எனும் இடத்தில் இன்னும் வசித்து வருகிறார்கள்
கிழக்கு மாகாணம் அரச கட்டுப்பாட்டின் கீழ்
வந்துவிட்டதாக அரசு அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படாமல் இருப்பது வேதனை அளிக்கின்ற விடயமாக இருக்கின்றது எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு பொன் செல்வராசா அவர்கள் கூறினார்.


இன்று மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்கான (கோறளைபற்று வடக்கு) பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் வாகரைப் பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலமையில் இடம்பெற்றது இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யொகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


மேற்படி பிரதேசத்தில் நடைபெற்ற இக்கூட்டம் பற்றி கருத்துக் கேட்டபோதே திரு பொன் செல்வராசா அவர்கள் மேலுள்ளவாறு கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது
மேற்படி மீள் குடியேற்றப்படாத மக்கள் உடனடியாக தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அங்கு கலந்துகொண்ட முதலமைச்சர் மற்றும் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் மாவட்ட இராணுவ அதிகாரி ஆகியோர் அனுமதி அளித்து எதிர்வரும் 29ந் திகதி அனைவரும் தங்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


மேற்கூறப்பட்ட இந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பல தடவைகள் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற சென்றபோது சில பெயர் குறிப்பிட முடியாத குழுக்களால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக