செவ்வாய், 27 ஜூலை, 2010

கம்போடியா சிறை அதிகாரிக்கு மனித உரிமை மீறியதால் வருட சிறைத்தண்டனை ...

கம்போடியாவில் 1975 – 1979 காலப்பகுதியில் அரசுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் கொலைக்களங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 20 லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பான
போர்க்குற்ற விசாரணையில் அந்நாட்டின் அப்போதைய சிறை அதிகாரிக்கு ஐ.நா. நிபுணர்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட போர்க்குற்றவியல் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.


இதேவேளை, அந்நாட்டில் அக்காலப்பகுதியில் இடம்பெற்ற மனித பேரவலத்துக்கு காரணமான – தற்போது சிறையிலுள்ள – நான்கு தலைவர்களுக்கு எதிரான விசாரணைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கம்போடிய சிறை அதிகாரி, சிறையில் சுமார் 15 ஆயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பட்டினியால் சாவதற்கு காரணமாகியிருந்தார் என்றும் அப்போதைய அரச படைகளால் சிறைக்கு கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சி ஆதரவு மக்கள் பலர் சிறையிலிருந்து வெளிப்புறமாக கொண்டுசெல்லப்பட்டு திறந்தவெளி ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கும் துணைபோயிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டிருந்தார்.


இவருக்கு அதிக பட்சம் 35 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என்று சட்டத்தரணிகளால் கோரப்பட்டிருந்தபோதும் ஏற்கனவே பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 11 வருட சிறைவாசத்தை அனுபவித்த காரணத்தினால் தீர்ப்பு 30 வருடங்களாக குறைக்கப்பட்டது.


67 வயதுடைய முன்னாள் கணித ஆசிரியராகிய டச் எனப்படும் இந்த சிறை அதிகாரிக்கு தீர்ப்பு வழங்கிய போர்க்குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழுவினால் அமைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக