வியாழன், 1 ஜூலை, 2010

இலங்கைக்கான வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என அமெரிக்காவின் தொழிலாளர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், இலங்கைக்கான வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.


இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக, அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொள்வதென இலங்கையின் அமெரிக்க தூதரகம் தீர்மானித்துள்ளது.


இலங்கை உட்பட்ட நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்காக சுமார் 3400 உற்பத்திகளுக்காக அமெரிக்கா, வரிச்சலுகையை வழங்கி வருகிறது. இதில், இயந்திரங்கள், விவசாயப் பொருட்கள், நகைகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன.


இதன் காரணமாக இலங்கை 2009 ஆம் ஆண்டு மாத்திரம் 116 மில்லியன் டொலர்கள் பெறுமதியான நன்மைகளை பெற்றுள்ளது.


இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த வரிச்சலுகையை பெற்றுக்கொள்வற்காக, நாடு ஒன்று பல்வேறு அம்சங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.


சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகள் இருக்கவேண்டும், சிறுவர்களுக்கான வேலைசெய்யும் குறைந்த வயது வரையறுக்கப்படவேண்டும். சிறுவர் தொழிலாளர்கள் தடுக்கப்படவேண்டும், மற்றும் குறைந்தளவு சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பன அமெரிக்காவின் இந்த சலுகைக்கான அம்சங்களில் அடங்குகின்றன.


இந்தநிலையில் இதில் இலங்கையில் குறித்த சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி அமெரிக்காவின் தொழிலாளர் சம்மேளனம், குற்றம் சுமத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது.


இதனையடுத்து அதனை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் அதற்கேற்ப இலங்கைக்கான வரிச்சலுகையை மீளமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக