வியாழன், 1 ஜூலை, 2010

நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.......பசில்

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள், கொடுப்பனவுகள் வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக வெட்டப்படவில்லை என்பதுடன் நாட்டின் இறைமைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் நிபந்தனைக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீள் குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்ல கருத்துகளை கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை கட்சி அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்படும் போது மேற்கொள்கின்ற நடவடிக்கை போன்று வடக்கில் மேற்கொள்ள முடியாது. ஓர் அங்குலத்திற்கு அங்குலம் கண்ணிவெடிகள் இருக்கின்றன. அவற்றை அகற்ற வேண்டும். அதுமட்டுமன்றி பெரும் போகத்தில் அந்த மக்களையும் இணைத்துக் கொள்வோம். அம்மக்களை தொடர்ந்து கையேந்தும் நிலையில் வைத்திருக்க முடியாது என்பதுடன் அதற்கான வேலைத் திட்டங்களையே அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது.

1980 இல் உலக வங்கியில் இருந்து 60 மில்லியன் கடன் பெறுவதற்கு பல நிபந்தனைகளுக்கு அன்றைய அரசு கட்டுப்பட்டது. அதன் ஒரு நடவடிக்கையாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி இந்தக் கடனை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்டது. இதேபோல்தான் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தது. ஆனாலும் எம்மைப் பொறுத்தவரையில் உலக வங்கியோ, ஆசிய அபிவிருத்தி வங்கியோ அல்லது சர்வதேச நாணய நிதியமாகவோ இருக்கலாம். அவற்றில் நாம் அங்கத்துவம் பெற்றிருப்பதால் 2.6 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு கடன் பெற்றுக் கொள்வதற்காக நாம் இந்நாட்டு மக்களின் எந்தவிதமான நிவாரணத்தையும் வெட்டி விடப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட சில சர்வதேச நாடுகள் எம்மீது நிபந்தனைகளை விதிப்பதற்கு முயற்சிக்கின்ற போதிலும் எமது அரசாங்கம் எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் அடிபணியப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக் கொள்கிறோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி எமது எல்லா நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றது. மக்களுக்காக குரல் எழுப்புவதாகக் கூறுகின்றது. ஆனாலும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த செல்வாக்கினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பெற்றிருக்கின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மக்கள் செல்வாக்கு எங்குள்ளது? யாருக்கிருக்கின்றது என்பதை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டில் இன ஒற்றுமை, தேசிய ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இங்கு பிரதேசவாதங்கள், இனப் பாகுபாடுகள் காட்டப்படக் கூடாது. அவ்வாறான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தினதும் எமது ஜனாதிபதியினதும் நோக்கமாக இருக்கின்றது.

1996 இல் 23 வீதமாக இருந்த வறுமை நிலை 2006 ஆகும் போது 12.5 வீதமாக குறைக்கப்பட்டது. 2006 இல் சமுர்த்தி பெறுனர்களின் தொகை 18 இலட்சமாக இருந்தது. அது 2009 ஆகும் போது 14 இலட்சமாக குறைவடைந்துள்ளது. அதேபோல் வேலையற்றோரின் நிலை 5 வீதமாக குறைவடைந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கமைய இவ்வருட இறுதிக்குள் பண வீக்கத்தை மிகவும் குறைந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். விவசாய உற்பத்தியாளர் உச்ச அளவிலான பயனைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத் திட்டங்களையும் வழிவகைகளையும் எமது அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்குவிப்புகள் எமது அரசிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.


பால்மா விலை, கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து பேசப்படுகின்றது. ஆனாலும் எமது நாட்டு மக்கள் மூன்று வேளையும் தமது உணவாக சோறினை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருவதுடன் இந்நாட்டுக் குழந்தைகள் எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலையும் தாய்ப்பாலையும் மாத்திரமே உட்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் 36 ஆயிரம் கிராமங்கள் உள்ள 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்தக் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கென கிராமம் ஒன்றுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை ஜனாதிபதி ஒதுக்கியிருப்பது பாரிய விடயமாகும்.

மீள்குடியேற்றம் குறித்து பேசுவதென்றால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களைப் போன்றே ஒரு சிலரது கருத்துக்கள் அமைந்துள்ளன. வடக்கு / கிழக்கில் இருந்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதை நாம் வேகமாக மேற்கொண்டோம். மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த 40 ஆயிரம் பேரை வெறும் நான்கு நாட்களில் குடியமர்த்தினோம். இது உலக சாதனையாகும். வடக்கின் மீள்குடியேற்றம் என்பது உலகிலேயே மிகவும் சிறந்ததாகும். அந்த மக்களின் அனைத்து நிலைமைகளையும் ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் நாம் அவர்களை மீள் குடியேற்றுவதில் வெற்றி கண்டுள்ளோம்.

அங்கு குளங்கள் தரைமட்டமாகியிருந்தன. கண்ணிவெடிகள் பாரிய அளவில் புதைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் உரிய முறையில் கையாள வேண்டிய தேவை எமக்கு இருந்தது. மீள்குடியேற்றம் என்பது இலகுவானதல்ல. அந்த மக்களில் பலர் புலிகளின் பயிற்சிகளைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கான புனர்வாழ்வு, பாடசாலை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார வசதிகள் மற்றும் அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கும் அடுத்தவரிடம் கையேந்தா நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்பட இணங்கியிருப்பது சிறந்ததாகும். அதேபோல் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா இணங்கியிருப்பது குறித்தும் நாம் அந்நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக