புதன், 14 ஜூலை, 2010

சூடான் அதிபர் மீது இனப் படுகொலை குற்றச்சாட்டு பதிவு?

சூடான் நாட்டில் டாபர் பகுதியில் பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், ஆட்சியில் உள்ள அரேபிய அரசு அவர்களது போராட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக கொடூரமான முறையில் அடக்கி வருகிறது.



கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பர், மசாலித், ஷகாவா ஆகிய இன மக்களை ராணுவம் கொன்று குவித்தது. இதையடுத்து அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.


இதையடுத்து ஜன்ஜாவீட் என்ற அரசு ஆதரவு தீவிரவாதப் படை பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பொது மக்களை கொல்வது, பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்துவது, வீடுகளுக்குத் தீ வைப்பது, உணவுப் பண்டங்களை கொள்ளையடித்துச் சென்று மக்களை பட்டினி போட்டுக் கொல்வது போன்ற செயல்களில் இந்தப் படை ஈடுபட்டு வருகிறது. இந்த தீவிரவாதப் படைக்கு அரசும் ராணுமும் முழு அளவில் உதவி வருகின்றன


இதையடுத்து அதிபர் ஒமர் அல்- பஷீர் மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்ற வழக்கு த் தொடரப்பட்டது.


ஆனால், அதையடுத்து நடந்த தேர்தலில் முறைகேடுகள் மூலமும், இனப் பிரிவினை மூலமும் மீண்டும் வென்று அதிபரானார் பஷீர்.


இந் நிலையில் இனப்படுகொலை வழக்கை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், அதிபர் ஒமர் அல்- பஷீரை கைது செய்ய கடந்த ஆண்டு வாரண்ட் பிறப்பித்தார்.


மனிதாபிமானத்துக்கு எதிராக இனப் படுகொலைகள் செய்ததாக அதிபர் மீது குற்றம்சாட்டப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதை எதிர்த்து அதிபர் ஒமர் அல்-பஷீரின் சார்பில் அவரது வழக்கறிஞர் 4 மாதங்களுக்கு முன் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அதை விசாரித்த நீதிபதிகள், அதிபர் ஒமர் அல்-பஷீரின் மனுவை நிராகரித்ததோடு, அவர் மீது இனப் படுகொலை தொடர்பாக 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொத்து கொத்தாக கொன்று குவித்தது, அதன் மூலம் அப்பகுதி மக்களை உளவியல்ரீதியாக அச்சத்தி்ல் ஆழ்த்தியது, உரிமைக்கு போராடுவோர் மீது அடக்குமுறையை பயன்படுத்தியது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதனால் அவரை மற்ற நாடுகள் கைது செய்யலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாட்டை விட்டு வெளியே செல்வதையே பல ஆண்டுகளாக நிறுத்திக் கொண்டுவிட்டார் பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக