செவ்வாய், 13 ஜூலை, 2010

கைது செய்வதற்கு முன் சீமான் பத்திரிக்கை நிருபர்களுக்கு அழித்த பேட்டியில்- படை திரட்டி இலங்கை செல்ல தயார்; அனுமதிக்கத் தயாரா?:

தமிழர்களை காக்க படை திரட்டி இலங்கை செல்ல தாங்கள் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கு பகடியம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி அதனை தடுத்து நிறுத்தாமல் இருக்க தயாரா என்றும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார்.

தமிழக மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையினரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்
அதற்கு முன்னதாக அவர் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு.


இலங்கையில் ஈழத்தமிழரை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்தது போதாதென்று இந்தியாவிலும் தமிழினத்தை அதாவது நம் மீனவர்களை இனப்படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்?


இராஜபக்சே இவர்களுக்கு அண்ணனா, தம்பியா? மாமனா, மைத்துனரா? தமிழின விரோதியைத் திட்டினால் தமிழினக் காவலருக்கு கோபம் வருவதேன்? தமிழர்களின் உயிரென்றால் உங்களுக்கு துச்சமா?அல்லது இராஜபக்சே அரசுக்கு நீங்கள் என்ன அங்கமா?


ஈழத்தமிழரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 6வது திருத்தச் சட்டம் என அடக்குமுறைச் சட்டங்களைக் காட்டி மிரட்டுவதைப் போல், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்!


ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா?


அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது! அவையெல்லாம் எதற்கு? ராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசுவதற்கா?


சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், தன்னைத் தமிழன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு தமிழக முதலமைச்சர், 'சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?' என்றும் 'கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?' என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?.


செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது.


பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது.இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா?


தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக