செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள்

இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.


வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மிகத் தீவிரமாக நடைபெறப் போகின்றன. ஏற்கனவே சிறியளவில் தொடங்கி விட்ட சிங்களக் குடியேற்றங்கள் வரும் நாட்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கப் போவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. முல்லைத்தீவின் தெற்குப் பகுதியில் மணலாறுப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இப்போது நாயாறு வரை விரிவு பெறப் போகின்றன. வவுனியா வடக்கிலும் அதே கதி தான். இதைவிட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் படையினரின் குடும்பங்களைக் குடியமர்த்தப் போவதாக அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே படையினரின் குடும்பங்களையும் குடியமர்த்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவையொன்றும் ஊகமோ அல்லது மிகைப்படுத்திய செய்தியோ அல்ல. எல்லாமே அரசதரப்பின் வாயிருந்து வந்தவை தான். சுமார் நான்கு இலட்சம் சிங்களவர்கள் வன்னியில் குடியேற்றப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கென வன்னியில் பல இடங்களில் தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலும் அதற்குச் சொந்தமான நிலமும் கூட விட்டு வைக்கப்படாது போலுள்ளது. அந்தளவுக்கு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் பெருகி வருகின்றன.

தமிழ் மக்களைப் பெரிதும் அச்சுறுத்துமம் வகையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் அடிப்படை நோக்கம் தமிழர்களை வடக்கில் சிறுபான்மையினராக்குவதே. புலிகள் மீள் எழுச்சி பெற விடாமல் தடுப்பது- பாதுகாப்பை பலப்படுத்துவது என்று பல்வேறு நியாயங்களை அரசாங்கமும் படைத்தரப்பும் கூறிக் கொண்டாலும் அவையெல்லாம் வெறும் சப்பை நியாயங்கள் தான் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக மாற்றப்படும் அவலத்தைத் தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்தவாரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் பேசும்போது, 159,000 சிங்களவர்கள் வடக்கில் இருந்த புலிகளால் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களையே மீளக்குடியேற்றுவதாகவும் கூறியிருக்கிறார். இதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் பேசிய போது- 1983ம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து 21,000 சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறியிருந்தார். முன்னர் வடக்கில் சிங்களவர்கள் பெருமளவில் வசித்தது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கவே அவர் முயற்சிக்கிறார். அவர் அவ்வப்போது இவ்வாறு தவறான புள்ளிவிபரங்களைக் கூறி சிங்கள மக்களை உசுப்பி விடுவதுடன் தமிழ் மக்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கிறார்.

போரின் முடிவுக்குப் பிறகு அரசாங்கம் நன்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறது. வன்னியில் இப்போது புதிது புதிதாக முளைக்கின்ற புத்த கோவில்களும், சிலைகளும், தமிழ்கிராமங்களுக்கு சூட்டப்படும் சிங்களப் பெயர்களும் தமிழர்களைப் பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. வடக்கில் கூட தமிழர்களால் தனித்துவத்தோடு வாழ முடியாத நிலை ஒன்று விரைவில் உருவாக்கப்பட்டு விடும் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைத்து- தமிழர்களை சிங்களவர்களின் மீது தங்கி வாழ்பவர்களாக மாற்றியமைப்பதற்கே இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக