புதன், 1 செப்டம்பர், 2010

கப்டன் மயூரன்

1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.

காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவனும் முக்கியமானவன். போராளிகளிற்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தான். அதற்காகவே தோழர்கள் இவனைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருக்கும். கையினால் அவனாற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளிற்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தான்.
அம்மா, அப்பா, அண்ணாக்கள், அக்காக்கள், தங்கை... என்ற பெரும் உறவுகளுடன் உறவாடி வாழ்ந்த இனிய வாழ்க்கையின் நினைவுகள் அவனுக்குள் எப்பவும் ஒளிந்து கிடந்தன! இதனால் எப்போவாவது கிடைக்கும் அருமையான தனிமையில்.. பிரிவுத் துயரில் தோய்ந்து தொலைந்து போயிருக்கிறான். அது தலைவருக்கும் தெரிந்ததால் அவனை அவ்வப்போது உறவுகளைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்திருக்கிறார்.
கப்டன் மயூரன் பங்கு பற்றிய முக்கிய தாக்குதல்கள்
* இதயபூமி
* ஆகாய கடல் வழிச்சமர்
* ஆனையிறவுச்சமர்.
* மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர். (1991)
* பூநகரி 2வது சமர்.
* பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர்(1993 கார்த்திகை)
அவனின் இறுதிச் சமரான இந்தச் சமருக்கு அவன் செல்ல விரும்பிய போது "இப்போ அவசரப்பட வேண்டாம்" என்று தலைவரால் அறிவுறுத்தப் பட்டதும், "இல்லை நான் போகப்போகிறேன்" என்று பிடிவாதமாக விருப்பப்பட்டு அவன் சென்றதும் நெஞ்சில் பதியும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.பூநகரித் தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த மாபெரும் முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று காற்றும் தீயும் கலந்த கானக வெளியில் மூச்சும் வாழ்வும் நம் மண்ணிற்கே என்று கரைந்து போன உத்தமர்களில் மயூரனும் கலந்து மாவீரன் ஆனான்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக