புதன், 1 செப்டம்பர், 2010

இராணுவ நிர்வாகத்தின் கீழ் வன்னி.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியைப் படையினர் கைப்பற்றிய பின்னர், அங்கு பல மாற்றங்களைச் செய்வதில்; அரசாங்கமும் படைத்தரப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விடுதலைப் புலகளின் ; எச்சங்கள், அடையாளங்கள் என்று எதுவுமே இல்லாத வகையில் துடைத்தழிப்பு நடவடிக்கைகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன.


புலிகளின் மாவீரர் நினைவுத்தூபிகள், துயிலும் இல்லங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டும், பெயர்க்கப்பட்டும் துப்புரவாக்கப்பட்டன. அத்தகைய துயிலும் இல்லங்கள் பலவற்றில் இப்போது படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வன்னிப் பெருநிலப்பரப்பு ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற வரலாற்று அடையாளமே இருந்து விடாதபடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இங்கு இப்படியொரு ஆட்சி நடந்தது என்று யாரும்; புதைபொருளாய்வில் கூடக் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதே இதன் அடிப்படை.

அடுத்த கட்டமாகப் படையினரின் வெற்றியை நினைவு கூரும் நினைவுத்தூபிகள் நிறுவப்படுவதும், ஆங்காங்கே நினைவுச் சின்னங்கள், பௌத்த ஆலயங்கள், அமைப்பதும் நடந்தேற ஆரம்பித்தன. இந்த நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த வாரத்தில் கூட முல்லைத்தீவில்; பெரியதொரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவில் இருந்த படைத்தளத்தை புலிகள் ஓயாத அலைகள்-01 நடவடிக்கையின் மூலம் 1996ம் ஆண்டு முற்றாக அழித்திருந்தனர்.

இராணுவத்தின் 5வது பிரிகேட் தலைமையகமாக இருந்த முல்லைத்தீவுப் படைத்தளத்தில் 6வது விஜயபா படைப்பிரிவும், 9வது சிங்கப் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தன. புலிகளின் தாக்குதலில் இந்த இரு பற்றாலியன்களும் ஏறக்குறைய முற்றாகவே அழிந்து போயின.இந்தத் தளத்தில் இருந்த 44 அதிகாரிகளும் 1119 படையினரும் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக 14 வருடங்களுக்குப் பிறகு கடந்த 18ம் திகதி முல்லைத்தீவுப் படைத்தளத்தில் ஒரு பாரிய நினைவுத்தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் பணிப்பின்பேரில் இந்த நினைவுத்தூபியில்- கொல்லப்பட்ட 1163 படையினரதும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வன்னியில் புலிகள் முன்னர் எப்படி தமது மாவீர்களின் பெயர்கள் தாங்கிய தூபிகள், நினைவுச்சின்னங்களை அமைத்தார்களே அதுபோல இப்போது படைத்தரப்பு செய்து வருகிறது. ஏற்கனவே, வன்னியில் இதுபோன்ற பல நினைவுத்தூபிகள், வெற்றிச்சின்னங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. நந்திக்கடலுக்கு வடக்கே பச்சைப்புல்மோட்டையில் முதலாவது நினைவுத்தூபி திறக்கப்பட்ட பின்னர் ஆனையிறவு, கிளிநொச்சி, பூநகரிப் பகுதிகளில் பிரமாண்டமான வெற்றிச்சின்னங்கள் திறக்கப்பட்டன.

முல்லைத்தீவு, ஆனையிறவு, கிளிநொச்சியில் இருந்த படைத்தளங்கள் முன்னர் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. இதன்போது படையினர் பாரிய உயிரழிவுகளைச் சந்தித்திருந்தனர். இவை பிரதான நினைவுச் சின்னங்களாக இருக்கின்ற அதேவேளை, வன்னியின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற நினைவுச்சின்னங்களும், புத்தர் சிலைகளும் முளைக்கத் தொடங்கியுள்ளன. பல இடங்களுக்குச் செல்வதற்கு படையினர் அனுமதிக்காததால் இவை பற்றிய விபரங்கள் முழுமையாக வெளிவரவில்லை. அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பெரிய பண்டிவிரிச்சானில் புத்தர்சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது இப்போது தான் வெளியே தெரிய வந்துள்ளது. அங்கிருந்த மாவீரர் துயிலும்; இல்லத்தை அழித்த படையினர் அங்கு ஹெலிகொப்டர் இறங்கும் தளம் ஒன்றை நிறுவியுள்ளனர். இதுபோன்ற பல விடயங்கள் இப்பேது தான் வெளிச்சத்தக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் வடக்கில்- குறிப்பாக வன்னியில் புதிதாக நிரந்தரப் படைத்தளங்களை நிறுவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வடக்கில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகவே நிரந்தரப் படைத்தளங்களை அமைப்பதாக அரசாங்கம் சொல்கிறது. நீண்டகால இராணுவ நோக்கில் இந்தத் தளங்களை அமைத்து படையினரை நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இரு கட்டங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலாவது- நிரந்தரப் படைத்தளங்களின் நிர்மாண வேலைகள். இரண்டாவது- அந்தப் படைத்தளங்களுக்கு அண்மையாகவே இராணுவக் குடியிருப்புகளை அமைப்பது. இவையிரண்டும் இப்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள். வன்னியில் தனியார் மற்றும் அரசாங்கக் கட்டடங்களில் இருந்து படையினர் வெளியேறுவார்கள் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இப்போது அரசாங்கம், வசதியான- கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் இருந்து படையினர் வெளியேறமாட்டார்கள் என்று கூறுகிறது. அதேவேளை, படையினர் தனியார், அரச கட்டடங்களில் இருந்து வெளியேறி புதிய இடங்களில் நிரந்தரத் தளங்கள் அமைத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூறியிருக்கிறார். இதன்படி கடந்த 22ம் திகதி புதுக்குடியிருப்புக்கு அருகேயுள்ள சுதந்திரபுரத்தில் புதியதொரு டிவிசன் தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தரப் படைத்தளமாகவே அமைக்கப்பட்பட்டுள்ளது.

சீனக் கட்டத் தொழில்நுட்பத்துடன் இந்த நிரந்தரப் படைத் தலைமையகக் கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனாவே நன்கொடையாக வழங்கியுள்ளது. சுதந்திரபுரத்தில் புதிய நிரந்தரத் தலைமையகத்தை அமைத்துள்ள 68வது டிவிசன் இறுதிப்போரின் போது புதுக்குடியிருப்புப் பிரதேசம் மற்றும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கடும் சமர்களை நடத்தியிருந்தது. சுதந்திரபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் படைத் தலைமையகம் சீனத் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட முதலாவது தளமாகும். அதேவேளை, ஏற்கனவே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் நிரந்தரப் பிராந்தியப் படைத் தலைமையகங்களை இராணுவம் அமைத்துள்ளது.

பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் வன்னியில் மேலும் பல நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கப்படும் என்று மன்னார் வெள்ளாங்குளத்தில் 61வது டிவிசன் தலைமையகத்தில் படையினர் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கூறியிருந்தார். அதன்படி வன்னியில் நிரந்தரப் படைத்தளங்கள் அமைக்கும் முயற்சிகள் வேகமாக நடந்தேறி வருகின்றன. அதேவேளை இந்த நிரந்தரப் படைத்தளங்களோடு இணைந்ததாக அல்லது அவற்றுக்கு அருகே படையினரின் குடும்பங்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை சுதந்திரபுரம் படைத் தலைமையக திறப்புவிழாவில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். படையினரும் இராணுவ அதிகாரிகளும் தமது குடும்பங்களுக்கு அருகிலேயே வசிப்பதற்கு ஏற்றவகையில் இராணுவக் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருவதாக அவர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் இராணுவ நிர்வாகத்தின் கீழ் வன்னி நீண்டகாலத்துக்கு இருக்கப் போகிறது என்பதற்கான அடையாளங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக