வியாழன், 2 செப்டம்பர், 2010

நாங்கள் அடிமை இல்லை? ஆண்ட பூமி இது? பூர்வகுடி நாங்கள்? இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லாதது? தனி ஈழம் ஒன்று மட்டுமே சாத்யமானது என்று ஒவ்வொரு பூவும் கோர்த்து உருவான மாலை இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிதைந்தாக காட்சியளிக்கிறது!

கோர்த்து வைத்திருந்த கைகள் சில சோரம் போய்விட்டது. சில புதிராக இருக்கிறது. சில வினாக்குறியாய் இருக்கிறது,............உலகில் இன்று வரையிலும் நாம் எத்தனையோ விடுதலைப் போராட்டங்களையும், குழுக்களையும் நாம் பார்த்து கேட்டு படித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் வளர்ச்சி என்பது முறைப்படியான நாடுகளைக்கூட திடுக்கிட வைத்தன என்றால் அது முற்றிலும் உண்மை.



அசுர வளர்ச்சி என்பதை விட அச்சப்படுத்தும் வளர்ச்சி என்பது தான் முற்றிலும் உண்மை. பிரபாகரன் ஆளுமை ஒரு பக்கம். மக்களின் ஒத்துழைப்பு மறுபக்கம், உள்ளே இயக்கத்தில் இருந்தவர்களை ஒருங்கிணைப்பு என்பதற்கு மேலான "மொத்த அர்பணிப்பு" என்ற நிலைமையில் கடைசி வரைக்கும் வைத்திருந்தது என்று ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம்.


தமிழன் என்பவனுக்கு உண்டான இயல்பான தனிப்பட்ட குணாதிசியங்கள் இல்லாத இளையர் பட்டாளங்களை ஆண் பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் இந்த " உயிர் இனி உங்களிடம்" என்று ஒப்படைத்த ஒவ்வொரு விடுதலைப்புலி வீரர்களின், ஆதரவுக்கரம் ஒவ்வொரு கால கட்டத்திலும் நீண்ட போதெல்லாம் தலைவனுக்குரிய " தன்னுடைய நலம்" என்பதை கருத்தில் கொள்ளலாமல், வாழ்வில் தன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட தேவையில்லை என்பதாக வாழ்ந்த பிரபாகரன் வாழ்க்கை முழுமையும் உணர்ந்தவர் எத்தனை பேர்கள்?


மன்னர்கள் வாழ்ந்த போது தங்களுடைய பதவியை, ஆட்சியை, ஆளுமையை நிலைநாட்ட அவர்களுடைய வீரம் ஒன்றே போதுமானதாக இருந்தது. படையெடுத்துச் சென்று வென்றுவிட்டால் வென்றவர் மாமன்னர்.


போர் என்பதை வெறுத்து எவரோ ஒருவருக்கு அடிமையாய் இருந்து ஒழுங்காக கப்பம் கட்டி ஒழுக்கமற்ற மாமா மன்னர்களுக்கு அவர்களுடைய உல்லாச வாழ்க்கையே போதுமானதாக இருந்தது.


காலங்கள் பல பாடங்களை கற்றுக்கொடுத்தாலும் படையெடுப்பாளர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதை சுகமாக கருதியவர்கள் எவ்வாறு தன்னை, தன் மக்களை, தங்களுடைய சக்தியை உணர்ந்து இருக்க முடியும்?
எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் மன்னர்கள் பெற்ற போர் வெற்றிகள் என்பது இன்று கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. அதற்குச் சமமாக பிரபாகரன் ஆளுமையும், ஆனால் அத்தனை தமிழ் மன்னர்களின் எச்சமும் சொச்சமாக இன்று அங்கங்கே சில ஆலயங்கள் மட்டுமே நமக்கு காட்சியாய் இருக்கிறது. முழுமையான ஆவணங்கள் இல்லை. புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இடைச் செருகல் என்பதைப் போலவே இன்றும் இலங்கைப் பிரச்சனையும், பிரபாகரன் குறித்த செய்திகளும்?


ஒழுக்கம் என்பதே புதிராகப் போன உலகில் ஓழுக்கத்தை மட்டும் முன்னிறுத்திக் கண்டவன் வாழ்க்கை ஓங்காரமாய் முடிந்தது ஏன்? கடையாணி கழட்டப்பட்ட கட்டை வண்டி பயணத்தில் ஏறி எந்த ஊர் சென்று அடைய முடியும்?


கோவணம் உடுத்துவதே அரசியலில் அசிங்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலக தலைவர்களின் அலங்கோல வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் உலக அரங்கில் தமிழனை உள்வாங்க வைத்தவரின் வாழ்க்கை இன்று உலகமெங்கம் விவாதமாகி வீணர்கள் வாயில் மெல்லும் அவலாகி விட்டது.


ஒற்றுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத ஒரே இனமான தமிழனத்தில், மொத்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு தமிழர்களை தன் இரும்புக் கரங்களுக்குள் வைத்திருந்த பிரபாகரன் இறுதிவரைக்கும் எடுத்த கொள்கையில் தோற்கவில்லை. ஆனால் சூழ்நிலை?


நெருக்கடியான சூழ்நிலைகள் பல சமயம் மனித மனதை பாறையாக மாற்றி விடும். ஆனால் அந்த பாறையில் கூட விதை முளைத்து வரும் என்பதற்கு பிரபாகரன் தவிர தற்போதைய உலகில் வேறு உதாரணம் இருப்பதாக தெரியவில்லை. எதிர்ப்பை மீறி வெளிச்சத்தை பார்த்த மரங்களின் வேர்கள் என்பது அசைக்க முடியாத எதிர்ப்புச் சக்தியை உள்ளே பாதுகாத்தாலும் கூட இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த பாகாசுர குண்டுகளால் பஸ்மாக்கி விட்டதே?


ஏன் இப்படி முடிந்ததாக காட்டப்படுகிறது என்பதை விட எதனால் இது நிகழ்ந்தது என்பதை யோசிப்பது தான் விவேகம். கொள்கைகள் தவறென்றால் உலகமெங்கும் வாழும் அத்தனை இலங்கை தமிழர்களும் தனிஈழம் தான் இறுதி தீர்வு என்று என்று ஓட்டெடுப்பு மூலம் வாக்களிக்க மாட்டார்களே?


அவர்களிடம் பிரபாகரன் குறித்த அச்சம் இல்லை. வேறு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. வாக்களித்த அத்தனை பேர்களும் சுயசிந்தனைகளினால் தன்னை உரசிப் பார்த்து உள் மனம் சொன்னதை உலகிற்கு உரைத்தவர்கள். அப்படி என்றால் வெகுஜனம் விரும்பிய தனி ஈழம் தான் இனி ஒரே தீர்வு என்ற பிரபாகரன் கொள்கை சரிதானே?


வாங்கிய கப்பல்கள், ஓடிக்கொண்டுருக்கும் கப்பல்கள், காமதேனுவான நிதி ஆதாரங்கள் அத்தனைக்கும் இனி யார் பொறுப்பு? வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நிலைமை கிண்டலுக்கும், அச்சத்திற்கும் இடையே நின்று பல அணிகளாக பிரிந்து இனி எழுமா? என்பதில் வந்து நிற்கிறது.


கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் கூட களவாணிகளின் கையில் சிக்கியதைப் போலவே பராரி பாகிஸ்தானிடம் விற்று தங்களுடைய வங்கிக் கணக்கில் விற்று ஏப்பம் விட்டவர்கள் அவர்கள் விரும்பும் சிங்கள மக்களுக்கு நல்வாழ்வு தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உங்களுக்கு இருக்கிறதா?


ஈழவர் வாழ்வுரிமை போராட்டம் இன்று எளிதான திரைப்பட விமர்சனத்தைப் போல நல்லோர், தீயோர் பார்வை பட்டு பஸ்மாக அணைந்த நெருப்பு போல் காட்சியளிக்கின்றது.


அமெரிக்கா விரும்பும் திருகோணமலை தளம், சீனா விரும்பும் தனக்கான எளிதான நடை மேடை, பாகிஸ்தான் மனதில் நிணைக்கும் " எதிர்கால அழிவுக்கு இப்போதே இந்த எங்களின் பங்களிப்பு" என்று ஒவ்வொன்றும் சேர்ந்து சேர்ந்து விடுதலைப்புலிகளை விட இந்தியாவை இனி வரும் எதிர்கால ஒவ்வொரு தினப் பொழுதுகளையும் ஆயாசப் பெருமூச்சு விட வைத்துக்கொண்டுருக்கிறது.


ஆங்கிலேயர்களை விரட்ட திரட்டப்பட்ட போராட்டங்களை விட இனி இந்தியாவின் பாதுகாப்புக்கென்று கொட்டப்போகும் இராணுவ நிதி ஆதாரம் ஒவ்வொரு பைசாவும் இங்குள்ள சமான்ய மக்களுக்கு வாழ்ந்து கொண்டுருப்பதை விட அதிகபட்ச சங்கட வாழ்க்கையை பரிசாக தரப்போகின்றது?


இன்று வரையிலும் பிரபாகரன் மேல் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் வைக்கும் மொத்தமான குற்றச்சாட்டு சகோதர இயக்கங்களை அழித்து ரத்தவெறி பிடித்தவர் என்பது. இந்திய ரா என்று உள்ளே நுழைந்ததோ குளறுபடிகளை உருவாக்க தொடங்கியதோ அப்போது ஆரம்பித்தது தான் இந்த நிலமெல்லாம் ரத்தம்,


உண்மையான உரிமைகள் சரியான முறையில் வழங்கப்படாத வரையில், உள்ளே அணைக்கவே முடியாத வெடித்துக் கிளம்ப தயாராய் இருக்கும் கங்கு ஜுவாலையைக் குறித்து இங்கு யாருக்கும் அக்கறையில்லை.


அடித்து நொறுக்கிவிட்டோம் என்று மார் தட்டி மண்னை வணங்கி முத்தமிட்டவர்கள் கூட இன்னமும் இராணுவ படைபலத்தை அதிகப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். அவசர அவசரமான அறிக்கைகள், சேர்த்த சொத்துக்களை கடத்துதல் என்று தோற்றவர்களின் வலியை விட தங்களின் எதிர்கால வழியை நிணைத்து அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் தூக்கமில்லா இரவுகள் யாருக்குப் புரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக