வியாழன், 2 டிசம்பர், 2010

தமிழ் அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை!!!

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அதே நேரம், தமிழர் தரப்பிலும் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை...
 இன்றைய நிலையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமாகில், அதனால் தமிழரே அதிகமாக பாதிக்கப்படுவர் என்று அஞ்சுகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் தெட்டத் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது." - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS




இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அமெரிக்க அரசுக்கு அனுப்பிய கேபிள் தகவல்களின் சுருக்கம்:
அரசுத் தலைவர்கள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரணைக்கு எடுக்கத் தயங்குவதன் காரணம். இலங்கை அரசுப் படைகள் புரிந்த போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகள், இந்த அரசு பதவியில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. போர்க்குற்ற விசாரணையை, போரில் வெற்றியீட்டிய வீர நாயகர்களுக்கு எதிரான சர்வதேச சதியாகவே, இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கையின் இராணுவ, அரச அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களும், எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். கனிஷ்ட தரத்திலான ஆயிரக்கணக்கான புலிகள் அரச படைகளினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு, அரசு இவர்களையும் கொண்டு வந்து நிறுத்துமா என்பது குறித்த தெளிவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்புக்கு பின்னர், "குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு" ஒன்றை இலங்கை அரசு நியமித்தது.


வேறுபட்ட காரணங்களுக்காக, இலங்கையில் வாழும் தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அமெரிக்க தூதுவர் உரையாடிய தமிழ் அரசியல் தலைவர்கள், அதனை நீண்ட கால நடவடிக்கையாக பின்போட விரும்பினார்கள். இது சம்பந்தமாக அதிக அழுத்தம் கொடுப்பது, தமிழர்களையே பாதிக்கும் என்றனர். ஜனாதிபதி வேட்பாளராக நின்ற (முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.) சிவாஜிலிங்கம் மட்டுமே இது குறித்து பகிரங்கமாக பேசிய தலைவர் ஆவார். தமிழர் பிரச்சினையை அரசோ, அல்லது எதிர்க்கட்சிகளோ கவனிப்பதில்லை என்று சாடினார். சிவாஜிலிங்கம், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் தனித்தனியான பிரதமர்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பு தீர்வைக் கோரினார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனான உரையாடலில், புலம்பெயர்ந்த தமிழரும், சர்வதேச சமூகமும் இந்தப் பிரச்சினையை முன்னெடுப்பதை வரவேற்றார். ஆனால், அவர் கூட, விசாரணையால் தமிழர்களுக்கே பாதிப்பு என்றார். பின் விளைவுகளுக்கு அஞ்சிய சம்பந்தர், பிரச்சினையை பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அரசு தானாகவே விசாரணையை நடத்தாது, என்ற யதார்த்தத்தை சம்பந்தர் புரிந்து கொண்டாலும், உண்மை என்றோ ஒரு நாள் வெளிவருவது தேச நலனுக்கு உகந்தது என்றார்.


மேல் மாகாண தமிழ் அரசியல் தலைவர் மனோ கணேசன், ராஜபக்சவுக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதை முக்கியமாக கருதினார். TNA MP பத்மினி சிவசிதம்பரம், "உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கு இது ஏற்ற தருணமல்ல." என்றார். தமிழ் அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழரின் பூர்வீக பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்தை தடுப்பதிலும் அக்கறையாக இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக