ஞாயிறு, 9 ஜனவரி, 2011

40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?

மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த எனது கணவர்,40 முக்கிய போராளிகளுடன் 18.05.2009 அன்று  முல்லைத்தீவில் பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.  இதுவரை அவர் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனது கணவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தகவல் தாருங்கள்.இவ்வாறு  இளம்தாயான ஆர்.வெரோனியா கற்றுக் கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். "
மன்னார் மாவட்டப் புலிகளின் சிறப்புத் தளபதியாக 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமையாற்றிய "யான்" என்ற இயக்கப் பெயரைக்கொண்ட அந்தோனிப்பிள்ளை ராயப்புவின் மனைவியான ஆர்.வெரோனியா சாட்சியமளிக்கும்போது  தொடர்ந்து கூறியவை வருமாறு:
எனது கணவர் 1993ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாகப்  பணிபுரிந்தார்.  2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாங்கள் குடும்பத்துடன் முல்லைத்தீவுக்கு இடம்பெயர்ந்தோம்.இராணுவத்தினர் அப்போது முல்லைத்தீவுப் பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்களைச் சரணடையும்படியும், சரணடைபவர்கள் முறையாக கவனிக்கப்படுவார்கள், புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்றும்  ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தனர்.2009 மே மாதம் 18ஆம் திகதி எனது கணவர் அந்தோனிப்பிள்ளைராயப்பு   உட்பட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 40 பேர் முல்லைத்தீவு பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப்புடன் சென்று இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதிகுமரன், ஈழவன், ரூபன், பாபு, வேலவன் ஆகியோரும் சரணடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.அவர்கள் எமது கண்ணெதிரே பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் நாங்களும் பிறிதொரு பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டோம். ஒமந்தைக்குக் கொண்டுச்செல்லப்பட்ட நாங்கள் அங்கு இறக்கப்பட்டோம்.  ஆனால், எனது கணவர் உட்பட ஏனைய போராளிகள்  அங்கு அழைத்து வரப்படவில்லை. அன்று முதல் இன்று வரை  எனது கணவர் எங்கு இருக்கின்றார்,  எந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் உயிருடன் இருக்கின்றாரா,  இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இந்த  ஆணைக்குழு அவர் எங்கு இருக்கின்றார் என்பதை அறியத்தரவேண்டும். எனக்கு இரு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். மூவரும் பாடசாலை செல்லும் வயதினர். இவ்வாறு அந்த இளம் தாய் அழுது புலம்பியவாறு நல்லிணக்க ஆணைக்குழு முன் வேண்டுகோள்விடுத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக