சனி, 1 ஜனவரி, 2011

வன்னி மக்களைச் சொல்லி சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியா உதவி!!!!

வன்னிமக்களுக்கு எனத் தெரிவித்து வடக்கில் சிங்களக்குடியேற்றங்களுக்கு உதவிபுரியும் நடவடிக்கையில் இந்தியா செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இந்திய அரசினால் அனுப்பப்பட்ட உழவியந்திரங்களில் 200 கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென ஐநூறு மில்லியன் ரூபாய்கள் பெறுமியான 360 உழவியந்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வவுனியா ஓமந்தை விவசாயப் பண்ணையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் போது முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு தலா 60 உழவியந்திரங்களும் வவுனியா மாவட்டத்திற்கு 40 உழவியந்திரங்களும் மட்டுமே வழங்கப்பட்டன.
ஏனைய 200 உழவியந்திரங்களும் கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகிவற்றுக்கு வழங்கவென ஒதுக்கப்பட்டுள்ளதாக உழவியந்திரங்கள் கையளிப்பு நிகழ்வின் போது பேசப்பட்டதாக தகவல்கள்  வெளிவந்துள்ளன.மன்னார் மாவட்டத்தின் கொண்டச்சி என்ற பகுதியில் 700 ஏக்கர் நிலப்பரப்பில் கஜூ உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நடவடிக்கையில் ஊர்காவற்படையினர் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைக் கிராமத்தில் கோக்கணற் பண்ணை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அண்மையில் ஈடுபட்டிருந்தமை தெரிந்ததே.இவற்றின் அடிப்படையில் இரண்டு பண்ணைகளுக்கும் உழவியந்திரங்கள் வழங்கப்படுகின்ற போதிலும் இவை இரண்டிற்கும் 200 உழவியந்திரங்கள் தேவையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள வன்னி மக்கள் குறித்த பண்ணைகளினை அண்மித்த பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற சிங்கள மக்களுக்கான அன்பளிப்பாக இந்தியா வழங்கியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நெடுங்கேணி விவசாயி பொன்னம்பலம் தில்லைநாதன், குறித்த உழவியந்திரங்கள் உரிய வகையில் அனைத்து மக்களுக்கும் சென்றுசேர்கின்றதா என்பதை இந்திய அரசு அவதானித்திருக்க வேண்டும்.
பகிரங்கமாக சிங்களவர்களின் தேவைகளுக்காக உழவியந்திரங்கள் வழங்கப்படுவது போன்ற இவ்வாறான நடவடிக்கைகளை தட்டிக்கேட்காது விட்டால் இந்திய அரசு சிங்களவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாகவே கருதவேண்டியுள்ளது என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக