ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!

கனவு பற்றி அதிகமாக ஆய்வு செய்தவர் ‘சிக்மண்ட் பிராய்ட்’ என்ற உளவியலாளர். கனவு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் முதன்மை பெற்றுள்ள போதிலும் கனவு குறித்த பல கதைகள் ஏற்கெனவே நம்மிடம் உண்டு.திரிசடை கண்ட கனவு சீதையின் விடயத்தில் சரியாகிப் போனது. எனவே கனவுகள் அத்தனையும் நனவிலி மனத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கு அப்பால் எதிர்கால நிகழ்வுகளும் கனவுகளாகக் காட்சி தரும் என்பதை அடியோடு மறுத்துவிட முடியாது. அந்த வகையில் நேற்று இரவு ஆழ்ந்த நித்திரையில் ஒரு கனவு கண்டேன். அது வித்தியாசமான கனவு.மிகப்பெரியதொரு பறவைக் கூட்டம் போட்டி போட்டு பறந்து வருகிறது. பறவைகளில் கறுப்புப் பறவைகள் ஏராளம். பறக்க முடியாத பறவைகளும் தாராளம். குஞ்சுப் பறவைகள் முதல் முதிய பறவைகள் வரை தமது சிறகுகளை விரித்து அடித்துப் பறந்து வரும் வேகத்தைக் கண்ட போது, ஏதோ வைத்த பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை பறந்து வருவதாக உணர முடிந்தது.
வ\ழமையாகப் பறவைகளுக்கு இரண்டு கால்கள் மட்டுமே. ஆனால் நம் கனவில் தோன் றிய பறவைகளுக்கு இரண்டு கைகளும் இருந்தன.
கூட்டம் கூட்டமாக வருகின்ற பறவைகளை உற்றுப் பார்த்தேன். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தாலும் அந்தப் பறவைக் கூட்டத்திற்கு ஒரு தலைமைப் பறவை இருப்பதை என்னால் உணர முடிந்தது.இருந்தும் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைக் கொத்துவதிலும், திட்டுவதிலும் கடுமையாக ஈடுபட்டிருந்தன. தமிழ் மொழியிலேயே அந்தப் பறவைகள் திட்டித் தீர்ப்பதால் அவை தமிழ்ப் பறவைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற எனது முடிபில் தவறில்லை.
வானத்தில் பறந்து வந்த பறவைகள் திடீரெனத் தரையில் இறங்கிக் கொண்டன. இறங்கும் போதே கூப்பிய கரத்துடன் அவை இறங்கிய தைக் கண்டேன். ஆ! எவ்வளவு பண்புடைமை. என் ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. தரையிறங்கிய பறவைகளில் சில அவசர அவசரமாக மேடை போட்டன; கதிரை அடுக்கின. அந்தக் கதிரைகளில் சிலர் வந்து அமர்ந்து கொண்டனர். ஒலி வாங்கிகள் பொருத்தப்பட, அவற்றுக்கு முன் வந்து நின்ற பறவைகள் ஆக்ரோஷமாகப் பேசின. மேடையிலும் சில பறவைகள் குந்தியிருந்தன. பேச்சுக்களின் இடையிடையே கைதட்டல்.
சில பறவைகளோ காகிதாதிகளை மதிற் சுவர்களில் ஒட்டிக் கொண்டன. இன்னும் சில பறவைகள் அறிக்கை எழுதின. சில பறவைகள் வீடு வீடாகச் சென்று அங்கிருப்பவர்களை வணங்கி மந்திரமோதின. என்னதான் நடக்கிறது? ஒரே குழப்பம். திடீரென சில பறவைகள் சத்தமிட்டவாறு சண்டையிட்டன. பறவைகளின் சண்டையால் பயந்த நான் கத்திக் கொண்டே, கட்டிலால் விழுந்தேன். அட! கண்ட கனவே கட்டிலால் விழுத்தியதெனில், இதற்குள் ஏதோ அர்த்தம் உண்டெனக் கருதி விடிபொழுதில் சென்று எனக்குத் தெரிந்த ஒரு சோதிடரிடம் கனவைத் தெரிவித்து, இதன் பொருள் யாதோ என்று கேட்டேன்.
அதற்கு அவர் விரைவில் தேர்தல் வரப்போவதையும் அதில் வேட்பாளர்கள் பலர் குதிக்கப் போவதையுமே கனவு குறிப்பதாகத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியபோதுதான் அந்தப் பறவைகளை முன்பும் ஒரு தடவை கண்ட ஞாபகம் எனக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக