வெள்ளி, 19 மார்ச், 2010

இலங்கை போரில் 2,15,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உலக சுகாதார நிறுவனம்

1983ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது 2,15,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனதின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடையில் இப்போரினால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகளும் இலங்கை படையினரால் இப்போர்க் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையதளம் ஒன்றில் ஜேம்ஸ் நைஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2008ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கையின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 20,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைவிட இப்போரினால் 30,000 தமிழ் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இப்போரின் இறுதிக் காலப்பகுதியில் 2,50,000க்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரித்தெடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இம்முகாம்களில் காணப்பட்ட சுகாதார வசதியின்மை, மருத்து வசதியின்மை போன்ற காரணங்களாலும், தொற்று நோய்களாலும் 2009ஆம் ஆண்டு ஜீலை மாதக் கணக்கீட்டின்படி கிழமைக்கு 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் பிரித்தானிய அரசு 13.7 மில்லியன் பவுன்டுகளை இலங்கை படைத்துறைக்கு நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார். 1956, 1958, 1977, 1981 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளே தமிழ் மக்களை இலங்கை அரசுக்கு எதிராக ஆயதமேந்தி தீவிரமாகப் போராட வைத்ததாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக