வெள்ளி, 19 மார்ச், 2010

மகிந்தாவின் பிறவி குணம் ......

ஆழ குழி தோண்டி போட்டு மறைத்தாலும் அதிலிருந்து ஒருநாள் உண்மை வெளிவரும். உண்மையை மறைக்க முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு என்றால் நான்குதான். இதில் கூட்டியோ குறைத்தோ சொல்வதற்கு இதுவரையில் புதிய கண்டுபிடிப்போ, அறிவியல் ஆதாரங்களோ இல்லாத நிலையே நீடிக்கிறது. ஆகவே, உண்மை என்பதும், நான்கு என்ற அடிப்படையிலே தான் இருக்குமே தவிர, அது மூன்றாகவோ, ஐந்தாகவோ மாற முடியாது. சில முட்டாள்கள் அப்படி மாற்றுவதற்காக பெரும் முயற்சி எடுக்கிறார்கள். பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அடுக்கடுக்காய் பொய்களை அவிழ்த்துவிடும் இலங்கை அரசு, அதன் தலைமை இறுதியாக தம்மிடம் இந்த ஆயுதங்கள்தான் இருக்கிறது. அது கனரக ஆயுதங்களைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது, பொய்யாயுதம். அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்துமுடிக்க இலங்கை அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கைக்கு நேரிடை நின்று அதன் அநியாயங்களை தட்டிக்கேட்க, சரியாக தலைமைக் குழு இல்லாத காரணத்தினால் தமக்கு தெரிந்த வகையில் மட்டும்தான், அல்லது தாம் விரும்புபவை மட்டும்தான் உண்மை என்று உலகையே நம்ப செய்ய பல்வேறு முயற்சிகளை, பலவாறு செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு சான்றுதான் பொட்டு அம்மான் குறித்த செய்தி. இறந்தவரின் உடல் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் அது கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆகவே, இறந்தாரா, இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும் என்று காத்திருக்கலாம். ஆனால் மகிந்தாவின் அரசு அப்படி இல்லாமல் உலக காவல்துறையினருக்கு பொட்டு அம்மான் இறந்து விட்டதாக செய்தி தருகிறது. உலக காவல்துறையினருக்கு அவர் உயிருடன் இருப்பதாக உண்மை தெரிகிறது. ஆகவே அந்த உண்மையை மறைக்க, அவரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இலங்கை அகில உலக போலீசை கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையான ஒன்றை அல்லது தெரியாத ஒன்றை ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுத்து மறைக்க முயற்சிக்க வேண்டும் என்கிற அடிப்படை வாதம்கூட இலங்கையிலுள்ள சிங்கள பாசிச வெறியர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்றால், அவர்களுக்குள் புதைந்துள்ள முட்டாள் தனமும், ஆதிக்க வெறியும்தான் என்பதை மறுத்துறைக்க முடியாது.ஒரு இனத்தின் இறையாண்மையை, தனித்தன்மையை வேரோடு அழிக்க முனைப்புக் காட்டிய சிங்கள அரசு, தமது நட்பு நாடாக தேர்வு செய்தது இந்தியாவை. இன்று இந்தியா, இலங்கையில் தொடர் வண்டிக்கான பணி திட்டங்களை மிக செம்மையாக நிறைவேற்றி வருவதாக செய்திகள் சொல்கிறது. இதை மகிந்தாவே ஒப்புக் கொள்கிறார். ஆனால் இலங்கை எமக்கு ரயில் திட்டத்திற்கான பாதையை அமைத்துத் தருகிறது என்பதற்காக நாம் எந்த நிலையிலும் இந்தியாவிற்கு அடிமை இல்லை என்பதை மிகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையை ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அது இந்தியாவோ இலங்கையோ எதுவானாலும் சரி என்பதற்கு அழுத்தம் தருகிறார். ஒரு உண்மையை அவர் அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறார், நாம் வேறொரு நாட்டிலிருந்து இனி ஆயுதம் கொள்முதல் செய்வதில்லை. காரணம், போதிய ஆயுதங்கள் தம்மிடம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அது. ஆக, தேவைக்கு அதிகமாக ஒரு நாட்டின், அந்த நாட்டு மக்களின் குருதி வடித்த பணத்திலே ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம் என்கிற எல்லையை தாண்டி ஒரு மாபெரும் மனிதநேயமற்ற ஆட்சியை அங்கே மகிந்தா நிறுவி இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அப்படி அடக்குமுறையான ஒரு ஆட்சி அங்கே நீடித்திருக்கிற காரணத்தினால்தான், அதன் வெளித்தோற்றம் மட்டுமல்ல, உள்ளடக்கமும் மிகவும் கமுக்கமாகவே செயல்படுவதை காணமுடிந்தது. மகிந்தா எந்த அளவிற்கு தமது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்றால், இந்த ஆட்சி கட்டிடம் கவிழாமல் இருக்க யாரையும் கவிழ்க்க அவர் தயாராக இருக்கிறார். யாரையும் கொல்ல அவர் எப்போதும் தயார் நிலையில்தான் இருக்கிறார். தம்மை எதிர்ப்பவர்கள் இருக்கக்கூடாது என்கிற ஆதிக்க மனப்போக்கிலே தான் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்பதற்கான, அடுக்கடுக்கான காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகமுடியும். ஆனால் குறிப்பான ஒரு காரணம் மகிந்தா, சரத்தை சிறையில் அடைத்தது. சிறையில் அடைத்ததோடு அவர் பொது நீதிமன்றத்திலே வழக்கு நடத்தி, விடுவிப்போ, தண்டனையோ கொடுத்திருக்கலாம். ஆணவத்தின் உச்சமாக அவர் சொல்கிறார், ”சரத்பொன்சேக-வை நான் மன்னிக்க மாட்டேன்” என்று. ஆக, சிங்கள நாட்டிலே சட்டத்திற்கோ, ஆட்சி அமைப்பிற்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். சிங்கப்பூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், ”சரத்தை முட்டாள் என்று கடுமையாக வர்ணித்திருக்கிறார். அவர் படிப்படியாக சொல்லும்போது, சரத் 2009 நவம்பர் 16ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் இதோ, இந்த இடத்திலேதான் எனது வலதுப்பக்கம் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பலமுறை கேட்டேன், தேர்தலில் போட்டியிட விருப்பமா? என. அவர் இல்லையென மறுத்துவிட்டார். நான் நினைத்திருந்தால் அவரை பணியிலிருந்து விடுவிக்காமல், அவர் தேர்தலின் பக்கமே வராமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் கடைசிவரை என்னை ஏமாற்றினார். ஆகவே இனி நான் அவரை மன்னிக்க மாட்டேன்” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். மேலும், மகிந்தா கூறும்போது, ”அரசியல் வேறு, ராணுவம் வேறு என்று நான் சரத்திற்கு அறிவுரை கூறினேன். அரசியலில் எதுவும் நடக்கும். நாம் நினைத்தது நடக்காது என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று மேலும் தம்முடைய எண்ண குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவிட ஒரு கேவலம், இந்த நாட்டின் இறையாண்மை, இந்த நாட்டு மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளையெல்லாம் கடந்து, மகிந்தா சொல்கிறார், இந்த ராணுவ சட்டங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிசால் ஏற்படுத்தியவை. இதுவரை அச்சட்டங்கள்தான் நடைமுறைப்படுத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது என்பதை கூறுவதின்மூலம் அவர் ஒரு மறுகாலனியின் அடிமை என்பதை தமது ஒப்புதலாக வழங்கியிருக்கிறார். இந்தியாவிலும், ரௌவ்ளட் போன்ற மிக கடுமையான அடக்குமுறை சட்டங்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது தமது நாட்டின்மீது திணிக்கப்பட்டது. அதே அடக்குமுறை சட்டங்கள்தான் இன்று வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, சொந்த மக்களை அடக்குமுறை தன்மைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிய மக்கள் திரள் ஒருநாள் எழுந்து நிற்கும். இதை எத்தனை பெரிய ஆற்றல் வாய்ந்த, கடுமையான அடக்குமுறையாளர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவானாலும், இலங்கையானாலும் இதுதான் உண்மை. காரணம், அடக்குமுறையாளர்கள் வெற்றிப்பெற்றதாக இதுவரை வரலாறு இல்லை. இனி ஒருபோதும் அப்படிப்பட்ட வரலாறு வரப்போவதும் இல்லை. வரலாற்று நாயகர்கள் எல்லாம் அடிமை மக்களின் அணியில்தான் அணிவகுத்து இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அடக்குமுறையாளர்களின் பக்கத்தில் நின்றது கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் தமிழீழம் விழித்தெழும். அது மிக அருகாமையில்தான் இருக்கிறது. அதேபோன்று, சிங்கள பாசிச வெறியும் துடைத்தெறியப்படும். சிங்கள மக்களே அணித்திரண்டு அதை உடைத்தெறிவார்கள். அதற்கான கட்டமைப்பைத்தான் மகிந்தா அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் தமது ஆதிக்கத்தின்கீழ் வரவேண்டும் என்பதற்காக அடக்குமுறையாளன் இட்லர் ஜெர்மானிய மக்களை இனிவெறியூட்டி, படைப்படையாய் அணிவகுக்கச் செய்தான். ஆனால் அவனை வீழ்த்த செஞ்சேனை வீறுகொண்டெழுந்தது. எப்படி அடக்குமுறையாளன் இட்லர் ஐரோப்பிய ஒன்றியத்தையே அழித்தொழிக்க முனைந்துபோய், தாம் அழிந்துபோனானோ, அதேபோன்று தமிழீழ அரசின் தமிழர் படையும் ஒருநாள் உயிரோட்டோத்துடன் அடக்க முடியா ஆற்றலோடு மீண்டும் சமர் புரிய வரும். அந்நேரத்திலே இட்லருக்கு நிகழ்ந்த அதே நிகழ்வு மகிந்தாவுக்கு ஏற்படலாம். நாம் செய்தி சொல்கின்ற இந்தநேரத்தில், பாவம் சரத்திற்கு ஒரு கதையும் சொல்லியிருக்கிறோம். ஒரு நாட்டில் யானையும், நரியும் நண்பர்களாக இருந்தது. காட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நரி சொன்னது, பக்கத்து ஊரில் நல்ல வளமான கரும்புத் தோட்டம் இருக்கிறது. கரும்புதான் உங்களுக்குப் பிடிக்குமே? வாருங்கள். நாம் சேர்ந்தே போய் சாப்பிடுவோம் என்று. யானையும் நரியின் பேச்சைக் கேட்டு காட்டைக் கடக்க முயன்றது. வழியில் ஓர் பெரிய நீரோடை. நரியைப் பார்த்து யானை சொன்னது, இந்த நீரோடையை நான் கடந்து விடுவேன். உன்னால் கடக்க முடியுமா? என்று. நரி சொன்னது, நான் உன் முதுகின்மீது ஏறி அமர்ந்து கொள்கிறேன். நீ ஓடையை கடந்தவுடன் இறங்கி கொள்கிறேன் என்று கூறியபடி யானையின் மீது நரி அமர்ந்துகொண்டது. யானையும் ஓடையை கடந்தது. ஓடையை கடந்துபோய், கரும்பு தோட்டத்திலே உள்ள கரும்பை முடிந்தவரை யானையும் சுவைத்தது. நரியும் கூடி கும்மாளம் போட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நரி மிக வேகமாக ஊளையிடத் தொடங்கியது. யானைக்கு ஒன்றும் புரியவில்லை. நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் ஒன்றுகூடி, கையில் கிடைத்த கல், கம்புகளைக் கொண்டு எறிந்தார்கள். ஊருக்குள் நரி வந்துவிட்டதே என்று. நரி தந்திரமாக ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. யானை பாவம். பருத்த உருவம் அல்லவா? அது கல்லின் அடிமையிலும், கட்டையின் அடியையும் தம் மேல் காயம் பட்டு, அதுவும் ஓடி ஒளிந்தது. ஊர்மக்கள் சரி, இரண்டும் ஒழிந்தது என்று நினைத்து திரும்பி சென்றார்கள். நரி திரும்ப வந்தது. யானை கேட்டது, ஏன் ஊளையிட்டாய். நீ ஊளையிட்டதால்தானே ஊர் மக்கள் கூடினார்கள் என்று. நரி சொன்னது, என்ன செய்வது நானும் அடக்கத்தான் நினைக்கிறேன். ஆனால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் எனக்கு ஊளையிட வேண்டும்போல் இருக்கிறது. நானும் ஊளையிடுகிறேன். இது என் பிறவி குணம், மாற்றமுடியாது என்று சொன்னது. யானை நினைத்துக் கொண்டது, இப்படி கேடு கெட்ட பிறவி குணம் கொண்ட ஒருவனுடா நான் இத்தனை நாளும் நட்புக் கொண்டேன். அதற்காக நான் பட்ட அடி, உதை போதும். இனிமேல் நரியோடு உறவு வேண்டாம் என உளறிக் கொண்டே யானை காட்டுக்குள் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக