வெள்ளி, 19 மார்ச், 2010

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்குள் முரண்பாடு?

ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக செயற்படுவதை நிராகரித்துள்ள இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜென்றல் அமல் கருணாசேகர ஓய்வுபெறத் தயாராகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எரித்திரியாவிற்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கருணாசேகர லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக வாக்குமூலமொன்றைப் பெறவேண்டும் எனக் கூறி அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியழைக்கப்பட்டார். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு ஜெனரல் பொன்சேக்கா காரணம் என வாக்குமூலத்தைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகள் மேஜர் ஜெனரல் கருணாசேகரவிடம் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர். தான் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாக கடமையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் பணியாற்றி வந்ததாக கருணாசேகர கூறியுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு உதவியதாகக் கூறி இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இரகசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த அநாவசியமான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் சம்பந்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர்களுக்கெதிராக இந்த நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரனவே ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. கபில ஹெந்தாவித்தாரன இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றியபோது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்று வந்தனர். ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் புலனாய்வுப் பிரிவை முழுமையாக மறுசீரமைத்ததுடன் அதன் தலைவராக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை நியமித்தார். புலனாய்வுப் பிரிவுத் தலைவர் என்ற வகையில் அமல் கருணாசேகர விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரியென்பதை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். யுத்தத்தின் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கின்ற இடம் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஏழு ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டமை, புலிகளின் முக்கியஸ்தரான கேர்ணல் ராம் கல்முனையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை மற்றும் கே.பி.யை கைதுசெய்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொடுத்தமை ஆகிய பணிகளையும் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மேற்கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக