செவ்வாய், 9 மார்ச், 2010

சிங்களர்கள் டூரிஸ்ட்டுகளாக, தமிழர்கள் அகதிகளாக

யாழ்ப்பாணத்தில் புதிய படமாளிகை ஒன்றை அமைப்பதற்கான இடம் தேவை’ என்றொரு விளம்பரம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. இதைவிட ஹொட்டல் கட்டுவதற்கு, வெளிநாட்டு கொம்பனிகளின் ஏஜென்ஸிகளுக்கு, வாகன விற்பனை நிலையங்களுக்கு, வங்கிகளுக்கு என கட்டடங்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. அவசர அவசரமாக வீடுகள் புதிதாகப் பெயின்ற் அடிக்கப்பட்டு விடுதிகளாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இப்போது அதிக வருமானம் தரும் தொழில் விடுதிகள் நடத்துவதுதான். குடிவகைகளும் தாராளம். சாப்பாட்டு வகைகளும் புதுசும் தினுசும். பல இடங்களில் மளமளவென்று புதிய கட்டடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் அநேகமானவை கண்ணாடிக் கட்டடங்கள். தியேட்டர்களிலும் சனக்கூட்டம் அலை மோதுகின்றது. பஸ் நிலையத்துக்கு வடக்கே இருந்த சிறிய ஒழுங்கை இப்போது பெரும் பரபரப்பான பாதை. அங்கேதான் ஐந்து முக்கியமான பெரிய வங்கிகள் இருக்கின்றன. பழைய புல்லுக்குளத்தின் கிழக்குப்பகுதியது. அதைப் பார்த்தால், இதுதானா புல்லுக்குளம் என்று ஆச்சரியம் வரும். யாழ்ப்பாணத்திலுள்ள சனங்களை விட யாழ்ப்பாணத்தில் இப்போது விற்கப்படுகிற பொருட்கள் அதிகம். எங்கு பார்த்தாலும் ஏதாவது சாமான்கள் இறக்கப்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன. பழங்கள், காய்கறிகள், பிளாஸ்ரிக் பொருட்கள், துணிவகைகள், தளபாடங்கள், அழகுசாதனங்கள், வீட்டு அலங்கார ஏற்பாடுகள், பூக்கன்றுகள், கைவினை வெளிப்பாடுகள், மின்சார சாதனங்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் என்று உலகத்திலிருக்கிற அத்தனை அயிற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இறக்கப்படுகின்றன. புத்தம் புதிய சந்தை அல்லவா. இதற்குள் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஏழெட்டு வட்டிக்கடைகளும் முளைத்திருக்கின்றன. வங்கிகளைத்தான் சொல்கின்றேன். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்று மூன்று நான்கு வங்கிகளைத்தான் பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், இப்போது தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி, ஹற்றன் நசினல் வங்கி, செலான் வங்கி, யூனியன் வங்கி, கொமேர்சல் வங்கி, ……. ஏன்று கிழமைக்கு ஒன்றாக அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன. எல்லா வங்கிகளும் ஏராளம் சலுகைகளை அறிவித்திருக்கின்றன. பொருளாதாரத்தடை, போர், போக்குவரத்துப் பிரச்சனைகள் என இதுவரை யாழ்ப்பாணத்துச் சனங்களிடம் காசில்லை என்று இந்த வங்கிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. அதனாலேயே, குறைந்த வட்டியோடு தாராளக் கடன் என்ற திட்டத்தை அறிவித்திருக்கின்றன. அடகு வைக்கிற ஆட்களுக்குச் சிறப்புப் பரிசு என்ற விளம்பரங்களை இலங்கையில்தான் பார்க்கலாம். அடகு வைக்கிற ஆட்களின் தொகையும் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில்தான் அதிகம். இங்கேதான் வன்னி அகதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்.. அடகுதான் வைக்க முடியும். யாழ்ப்பாணத்தின் பொருளாதார முதுகெலும்பு புலம்பெயர்ந்த சொந்தங்கள் அனுப்புகிற பணம்தான் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. யாழ் நகரத்தின் பிரபல நகைக்கடைகளில் உண்டியலில் தினமும் பல லட்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே வேளை புலம்பெயர் உறவுகள் அறவே அற்ற வன்னி மக்களும் வன்னியில் தங்கியிருந்த மலையக மக்களும் இன்னமும் வீட்டுக்கும் சோற்றுக்கும் வழியற்ற நிலையில் எஞ்சிய நகைகளை அடகு வைக்கிறார்கள். இதுதான் தருணமென்று வங்கிகள் கடை விரித்திருக்கின்றன. வன்னிப் பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் நிதி மூலங்கள் ஏதுமற்று நான்கு தகரங்களைச் சுற்றவர மூடிய மாட்டுக் கொட்டகை வாழ்வை விட மோசமான வாழ்வின் மீதிருக்கிறார்கள் என்பது ஏ 9 பாதையால் வரும் போது தெரிகிறது. அவர்களுக்கான மீள் நிர்மாணத்தை அரசு செய்யும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. யாழ்ப்பாணம் வின்ஸர் தியேட்டரில் இப்ப படம் ஓடுவதில்லை. அது போருடன் களஞ்சியமாகி, பிறகு வெளவல்களின் இருப்பிடமாகி இப்போது, ‘சதொச’ பொருள் விற்பனை மையமாகி இருக்கிறது. நகரத்தில் பல கண்ணாடிக் கட்டடங்கள் எழும்பியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் ஒரு நகரத்துக்குப் படையெடுக்கும்போது அவற்றின் நாகரிகங்களையும் அங்கே கொண்டு செல்லும் என்பார்கள். அவற்றின் முதல் வியாபார நுட்பம் அவற்றின் விளம்பரங்களும் கவர்ச்சியும்தான். அதனால், யாழ்ப்பாணத்தில் இந்தக் கவர்ச்சி மையங்கள் தாராளமாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது நகரம் விரிந்து விரிந்து நாவலர் வீதி, இந்துக்கல்லூரி, மானிப்பாய் வீதியில் பழைய ஈழநாடு அலுவலகம், என்று பெருத்துக் கொண்டு போகிறது. இதேவேளை முந்தைய யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் இன்னும் இடிந்து அழிந்தபடியே இருக்கின்றன. யாழ்ப்பாணம் பழைய பூங்கா, கண்டி வீதி, முதலாம் இரண்டாம் குறுக்குத் தெருக்கள், சுப்பிரமணியம் பூங்காப் பகுதி எல்லாம் போர் வடுக்களுடன் மாறாமல் அப்படியே இருக்கின்றன. போரின் பிறகு, பாதை திறந்தவுடன் ஏராளம் வெளியாட்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லை. அதிலும் தென்னிலங்கையிலிருந்து வடக்கே வருகிற சிங்கள சுற்றுலாப்பயணிகள் தங்குதவற்கு இடங்கள் போதாது. ஏராளம் சிங்களவர்கள் தினமும் வருகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் குறையாத ஆட்கள். வருகிற சிங்களச் சனங்கள் புதிதாகத் திறந்திருக்கும் விடுதிகளுக்குப் போகிறார்கள். விடுதிகள் போதாது என்றால் வீரசிங்கம் மண்டபம் தொடக்கம் யாழ்ப்பாண நகரத்திலிருக்கின்ற பொது மண்டபங்கங்களில் இரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். வேறு வழியில்லை. ஒரு பாய்க்கு நூறு ரூபாய்வரை அவர்கள் கொடுப்பதாகக் கேள்வி. அவர்களைத் தவிர அதே தொகையில் வேறும் பலரும் யாழ்ப்பாணம் வருகிறார்கள். அவர்கள் தமிழர்கள். வவுனியா முகாம்களில் விடுவிக்கப்படுகிற தமிழ் அகதிகள் அவர்கள். யாழ்ப்பாணத்துக்கு சிங்களவர்கள் சுற்றுலாப்பயணிகளாக வருகிறார்கள். தமிழர்களோ இன்னமும் அகதிகளாக அலைகிறார்கள். அவர்களை விடுவித்து கையில் கொஞ்சக் காசும் கொடுத்ததோடு அரசு தன் கடனைச் சிவனேயென்று முடித்துக் கொள்கிறது. அதற்குப்பிறகான வாழ்க்கை அவர்களைப் பயமுறுத்துகிறது. பேசாமல் முகாமிலேயே இருந்திருக்கலாம் என்றார் வவுனியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்களில் ஒருவர். யாழ்ப்பாணத்தில் சீவிப்பதற்கு குடும்பத்தில் யாராவது வெளிநாட்டில் இருக்க வேண்டும். அல்லது அரசசார்பற்ற நிறுவனம் எதிலாவது வேலைசெய்ய வேண்டும். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடர வந்த சில மாணவிகள் திருமணமாகி தம் துணைகளை யுத்தத்தில் இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் கைக் குழந்தைகளோடு இருக்கிறார்கள். அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கணவனை போரில் இழந்த பெண்ணொருத்தி பிறந்த தன் குழந்தையை விற்பதற்கு முயன்றமை அறியப்பட்டு சமூக அமைப்புக்களின் தலையீட்டில் தடுக்கப்பட்டிருந்தது. தற்போது சொந்தங்களுக்கென அனுப்பப்படும் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் கட்டமைக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்கப்படும் நிலை ஏற்படாது போனால் மும்பை மாநகர செல்வச்செழிப்பான கட்டடங்கள் நடுவே சேரிகளும் குடிசைகளும் இருப்பதுபோன்ற நிலை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஏற்படும். இவ்வாறாக புதிய வர்த்தக வரவுகள் கவர்ச்சி மிகு உள் நுழைவுகள் என ஒருபக்கம் வீங்கியும் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் சூனியமான எதிர்காலம் இன்னமும் தமது நிலத்தை இழந்து தவிக்கும் யாழ் உயர்பாதுகாப்பு வலய மக்களின் நிலம் திரும்பும் ஏக்கமென இன்னொரு பக்கம் வெந்தும் இன்றைய யாழ்ப்பாணம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக