செவ்வாய், 9 மார்ச், 2010

வழிகாட்ட ஒருவரின்றி...?

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியபோது- ஏற்பட்ட விரிசல் தமிழ்கட்சிகள் மத்தியிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி என்று மூன்று அணிகளாகப் பிரிந்து போய் நிற்கின்றன. கடந்த தேர்தலில் இந்த மூன்று அணிகளுமே ஒன்றாக நின்றவை- ஆனால் இப்போது பிளவுபட்டு நிற்கின்றன. இது தமிழ்த் தேசியத்துக்கு விழுந்து பேரிடி- இன்னொரு வகையில் சொல்லப் போனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சாபக்கேடு. புலம்பெயர் சமூகத்தினரின் தவறான வழிகாட்டலில் தான் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் சமூகத்தினர் தம்மை வழிநடத்த முடியாது என்றும் கூறுகிறது. இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றைக் கைவிட்டு, இந்தியாவின் கைப்பொம்மையாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதன் தலைவர்கள் மாற்றி விட்டதாக விமர்சிக்கிறது தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி. அதேவேளை தாம் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து விலகமாட்டோம் என்றும்- ஆனாலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப நெகிழ்வுப் போக்குடனான இராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும் நியாயம் கற்பிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இப்படியே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதும் கேவலப்படுத்துவதுமாகச் சென்று கொண்டிருக்கிறது தமிழ்த் தேசிய அரசியல். இந்தக் கட்டத்தில் தமிழ்மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஒன்று தோன்றுவது இயல்பு. உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? என்பன போன்ற கேள்விகள் அவர்களிடத்தில் உருவாகியுள்ளன. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லை என்று கூறியுள்ள நிலையிலும்- அது சில விடயங்களில் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளது உண்மை. அதாவது கடந்த தேர்தலில் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தையே மறந்து விடும் நிலைக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இது சரியான மாற்றமா அல்லது தவறான முடிவா என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழ்மக்கள் தான். அது தேர்தலின் போது வெளிப்படும். தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசியல்தீர்வு நோக்கிச் செல்வதே இன்றைய தேவை. ஆனால் கூட்டமைப்பு தாம் இந்தக் கோட்பாடுகளில் இருந்த விலகவில்லை என்று கூறியிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் சர்வதேச அதரவைப் பெறுவதற்கும்- யதார்த்தத்துக்கும் ஏற்ப நெகிழ்வுப் போக்குடனான சில முடிவுகளை எடுத்திருப்பதாகவே கூறுகிறது.. தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பான விட்டுக் கொடுப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி விட்டதா என்ற சந்தேகத்தையே இது எழுப்பியுள்ளது. இந்தியாவினதோ அல்லது சர்வதேசத்தினதோ விருப்பத்துக்கேற்ப தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயராகி விட்டது. இதை அதன் தலைவர்களே உறுதி செய்துள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்துக்கேற்ற தீர்வை தயாரிப்பது முக்கியமா அல்லது சர்வதேசத்தின் விருப்பத்துக்கேற்ற தீர்வை நடைமுறைப்படுத்துவது முக்கியமா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டம் இது. தமிழ்மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது-அந்த உரிமைகளுக்காக தொடங்கப்பட்டதே அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்; தமிழரின் விருப்பம்-அபிலாஷைகளைப் பற்றிக் கருதிலெடுக்காமல், சர்வதேசத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற தீர்வை உருவாக்குவது பொருத்தமான காரியமாக இருக்காது. ஏனென்றால் சர்வதேசத்தின் விருப்பத்துக்காகத் தொடங்கப்பட்ட போராட்டமல்ல இது. இந்தத் தெளிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை, கடந்த வருடம் ஒரு அரசியல்தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்திருந்தது. ஆனால் அதை தமது உறுப்பினர்களிடமே காண்பிக்கவில்லை. கிட்டத்தட்ட சந்திரிகா ஒரு தீர்வுப் பெட்டகத்தை வைத்திருப்பதாகக் கூறிக் காலத்தைக் கடத்தியது போலவே இதுவும் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்காக தீர்வுத்திட்டத்தை உருவாக்கியது.? எதற்காக அதை உருவாக்கியது? என்ற கேள்விகள் முக்கியமானவை. தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட்டது பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்பதற்காகவல்ல. அதை தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது அவர்கள் செ;யதிருக்க வேண்டிய முதலாவது வேலை. அடுத்து அதை சர்வதேசத்தினதும் இலங்கை அரசினதும் கவனத்ததுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். எதையுமே செய்யாமல் அதை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாகவே தீர்வுத்திட்டத்தை தயாரித்திருப்பதாக இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். இலங்கை அரசும் புலிகளும் இணக்கப்பாடு கண்டதன் அடிப்படையில் இந்தத் தீர்வுத்திட்டத்தை உருவாக்கியதாகவும் புதிய எம்.பிகள் அதுபற்றித் தீர்மானிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார் அவர். ஆனால் ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாக தீர்வுத்திட்டததை உருவாக்கியிருந்தால் கூட- அதை வெளியிடாமல் மறைத்து வைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழ்மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களி;ன் ஆணையைப் பெற்றிருப்பினும்- தீர்வுத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதற்கு இருக்கிறதென்பதை மறந்து விடக் கூடாது. அதேவேளை அந்தத் தீர்வுத் திட்டத்தை இந்தப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழ்மக்களிடத்தில் முன்வைத்து அவர்களின் ஆணையைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முனைய வேண்டும். 1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பெற்ற ஆணையைக் கொண்டு தான் இன்று வரை பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது அரசியல்தீர்வுத் திட்டத்தை முன்வைத்து மக்களின் ஆணையைப் பெறுமானால் அதற்கு சர்வதேச ஆதரவும் பலமும் இன்னமும் அதிகமாகவே கிடைக்கும். அத்துடன் இலங்கை அரசினாலும் தட்டிக் கழிக்க முடியாத நிலை உருவாகும். தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும். கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழரின் ஆயுதபலம் சிதைந்து- பேரம்பேசும் ஆற்றல் பறிபோனது. அதை அரசியல் வழியில் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவதே பொருத்துமானது. அதேவேளை தமிழரின் அபிலாஷைகள் விருப்பங்களுக்கு முரணாக எதையும் செய்யலாம் என்ற நினைப்பு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்காவது இருக்குமேயானால் அதை இப்போதே தூக்கியெறிந்து விடவேண்டும். உலக நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வதாக கூட்டமைப்பு கூறினாலும், அவர்களின் இராஜதந்திர ஆற்றலைத் தமிழ்மக்கள் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே பார்க்க முடிந்தது. எனவே அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரே வழியில் தமிழ்த் தேசியத்தின் பிடிமானத்தில் இருந்து விலகாத வகையில்- தமிழரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வருவது தான் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் நடத்துவோரின் முன்பாக இருக்கும் வரலாற்றுக் கடமை. "அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... " தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஹரிகரன் - ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக