புதன், 17 மார்ச், 2010

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்?

இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவே தான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதை அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்தில குழப்பமே நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக