புதன், 17 மார்ச், 2010

உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்?

இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சைக்குழுக்களாக களமிறக்கியுள்ளார் மகிந்த இந்த செயற்பாட்டில் எம்மவர்கள் விலைபோனதால் மகிந்த ஓரளவு வெற்றி கண்டுள்ளார் என்பது உண்மையே ஆனால் அதற்கான இறுதி வெற்றி கிடைக்கவேண்டுமானால் அது தமிழர்களின் கைகளிலேயே உள்ளது அதை நினைத்து ஓரளவு ஆறுதல்படலாம் ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் புள்ளிபோடுவது ஒவ்வொரு தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கெதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்களே போட்டியிடுகின்றனர் இவர்கள் மும்முனைகளில் தேர்தலை முகம்கொடுப்பதால் தமிழ் மக்களின் பார்வை எப்படி இருக்கின்றது என்பதே எம்முன்னேயுள்ள கேள்வி. ஆயுதப்போராட்டம் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆயுதரீதியில் பெரு வெற்றி கண்டபோதே அதற்கீடாக களத்திலும் புலத்திலும் தமிழர்களின் அரசியல் வலு தேவைப்பட்டபோதே தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் முற்போக்காளர்களும் இணைந்து அனைத்து தமிழ் கட்சிகளுடன் தனித்தனியாகவும் ஒன்றாகவும் அழைத்து பேசி ஒருமுடிவெடுக்கப்பட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெருவிருட்சம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிறந்த வழிகாட்டுதலும் ஆலோசனையும் கிடைத்தமையால் அவை ஓர் சீரான பாதையிலும் ஒரே தலமைத்துவத்தின் கீழும் செயற்பட்டு வந்தனர் ஆனால் தற்போது அக்கூட்டமைப்பை சிதறடிக்கும் வகையில் சிலர் செயற்படுவதும் செயற்பட தூண்டுவதும் புலம்பெயர் உறவுகள் சிலர் பணம் அனுப்பி சிலரை தூண்டுவதும் தொடர்தவண்ணமேயுள்ளது என்பதை நினைத்து ஒவொரு தமிழர்களும்; உள்மனதினுள் கவலையடைந்த வண்ணமேயுள்ளனர். கூட்டமைப்பு ஆரம்பமானபோது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 22 பேரை தமிழ் மக்கள் தேர்வு செய்து சிறிலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் எமது முடிவை ஒருமித்த குரலில் எடுத்தியம்பினர். பின்னர் அவர்கள்கூட விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக சிறிலங்காவால் சொல்லப்பட்டு வந்தது. தற்போது ஆயுதபு;போராட்டம் ஓர் முடிவுக்கு வந்தடைந்து விட்டதாகவும் இனி யார் தேர்தலில் வெற்றிபெறுகின்றார்களோ அவர்களுடன்தான் தமிழர்களின் தீர்வுபற்றி பேசுவேன் என்றும் சனாதிபதி கூறுகின்றார் அதாவது நாம் போரில் வென்றுவிட்டோம் நீங்கள் தேர்தலில் வென்றுவாருங்கள் என ஆணையிடுகின்றார்;. ஆதற்காகவே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் யாரும் அதிகப்படியான ஆசனங்களை பெற்று உரிமைகளை பேசக்கூடியவாறு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஏராளமான கட்சிகளையும்,சுயேட்சை குழுக்களையும் களமிறக்கியுள்ளார். இதன் காரணமாக தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதன் காரணமாக தமிழ் தேசியம் கடந்தமுறை பெற்ற மேதலதிக(போனஸ் ) ஆசனங்களையும் இழக்கும் வாய்பேற்பட்டுள்ளது. அத்துடன் சுயேட்சைக்குழுக்களாக யாழ்பாணத்தின் ஒருசில கல்வியாளர்களும் உதாரணமாக கலாநிதி குணராசா,ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்ஈமுன்னாள் அதிபர் போன்றவர்களும் பணத்திற்காக விலைபோயுள்ளனர். கடந்த தேர்தலில் ஆயுதக்குழுக்களின் பத்துக்கு மேற்பட்ட குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மக்களை வாக்களிக்க செல்லாது அச்சுறுத்தியபோதிலும் தமிழ் மக்கள் துணிந்து சென்று வாக்களித்ததுடன் எவருடைய வழிகாட்டுதலுமின்றியே கடந்த சனாதிபதி தேர்தலின் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முடிவை ஏகோபித்த குரலில் எடுத்தியம்பினர். இம்முறை வேட்பாளர் தெரிவு இடம்பெற்றபோது சில விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெறாமையினால் சிலர் தனித்து இயங்குவதாக முடிவெடுத்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். தனித்து செயற்படுவது குற்றமல்ல எங்கே தவறு இடம்பெற்றது என ஆராய்வது எமது நோக்கமில்லாவிட்டாலும் “தமிழீழக்கோரிக்கை கைவிடப்பட்டது, இந்தியாவிற்கு விலையோயுள்ளார்கள் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும். அவ்வாறாயின் இவர்களின் பிரிந்து செல்வதற்கான முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பதே இங்கு ஆழமாக ஆராயப்பட வேண்டியது அதாவது கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் இருவருக்குமான வேட்பாளர் தெரிவில் இடம் கிடைக்காமையினாலேயே இவர்கள் இம்முடிவுக்கு வரக்காரணம் என்பது வெளிப்படை அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது என்பதுடன் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது.” இதற்காக கூட்டமைப்பு செய்வதெல்லாம் சரியென்றோ எல்லோருமாக ஏற்றுகொண்டதென்றோ சொல்லவரவில்லை இருப்பினும் தற்போதைய கள யதார்த்தத்தில் தெரிவிற்கு முக்கியத்துவமளிக்காமல் எல்லோருமாக கூட்டமைப்பினை பலப்படுத்துவதைவிட சிறந்த மார்க்கம் தமிழர்களுக்கு எதுவுமில்லையென்பதே உண்மை. இவ்வாறு பிரிந்து செயற்பட்டு ஒருவீட்டு பிள்ளைகளே வீதியிலிறங்கி மகன் தந்தையைபற்றியோ தனையன் மகனைபற்றியோ குறைகூறி பக்கத்துக்குபக்கம் அறிக்கை வெளியிடுவதோ அரசிற்கும் அதன் அடிவருடிகளுக்கும் நாமே களமமைத்து கொடுத்தாகிவிடும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக கூறுகின்றீர்களே விடுதலைப்புலிகள் 6 கட்ட பேச்சுக்கு சென்றது தமிழீழத்தை தட்டத்தில் வைத்து அவர்கள் தருவார்கள் என்ற எண்ணத்திலா? அல்லது தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டா? அப்போது எவருமே வாய்திறக்கவில்லையே! களச்சூழலுக்கேற்ப தலைவரின் சிந்தனைக்கேற்ப “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறப்போவதில்லை” அதனடிப்படையில் படிப்படியாகவே எமது நகர்வுகளை செய்யவேண்டிய தேவை உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் அவர்களை குழப்பிவிடாதீர்கள் என்பதே எமது கருத்தாகும். அதாவது பல்கலைக்கழகத்திலுள்ள ஒருசிலரை நீதி நியாயத்திற்கான மாணவர் அமைப்பென்றோ அல்லது கருணாகரன்களால் வெளியிடப்படும் விழிப்பு பத்திரிகையாலோ மக்களை திசைதிருப்பலாம் என கஜேந்திரன் எண்ணுவாராயின் அது அவரின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகின்றது. அதாவது இவர்கள் சட்டம்படித்துகொண்டிருப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நீங்கள் ஒரு உருவாக்கத்திற்கான ஆரம்பம் மட்டுமே உங்களைவிட 50ஆண்டுகளுக்குமுன்னரே அவர்கள் சட்டத்துறையையே பிரதானமாக கற்று மும்மொழியிலுமே சிறப்படைந்து உரிமைக்காக குரல்கொடுத்து இதுவரையும் எதிரிக்கு விலைபோகமல் இருக்கின்றார்கள் அவர்களுடன் பார்த்தால் நீங்கள் பேரப்பிள்ளைகள் இப்படி செய்யலாமா? கடந்த சனாதிபதித் தேர்தலில் யாழ்குடாநாட்டிலே எல்லா தொகுதியிலுமே 19-20 வீதமானோர் ஆளும் ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் அதாவது 10பேரில் இரண்டு பேர் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் அந்த இரண்டு பேரும் அவர்களின் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை அவர்களிடம் உதவிபெற்றவர்கள் கைமாறாக செய்து கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கமைவாகவே வாக்களித்ததுள்ளனர் எனவே நாம் நமக்குள் முரண்பட்டுக்கொண்டால் எதிரிக்கும் அவனோடியங்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அது வாய்ப்பாக போய்விடும் என்பதை கவனிக்கவேண்டும். அன்பான புலம்பெயர் உறவுகளே, தமிழர் அமைப்புகளே உங்கள் மௌனங்கள் எதுவரைக்கும் இறுதிமுடிவுகளை உரியவர்கள் உரிய காலத்தில் எடுப்பார்கள். அதற்கிடைப்பட்ட காலத்தில் நாமே இணைந்து எடுக்க வேண்டும். எமது வலிகள் வேதனைகள்,சுமைகள் எல்லாவற்றிலும் உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும்,வியர்வையும்; உண்டென்பதை நாம் அறிவோம். ஆகவே நீங்கள் அவரும் வரட்டும்,இவரும் வரட்டும் என்ற நிலையை மாற்றி தற்போதைய காலத்திற்கு இங்குள்ள நிலமைக்கு எந்தமுடிவு எடுப்பது நல்லதென்பதை உங்கள் மௌனங்களை கலைத்து விரைவாக வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுநிற்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக