திங்கள், 26 ஏப்ரல், 2010

200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்

அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில் பேசப்பட்டன. அவற்றில் இன்றிருப்பவை 175 மட்டுமே. அவையும் காக்கப்படாவிடில், 2050ம் ஆண்டில் 20 மொழிகள் தான் இருக்கும் என்று அமெரிக்காவில் இயங்கி வரும், ‘உள்நாட்டு மொழிகள் கழகம்’ கவலை தெரிவித்துள்ளது. நியூயார்க் அருகிலுள்ள ‘லாங்’ என்ற தீவில் 200 ஆண்டுகளுக்கு முன், ‘ஷின்னெகாக்’ மற்றும் ‘அன்கெசவுக்’ என்ற பழங்குடி மொழிகள் பேசப்பட்டன. இன்று ‘ஷின்னெகாக்’ மொழியைப் பேசும் பழங்குடிகளாக 1,300 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சவுதாம்ப்டன் நகரில் இருக்கின்றனர்.’அன்கெசவுக்’ மொழி பேசுபவர்களாக 400 பழங்குடியினர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாஸ்டி நகரில் வசிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ‘ஸ்டோனி புரூக்’ பல்கலைக்கழகம், அப்பழங்குடி வம்சத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மீண்டும் இந்த இரு மொழிகளையும் உருவாக்குவதில் முனைந்துள்ளது. இதற்காக அவர்கள், கி.பி., 1791ல் தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய பழங்குடியினர் மொழிகளின் சொற்களஞ்சியம் போன்ற பழைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சமீப காலமாக, அமெரிக்காவில் பழங்குடியின மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் அந்நாட்டுப் படித்த பழங்குடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.’எங்கள் மொழிகள், எங்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதில் உதவுகிறது. எங்கள் குழந்தைகள் அவர்களின் சொந்த மொழியில் சொந்த கலாசாரத்தைப் படிக்கும் போது படிப்பில் சிறப்படைகின்றனர்’ என்கிறார் இப்பணியில் ஈடுபட்டுள்ள ‘அன்கெசவுக்’ பழங்குடிகளின் தலைவர் ஹாரி வாலஸ்.’மனிதப் பண்புகளுக்கான தேசிய அறக்கட்டளை’யின் தலைவர் புரூஸ் கோல், ‘மொழி என்பது கலாசாரத்தின் டி.என்.ஏ.,’ என்று குறிப்பிடுகிறார். ஸ்டோனி புரூக் பல்கலை மொழியியல் தலைவர் ராபர்ட் டி.ஹாபர்மேன், ‘ஷின்னெகாக் மற்றும் அன்கெசவுக் இரு மொழிகளும் ஒத்த தன்மை கொண்டவை. இவை இரண்டும், ‘அல்கான்குயன்’ மொழிக் குடும்பத்தில் தோன்றியவை’ என்கிறார்.இவற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கின்றனர் என்று அவர் கூறுகையில், ‘முதலில் அந்த மொழிகள் எப்படி இருக்கின்றன என்பதை அவற்றில் புழங்கி வரும் பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள், உரையாடல்கள் மற்றும் சொற்பட்டியல்கள் மூலம் கண்டறிவோம். பின், அவற்றில் எந்த சொற்கள் ஒரே வடிவத்திலும் திரிவாகியும் புழங்குகின்றன என்பதைப் பார்ப்போம். பின், படிப்படியாக மீட்டுருவாக்கம் செய்வோம்’ என்கிறார்.மேலும் அவர் கூறுகையில், ‘வழக்கிழந்து போன மொழிகளை மீட்டுருவாக்கம் செய்வதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த மொழிகளின் அகராதிகள் யாவும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பது கடினம் தான்’ என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக