திங்கள், 26 ஏப்ரல், 2010

ஆட்கடத்தலில் ஈடுபடும் ஈபிடிபியினர்!

வன்னியில் போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட இளம்குடும்பஸ்தர் ஒருவர் ஈபிடிபியினரால் வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வன்னியில் இருந்த குறிப்பிட்ட இளைஞர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருந்தார். வவுனியாவில் வாழ்ந்துவந்த குறிப்பிட்ட இளைஞர் நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மருத்துவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றவேளையே கடத்தப்பட்டுள்ளதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்னாள் காலை 10மணிக்கு இவர் மருத்துவமனைக்குச் சென்றபோது வாகனம் ஒன்றில் சென்றவர்களே கடத்திச் சென்றுள்ளனர். இவர் கடத்தப்பட்ட விடயம் உடனடியாக குடும்பத்தவர்களுக்குத் தெரியவராத நிலையில் மிக நீண்ட நேரத்தின் பின் அவர்கள் இவரைத் தேடியுள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டுக்குச் சென்ற ஈபிடிபியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குமரேசின் பிரத்தியேகச் செயற்பாட்டாளரான தீபன் என்பவர் ஜெயந்தன் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிப்பதாக இருந்தால் ஆறு இலட்சம் ரூபா தம்மிடம் தருமாறும் அவ்வாறு பணத்தினைத் தந்தால் தான் ஜெயந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிசில் முறையிட வேண்டாம் என்றும் அவ்வாறு முறையிட்டால் கடத்தியவர்கள் ஜெயந்தனைக் கொன்றுவிடுவார்கள் என்றும் தீபன் ஜெயந்தனின் உறவினர்களிடம் மிரட்டல் விடுத்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக