திங்கள், 26 ஏப்ரல், 2010

"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?

இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்ளுவோம். வெற்றியும் காணுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. எப்போதும் முதுகுக்குப் பின்னால் நின்றால் குத்தமாட்டோம். கூட இருந்தே குழிபறிக்கமாட்டோம். சத்தியம் சாகாது என்ற தலைவனின் தத்துவத்தை சத்தியமாய் கொண்டவர்கள் உண்மையை எங்கும் உரைப்பதற்கு தயங்காததவர்கள். “பிரபாகரனிசம்” என்கின்ற தத்துவத்தில் பிறந்தவர்கள் இன்று அவரை வைத்து வாழ நினைப்பதுவும் அவருடன் இருந்தவர்களையே துரோகிகளாக சித்தரிப்பதுவும் அருவருக்கத்தக்கது. அவமானமானது, கோழைத்தனத்தைவிட கொடியது, இந்தக்கொடுமையை செய்பவர்கள் வேறு யாருமல்ல. அனைத்துலகத்தொடர்பகத்தின் செயற்பாட்டில் இருக்கும் சில வன்மம் கொண்டோர். இவர்களின் உண்மைக்குப்புறம்பான செய்திகள் மக்களை வேதனைப்படுத்துவதால் நாம் இந்த துச்சாதனர்களை தோலுரிக்கத் தயங்கமாட்டோம். அதேவேளை அநாகரீகமாகவும் எழுதமாட்டோம். ஆனால்…… நாங்கள் உண்மை சொன்னால் உலகு நம்பும்…. காரணம் எமது அடையாளம் நேரிடையானது. எனவே வேண்டாம் இந்த விபரீதம் . இலட்சியத்துக்காக களம் புகுந்தவர்கள் நாங்கள் சாவை சந்தோசமாக ஏற்கத்துணிந்தவர்கள். கூட இருந்தவனாகினும் கொலை பாதகனாகினால் உயிர்கொடுத்து மாவீரரின் இலட்சியக்கனவுகாப்போம். என்ன? நேரடியாக அனைத்துலகத் தொடர்பகத்தை குற்றம் சாட்டுகிறோம் என்று உங்கள் புருவம் உயர்ந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தமிழீழ தேசியத்தலைவரின் விரலசைப்பில் வாழ்ந்து அவரால் சர்வதேச உறவுகளுக்கான செயலராய் நியமனம் பெற்ற ஒருவரை அனைத்துலகத்தொடர்பகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் புலிகளின் குரல் உட்பட துரோகி என்று எழுதிய போது உங்கள் எவருக்கும் மனம் உறுத்தவில்லை என்றால் நிச்சயம் எமக்கும் அதே மனவுறுத்தல் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு கொலைவாள் எடுத்துவிடாதீர்கள் முடிந்தால் கொடியவர்களை இனம் கண்டு விடுதலைத்தீ மூட்டுங்கள் அல்லது புலிகளின் உயர்ந்த இலட்சியத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி எதிரிக்கு களம் அமைத்துக்கொடுக்காதீர்கள் "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்". என்று உரியவர்களுக்கு சொல்லி தலைவன் கனவை நனவாக்குங்கள். இனி: நீங்கள் யார்? உங்கள் இலக்கு என்ன? உம்மை அறிந்தா இதைச்செய்கிறீர்? தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று அதிகமாகச் சம்பாதித்திருப்பது நண்பர்களையல்ல- எதிரிகளையும் துரோகிகளையும் தான். முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சின்னாபின்னமாகச் சிதைந்து போயுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் மற்றும் அதன் தலைமையின் இருப்புத் தொடர்பாக யதார்த்தத்துக்கு முரணாகச் செயற்படுவோரின் விளைவாகவே இத்தனை சீரழிவு ஏற்பட்டிருக்;கிறது. தாயகத்தில் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான போராளிகள் களத்தில் உயிரைக் கொடுத்தனர். எஞ்சியிருந்த போராளிகள் பலர் பிடிபட்டனர். பலர் சரணடைந்தனர். வேறு சிலர் உயிர்தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஒரு கொடிய போரின் விளைவாக நடந்த இந்த விளைவுகளை ஏற்க மறுக்கும் தரப்பினர்-கற்பனையானதொரு கோட்டை தமக்குத் தாமே வரைந்து கொள்ள முற்படுவது சுத்த வியாபாரத்தனம். தமிழீழ விடுதலைப் போரில் உயிர் கொடுத்த தேசியத் தலைவரின் மரணத்தையே விலைபேசத் துணிந்தவர்கள் [இணைப்பு வரலாற்றுத்தவறு செய்த தமிழினமே உனக்கு ஒரு மடல் 1 ] இவர்கள். மரணமான போராளிகளைப் கேவலப்படுத்துவது முதற்கொண்டு பிடிபட்டவர்கள், தப்பிச் சென்றவர்களைத் துரோகிகள் என்றும் காட்டிக் கொடுப்போர் என்றும் சுலபமாகவே வெளிநாடுகளில் இருந்து கொண்டு பட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாயகத்தில் சிங்களப் படைகளுக்கு எதிராக எதையுமே சாதிக்க வக்கற்றவர்களாக இருந்தவர்களே- இன்று புலம்பெயர் தேசங்களில் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களை கற்பனைச் சாலையின் மீது நடக்க வைக்க முனைகிறார்கள். தேசியத் தலைவரின் மரணத்தையே மறைத்து இலாபம் சம்பாதிக்கத் துணிந்தவர்களிடத்தில் இருந்து மானத்தையும், இராஜதந்திரத்தையும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அறிவுபூர்வமாகச் சிந்திக்கவோ, செயற்படவோ திராணியற்றவர்கள் தான் அவர்கள் கூறுவதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க முடியும். மே 19 பிரளயம் நிகழ்ந்து ஒரு வருடமாகப் போகிறது. இதற்குள் தாயகத்திலும், புலத்திலும் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. எத்தனை பிரிவுகள்,பிளவுகள், வேதனைகள், சோதனைகளைத் தமிழினம் சந்தித்திருக்கிறது. பிரபாகரனுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து செயற்பட ஆரம்பித்த கே.பியை வசைபாடி அவரை சிங்கள அரசின் பொறிக்குள் சிக்க வைத்தனர். சிங்கள அரசுடன் இணைந்து அவர் செயற்படுவதாக, காட்டிக் கொடுப்பதாக வேறு பிரசாரங்கள் செய்தனர். அதை நிரூபிக்க யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை. சரி அவர் காட்டிக் கொடுக்கிறார் என்றால் அதை இவர்களிடம் சொன்னது யார் என்ற கேள்வி வருகிறது. அப்படியானால் கே.பியை துரோகி என்று பழிக்கும் தரப்பினருக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது? ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை கே.பி மூலம் அறிவிக்கப்பட்டதையே இன்று கேள்வியாக எழுப்புகின்றனர். அந்த முடிவை பிரபாகரன் எடுக்கவில்லை என்று இருவேறு காலங்களுக்கிடையே ஒப்பீடு செய்கின்றனர். ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை எடுத்தபோதே கே.பி சொல்வது தவறு என்று அன்றே கூறத் திராணியற்றிருந்தவர்கள் தான் இன்று, அவர் சிங்கள அரசின் சிறையில் இருக்கும் போது அப்படிச் சொல்ல முனைகின்றனர். முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? வீரஞ்செறிந்த விடுதலைப் போர் மண்டியிட நேர்ந்தது என்பதே உண்மை. அதை வரலாற்றில் யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அந்தக் கொடிய போருக்குள் இருந்தவாறு தேசியத் தலைமை எடுத்த முடிவையே இன்று கேள்வி கேட்கும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது. அதற்குத் தூண்டுகோலாக இருப்பது யார்? கே.பியின் வழிகாட்;டலில் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கினார். இப்போது அவரை அந்த முயற்சியில் இருந்து இறங்க வைக்கும் நோக்கில் பலமுனைகளில் இருந்து அவர் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. உருத்திரகுமாரனின் ஆற்றலையும், அறிவையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலும், அவருக்கு தமிழீழத் தேசிய விடுதலைப் போரை முன்னெடுக்கத் திராணியில்லை என்ற வகையிலும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொண்டாலும் கூட, அத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதற்கு இவர்களில் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? தகைமை இருக்கிறது? ஆயுதப் போராட்டத்தை தாயகத்தில் அழித்து விடும் முயற்சியில் வெற்றிகண்ட சிங்கள அரசுக்கு ஒரு கலக்கம் இருந்து வந்தது. புலத்தில் தமிழ்மக்கள் பலமாக இருக்கிறார்களே அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே சிங்கள அரசின் அச்சமாக இருந்தது. இது கடந்த வருடம் இதே காலத்தில் இருந்த அச்ச நிலைமை. ஆனால் இன்று புலத்துத் தமிழர்கள் பற்றி சிங்கள தேசத்துக்கு கொஞ்சமும் அக்கறையோ கலக்கமோ கிடையாது. இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் நமக்குள் நாமே போட்டுக் கொள்ளும் சண்டைதான். ஒருபக்கத்தில் நாடுகடந்த அரசு. அடுத்த பக்கத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்து முடிந்து விட்டது. அதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலை. இது ஒரு பக்கத்தின் நிலை. அடுத்த பக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவைக்கான வாக்கெடுப்பு நடக்கப் போகிறது. இது தான் இப்போது பிரச்சினை. இந்தத் தேர்தலைக் குழப்பி நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்று அமைய விடாமல் செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வெளிநாடுகளில் ஏதாவது வாய்ப்புக் கிடைத்து விடுமோ என்ற அங்கலாய்ப்பே அந்த வசைபாடல்களுக்கும், சேற்றை வாரும் முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கலாம். வட்டுக்கோட்டைத் தீர்மானத் தரப்பினர் இப்போது தாம் யார் என்று வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கான அங்கீகாரம் சர்வதேச அளவில் கிடையாது. இந்தநிலையில் நாடுகடந்த அரசுக்கு வெளிநாடுகள் இடம் கொடுத்து விடக் கூடாது என்பது அந்தத் தரப்பினரின் அச்சமாக இருக்கலாம். நாடுகடந்த அரசுக்கான தேர்தலைக் குழப்புவதே அவர்களின் இப்போதைய முக்கிய தேவை. அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மறந்து போய்விட்டார்கள். தமிழீழம் என்பது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கானது அல்ல. அது தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கானது. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாமே வழிகாட்டிகள் போன்று செயற்படுவது மிகவும் முட்டாள்தனமானது. யதார்த்தத்துக்கு முரணாக அவர்கள் இயங்கி ஒன்றுக்கு இரண்டு தேர்தல்களின் மூலம் மூக்குடைபட்டிருப்பது தான் மிச்சம். ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா என்ற கொடியபாவிக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பு முடிவு செய்தது மிகப் பெரிய தவறு. அதற்குத் துணை நின்றது புலம்பெயர் சமூகத்தின் ஒருபகுதியினர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வோரோடு நசுக்கிய ஒரு பாதகனுக்குத் துணைபோகும் படி தாயகம் வாழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு எமது புலம்பெயர் தேசத்து மக்களில் ஒரு பகுதியினரின் இராஜதந்திரம் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது. அத்தோடு விட்டார்களா? தோற்கிற குதிரையில் பந்தயம் கட்டி தமிழரின் மானத்தை விற்றவர்கள், பொதுத் தேர்தலிலாவது புத்திசாலித்தனத்தைக் கடைப்பிடித்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை உருவாக்கி - கஜேந்திரகுமார் தலைமையில் புதிய அணியொன்றை உருவாக்கினார்கள். இதற்குப் பின்னணி புலம்பெயர்தேசத்தின் ஒருபகுதியினர் தான்; என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதன் விளைவாக என்ன நடந்தது? தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை மக்கள் அடியோடு நிராகரித்தார்கள். ஒரு மாமனிதரின் மகனான கஜேந்திரகுமாரை தலைகுனிந்து தோல்வியடைய வைத்தார்கள். கடந்த முறை யாழ்ப்பாணத்தில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர்களை தாம் எப்படி அதைப் பெற்றோம் என்று நிரூபிக்க வைத்தார்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தவர்களில் ஒருபகுதியினரின் இராஜதந்திரம். இது மட்டுமன்றி கடந்தமுறை 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை 14 ஆகக் குறைத்து விட்டிருக்கிறார்கள். டக்ளஸ் வோனந்தாவையும், ஜதேகவையும் யாழ்ப்பாணத்தில் அதிகாரத்தைச் செலுத்த வைத்தது தான் மிச்சம். இன்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் ஆசனங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியது இந்தப் பிளவுக்குக் காரணமான புலம்பெயர் தேசத்தினர் தான். இப்போது அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பாடான வகையில் செயற்படுவது போன்ற சந்தேகம் இவர்கள் மீது ஏற்படுகிறது. இந்தியாவைப் பகை நாடு என்று விரோதித்துக் கொண்டும், தமிழரின் உரிமைகளுக்காக ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும், யாதார்த்த நடைமுறையுடன் அணுகுவோரைத் துரோகிகள் என்றும் பட்டம் கட்டுவதைவிட இவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது? தாயகத்தில் விடுதலைப் புலிகள் அழிவுக்குப் பிறகு இவர்கள் யாரைத் தான் விட்டு வைத்தார்கள். எல்லோரையுமே துரோகிகளாக்கியது தான் மிச்சம். ஆக தமிழீழம் என்பது துரோகிகளின் நாடு என்றாகி விட்டது. இது தமிழர்களின் நாடு இல்லை. அப்படித் தான் இருக்கிறது இவர்களின் கதை. உண்மையைப் பேசுவோரும் துரோகிகள்- அதை எழுதுவோரும் துரோகிகள்- ஆனால் உண்மையை ஏற்க மறுப்போர், ஏற்கவிடாமல் தடுப்போர் தான் இவர்களைப் பொறுத்தவரையில் இன்று தியாகிகள். இந்தளவுக்கும் அவர்கள் தாயகத்து மக்களுக்காக புலம்பெயர்நாடுகளில் எதைச் சாதித்திருக்கிறார்கள்? புலிகளின் அழிவுக்குப் பிறகு ஒன்றுபட்டு உழைத்திருக்க வேண்டிய புலம்பெயர் சமூகத்தைப் பிளவுபடுத்தி இன்று இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் இவர்கள் சாதித்திருப்பது எதனை? இன்று யார் யாரோ எல்லாம்- யார் யாரையோ எல்லாம் கேவலப்படுத்துவதும், துரோகி என்பதும் சர்வசாதாரணமாகி விட்டது. இருபது முப்பது ஆண்டுகளாக விடுதலைக்காகப் போரிட்டவர்களும், போராட்டத்தை தோளில் சுமந்தவர்களும் கூட இவர்களால் துரோகிகளாக்கப்பட்டு விட்டனர். காரணம் சுயலாபம். அதுமட்டுமன்றி இவர்கள் இப்படி செயற்படுவதன் மூலம் சாதிக்க நினைப்பது தமிழின உரிமைப் போராட்டத்தை வீறுகொள்ள வைப்பதற்கல்ல. இதை அவர்களின் செயற்பாடுகளே உணர்த்துகின்றன. இவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்படுகிறார்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது. புலிகளில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள், அவர்கள் யாரைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற அச்சொட்டான தகவல்களெல்லாம் இவர்களுக்கு வருகிறதென்றால்- அது சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்குவோரால் தான் முடியும், புலம்பெயர் தேசத் தமிழர்களில் ஒருபகுதியினர் இப்படிதான் மாறித் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் மக்களிடம் வருவது இயல்பு. தாயகத்தில் என்ன நடக்கப் போகிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே சரியாகத் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து அவர்களை வழிநடத்த முற்படுவது முட்டாள் தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை அறிவுபூர்வமான ஒரு கட்டமைப்பு தாயகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காக உருவாக வேண்டியது காலத்தின் கடடாயம். இதற்கு முட்டுக்கட்டை போடுவதும், சேற்றைவாரி இறைப்பதும் தேசவிடுதலையை நிராகரிப்பவர்களின் செயலாகவே இருக்கும். அதற்கு விரோதமானவர்களாகவே அவர்களைக் கருதநேரிடும். இப்படி இரண்டுபட்டு நின்று நாம் மோதிக் கொண்டிருந்தால் எம்மையாரும் கணக்கில் எடுக்காத நிலை விரைவில் வரும். அதைத்தான் சிங்கள அரசு விரும்புகிறது. சிங்கள அரசின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதே எம்பணியாக இருக்கப் போகிறதா? என்பதை புலம்பெயர் தேசத்து உறவுகள் அனைவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காத்தல் கடமை என்ற தத்துவக் கவிஞனின் வரியை வாழ்வாக்கியவர்கள் வாருங்கள் தமிழர்களே வாழ்வா சாவா துரோகத்தை ஒருகை பார்ப்போம்…. மண்ணை இன்னும் நேசிப்பவன் அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக