சனி, 15 மே, 2010

உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா?


முள்ளிவாய்க்கால் மண் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை மட்டும் விழுங்கவில்லை. தமிழரின் ஆயுதபலம்- அரசியல்பலம்- இராஜதந்திரம் என்று அடிப்படைப் பலங்கள் அத்தனையையும் அங்கு தொலைத்து விட்டே வந்தோம். தமிழ்மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்கு மூன்று தசாப்த வரலாறு இருந்தது. ஓரிரண்டு பேரெனத் தொடங்கிய ஆயுதப் போராட்டம்-
கடல், தரை, வான்படையென்று விரிந்து பரந்து- கிளை பரப்பும் அளவுக்கு விருட்சமாக மாறிய ஒன்று. சூறாவளியில் சிக்கியது போல அந்தப் பெருவிருட்சம் ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் உருக்குறைலந்து போனது எப்படி? இன்றும் கூட இதைக் கற்பனையா என்று எண்ணாதவர்களில்லை. ஏனென்றால் அப்படியானதொரு பலமான நிலையில் தான் தமிழரின் ஆயுதப்போராட்டம் இருந்தது. உலகத்துக்கே சவால் விடும் அளவுக்கு அது வளர்ந்திருந்தது. அத்தனையுமே ஒரு வருடத்துக்கு முன்னர் இல்லையென்றாகிப் போனது. இந்த ஒரு வருடத்துக்குள் நாம் எப்படியெல்லாம் நாயாய் அலைக்கழிக்கப்படுகிறோம்- மிதிக்கப்படுகிறோம். ஆயுத பலத்தோடு இருந்தபோது நடக்காத எத்தனையோ காரியங்கள் இப்போது நடக்கின்றன. இது எப்படிச் சாத்தியமானது? திருப்பியடிக்க ஆயுதபலம் தமிழரிடம் இல்லையென்ற துணிவில் தானே. தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் தோல்வி- அதுதான் எமது வருங்காலப் அவலங்களுக்கான திறவுகோலாக அமைந்து விட்டது. இது எப்படி நடந்தது? முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய - ஆராயப்பட வேண்டிய விடயம் இது. யார் மீதும் சேறு பூசுவதற்காக அல்ல. எம்மை நாமே திருத்திக் கொள்வதற்காக- எமது பயணத்தை சரியான முறையில் தீர்மானித்துக் கொள்வதற்காக. ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகிறது. இந்தக் காலப்பகுதியில் நாம் ஏன் முள்ளிவாய்க்கால் மண்ணில் வீழ்ந்து போனோம்- மண்டியிட்டோம் என்று ஆய்வு செய்ய முன்வரவில்லை. போரியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, இராஜதந்திர ரீதியாக- பொருளாதார ரீதியாக நாம் விட்ட தவறுகள் என்ன என்று கண்டுபிடிக்க முனையவில்லை. இவற்றின் ஒட்டுமொத்த விளைவே எமது விடுதலைப் போராட்டத்தின் பின்னோக்கிய சுழற்சிக்குக் காரணம். இந்த ஆராய்ச்சி எதற்கு எல்லாம் முடிந்து போன பிறகு என்ற மெத்தன மனேபாவமே எம்மை எப்போதும் பின்நோக்கித் தள்ளி வருகிறது. எமக்குத் தேவையானது- சட்டத்தின் முன்பாக நடத்தப்படும் தண்டனை கொடுப்பதற்கான விசாரணையல்ல. எமது பாதையை- பயணத்தை செப்பனிட்டுக் கொள்வதற்காக செய்ய வேண்டிய ஒன்று. இது காலத்தின் கட்டாயம். இந்த இடத்தில் நாம் சுயபரிசோதனையைச் செய்து கொள்ளவில்லை என்றால் எமது அடுத்தடுத்த சந்ததிகளும் சிங்களதேசத்துடன் போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். அதற்குக் காரணமாக இருக்கப் போவது சிங்கள தேசமல்ல- நாமே தான். இனிமேல் நாம் எப்படிச் செயற்பட வேண்டும்- எப்படிச் செயற்பட்டதால் தோல்வி கண்டோம் என்று ஆராய்ந்து பார்ப்பது ஒன்றும் தப்பில்லை. ஆனால் அது யாரையும் நோகடிப்பதாகவோ- களங்கப்படுத்துவதாகவோ இருந்து விடக் கூடாது. கூட்டுப் பொறுப்பு என்பது அவசியம். அது தான் புலிகள் இயக்கத்தை இந்தளவுக்கு பாரிய விருட்சமான வளர்த்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்துக்குள் இந்த கூட்டுப் பொறுப்பு மனோபாவம் எம்மிடம் இல்லாது மறைந்து போனது. ஆளையாள் குற்றம்சாட்டி ஆய்வு செய்வதே எமது வேலையாகியுள்ளது. இப்படிப்பட்ட ஆய்வுகளின் மூலம் எம்மால் எதையும் சாதிக்க முடியாது. வரலாற்றில் இன்னமும் நாம் பின்தள்ளப்படுவதற்கே காரணமாக அமையப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக