சனி, 15 மே, 2010

அவசரகாலச்சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியை உலகின் எந்தவொரு நாடும் ஜனநாயக நாடாகக் கருதுவதில்லை.

ஏழாவது நாடாளுமன்றம் முதலாவதாக விவாதித்து நிறைவேற்றிய தீர்மானம் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அங்கீகாரம் தான். அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கன்னி உரை நிகழ்த்திய நாமல் ராஜபக்ஷ அவசரகாலச்சட்டத்துக்குத் தன்னைவிடவும் வயது அதிகம் என்று கூறியிருந்தார். ஆனால் அதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால் நாடு சுதந்திரமடைந்த பின்னான 62 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் அவசரகாலச்சட்டத்தின் கீழேயே ஆட்சி செய்யப்பட்டுள்ளது என்பதுதான்
. அவசரகாலச்சட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சியை உலகின் எந்தவொரு நாடும் ஜனநாயக நாடாகக் கருதுவதில்லை. இந்தவகையில் இலங்கை ஜனநாயக நாடு என்ற தகைமையை எப்போதோ இழந்து விட்டது. அவசரகாலச்சட்டம் என்பது அசாதாரண சூழலில் பின்பற்றப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்ட கடுமையான சட்டவிதிகளை கொண்ட ஒன்றாகும். அதுவே இப்போதும் இலங்கையின் நடைமுறையில் இருக்கிறது. புலிகளின் முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் சரி, அதற்கு முந்திய ஜே.வி.பி கிளர்ச்சிகளும் சரி, இந்த அவசரகாலச்சட்ட ஆட்சிக்கு நியாயம் கற்பித்து வந்தன. ஆனால் இப்போது புலிகளும் இல்லை. ஜே.வி.பி.யின் ஆயுதப்புரட்சியும் இல்லை. போர்முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை நீடித்துள்ளது. புதிய அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளின் ஆவலாகவும் இருந்தது. ஆனால், இந்த விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. ஆனாலும் அரசாங்கம் கடந்தவாரம் வழக்கத்துக்கு மாறாக அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்கு இரண்டு நாட்களை ஒதுக்கியிருந்தது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரின. ஜெனரல் சரத் பொன்சேகா அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான தருணம் வந்து விட்டதாகக் கூறினார். அத்துடன் அசாதாரண சூழலில் நடைமுறைப்படுத்தப்படுவதால் தான் அதற்கு அவசரகாலச் சட்டம் என்ற பெயர் இருப்பதாகவும், எப்போதும் அதையே வைத்து ஆட்சி செய்வதானால் இந்தச் சட்டத்துக்கு வேறு பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் அவர் கிண்டலாகக் கூறினார். ஒரு முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் இப்போது அவசரகாலச்சட்டம் தேவையற்றது என்றுதான் உணர்வதாகவும் அவர் கூறியிருந்தார். அதுபோலவே எதிர்க்கட்சியினர் அனைவருமே அவசரகாலச்சட்டம் தேவையற்றதென்றும் அதை நீக்க வேண்டும் என்றும் தமது உரையின் போது குறிப்பிட்டனர். அவசரகாலச் சட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகள் துணிந்து விட்டதாக கருதியவர்களுக்கு பின்னர் ஏமாற்றமே மிஞ்சியது. விவாதத்தில் உரையாற்றியபோது அவசரகாலச் சட்டத்தை எதிர்ப்பதில் காட்டிய அக்கறையை எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பின் போது காண்பிக்கவில்லை. ஜே.வி.பியோ, சரத் பொன்ஸேகாவோ ஐ.தே.கவோ, முஸ்லிம் காங்கிரசோ இதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருந்து வெளியேறி அதற்கு அங்கீகாரம் கொடுத்து விட்டனர். அவசரகாலச்சட்டம் குறித்து கடுமையாகப் பேசும் மனோகணேசனின் சகோதரர் கூட அதை எதிர்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.க.வின் சார்பில் தெரிவான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஸ்ரீரங்கா ஆகியோர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். அவசரகாலச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்காத ஒவ்வொருவரும் ஒரு நியாயத்தை தூக்கிப் பிடிக்கலாம். ஆனால், இதைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருந்திருந்தால், அதைச் செய்ய முயற்சித்திருப்பார்கள். அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரும் ஒவ்வொருவருக்கும் அதைச் சாத்தியமான வழிகளில் தோற்கடிக்க முனைய வேண்டும் என்ற உளப்பூர்வமான விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. இதை இவர்களின் இரட்டைவேடப் போக்கில் இருந்தே உணர முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கூட 14 எம்.பிகள் இருக்கின்றனர். ஆனால் 12 பேரே அந்த நேரத்தில் சபையில் இருந்துள்ளனர். ஏனைய இருவரும் எங்கு போயினர் அவர்களுக்கு அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற அக்கறை இல்லையா? இது தமிழ் மக்களை அதிகம் துன்பப்படுத்தும் சட்டம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள் இந்தச் சட்டம் விவாதத்துக்கு வருகிறது என்று தெரிந்திருந்தும் ஒதுங்கி நின்றதற்கு எந்த நியாயத்தையும் கூற முடியாது. அவசரகாலச்சட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. ஆனாலும், 1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகள்தான் தளர்த்தப்பட்டுள்ளனவே தவிர, பிரதான சட்டத்தில் எந்த திருத்தம் செய்யப்படவில்லை. குறிப்பாக, படையினருக்கும் பொலிஸ் அதிகாரங்களுக்கும் இந்தச் சட்டம் இன்னம் வழங்குகிறது. படையினர் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தில் இப்போதும் அதிகாரங்கள் உள்ளன. போரற்ற சூழல் நிலவும்போது படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை எந்தவொரு நாடுமே விரும்பாது. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே குறியாக உள்ளது. அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கூறுகின்ற காரணம் வியப்பானது. உள்நாட்டில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டபோதும் வெளிநாடுகளில் இன்னமும் அவர்கள் உயிர்ப்புடன் இயங்குகின்றனர் என்றும் இதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்தாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. வெளிநாடுகளில் இயங்கும் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் உள்நாட்டில் அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் என்ன தொடர்பு என்பது புரியாத புதிராகவே உள்ளது. எப்படியோ ஏதாவது காரணத்தைச் சொல்லி அவசரகாலச்சட்டத்தை நீடித்துக் கொள்வதிலேயே அரசாங்கம் குறியாக உள்ளது. அவசரகாலச்சட்டத்தின் மூலம் ஆட்சியை நடத்திப் பழக்கப்பட்டுப் போன அரசாங்கத்தினால் சாதாரண சிவில் சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்துவது கடினமான காரியமாக இருக்கலாம். அதாவது கையைக் கட்டிக் கொண்டு ஆட்சி செய்வதற்கு மனமில்லாதிருக்கலாம். அவசரகாலச்சட்டத்தின் மூலம் கிடைக்கின்ற வரையறையற்ற சிறப்பு அதிகாரங்கள் அரசாங்கத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறதோ இல்லையோ சிலரின் உளத்திருப்திக்கு காரணமாக அமைந்து விடுகிறது. அவசரகாலச்சட்டத்தை நீக்கி நாட்டில் இயல்பான சூழலை உருவாக்காமல் அரசாங்கம் இனமுரண்பாடுகளைக் களைவதற்கு எடுக்கும் எந்த முயற்சியுமே வெற்றி பெறப் போவதில்லை. ஏனென்றால் அவசரகாலச்சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இன்னமும் தமிழ்மக்களைப் பாதித்து வருகின்றன. அவர்களை இரண்டாந்தரக் குடிகளாக நடத்துவதற்குத் துணை போகின்றன. எனவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் அவசரகாலச்சட்டத்தை நீக்குவது முக்கியமானது. அதைச் செய்வதற்கு அரசாங்கம் முன் வருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக