சனி, 15 மே, 2010

எல்லாத் தமிழ்க் கப்பல்களும் ஓடிச்செல்ல அரசியல் என்ற சமுத்திரத்தில் போதிய இடம் இருக்கிறது..


வாழ்க்கை ஒரு போர்க்களம்.. களமிறங்கிவிட்டால் எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் எதிர்ப்புக் கணைகள் சீறிப்பாய்ந்து வரும்.. அந்தப் பெரும் போர்க்களத்தை ஒரேயொரு அம்பை மட்டும் வைத்துக் கொண்டு எதிர் கொள்ளக் கூடாது. பாரதக்கதையில் நாகாஸ்த்திரத்தை ஒரேயொரு தடவை மட்டுமே எய்வேன் என்று வாக்குக்கொடுத்துவிட்டு, அதையே நம்பி போர்க்களம் வருகிறான் கர்ணன். அவனுடைய இலக்கு குறி தவறிவிட போரின் வெற்றி திசை மாறுகிறது.. கர்ணன் தேர்க்காலில் சிக்குண்டு மரணிக்கிறான்.
 ஒரேயொரு தடவை மட்டும் எய்யும், ஒரேயொரு அஸ்த்திரத்தை நம்பி ஒரு காலமும் போர்க்களம் போய்விடாதே என்பதுதான் கர்ணனின் மரணம் சொல்லும் செய்தி.. அதுபோல.. வாழ்க்கை ஓர் ஆழ்கடல் பயணம்.. ஒரேயொரு படகை நம்பி ஒரேயொரு வழியில் அந்தப் பயணத்தை மேற்கொள்ளக் கூடாது. அன்று.. டைட்டானிக் என்ற பிரமாண்டமான கப்பல் பனிப்பாறையில் மோதி தாழ்ந்தது உலகறிந்த கதை. ஆபத்து வந்தால் பயணிகள் எல்லோரையும் ஏற்றிச் செல்லக்கூடிய தற்பாதுகாப்புப் படகுகள் அங்கு போதியளவு இருக்கவில்லை. டைட்டானிக் பெரிய கப்பல்தானே அது ஒரு காலமும் உடையாது என்ற நம்பிக்கையுடன் பயணித்த மடமைச் செயலை எண்ணி வருந்திய கப்பல் தலைவன் கடைசியில் டைட்டானிக்கோடு சேர்ந்து தானும் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்கிறான். புதுமாத்தளன் நிலப்பரப்பை மீண்டும் ஒரு தடவை டைட்டானிக் கப்பலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.. அதுவும் டைட்டானிக் கப்பல் போலவே காட்சி தரும்… டைட்டானிக் கப்பல் நீரில் அமிழ்ந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை ஜேம்ஸ் கமரோன் அழகிய திரைப்படமாக தயாரித்து ஆஸ்கார் பரிசும் பெற்றிருந்தார். அந்தத் திரைப்படத்தில் வரும் கடைசிக் காட்சிக்கும், புதுமாத்தளன் கடைசிக் காட்சிக்கும் இடையே நிகழ்வுகளில் பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஆனால்.. டைட்டானிக் என்ற கப்பலும், கப்பல் வடிவான புதுமாத்தளன் நிலப்பகுதியும் அழிவின்போது சந்தித்த தாக்கங்களில் ஒரு வேறுபாடும் இருக்கிறது. டைட்டானிக்கில் இருந்து தப்பியவர்களை சுற்றவர நின்று யாரும் சுட்டுக் கொன்று கடலில் தள்ளவில்லை. ஆனால் புதுமாத்தளனில் இருந்து தப்பிய படகுகள் எல்லாம் மூழ்கடிக்கப்பட்டன, ஓடியவர்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். டைட்டானிக் கப்பல் தாழ்ந்த செய்தி தெரிந்திருந்தால் உலக நாடுகள் ஓடிச் சென்று காப்பாற்றியிருக்கும்.. ஆனால் புதுமாத்தளன் என்ற கப்பல் தாண்டு போகும் செய்தி அவர்களுக்குதஇ தெரியும், ஆனால் அவர்கள் தாழ வேண்டும் என்று மௌனமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்கள், இதுதான் வேறுபாடு.. மௌனித்து நின்ற உலகத்தால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் என்ற வஞ்சப் பதிவை புதுமாத்தளன் பெற்றுக் கொண்டது. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, எதிர்காலத்திற்காக புதிய திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். எப்படி…. ? தமிழீழம் என்ற ஒற்றைக் கப்பல் புதுமாத்தளனில் மூழ்கடிக்கப்பட்டது… தப்பியேற நம்மிடம் புதிய கப்பல் எதுவும் இல்லை.. புலிகள் என்ற விடுதலை ஆயுதம் அங்கு மௌனிக்க வைக்கப்பட்டது.. வேறு போராட்ட ஆயுதம் நம் கையில் இல்லை.. இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்… நடந்த தவறுகளை மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.. அது தன்னுடைய பணியை தொடர வேண்டும்… இதுவரை உலக அறிஞர் மட்டத்திலான தோல்வி மதிப்பீட்டு ஆய்வுக்குழுவை நாம் நியமிக்கவில்லை.. அப்படியொரு குழுவின் ஆய்வறிக்கை இருந்தால்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான புதிய வழிகாட்டி நூல் வரும்… அதைக்கூட செய்யாமல் அழுதால் நம்மை யார் மதிப்பார்கள் ? அந்த மதிப்பீட்டை வைத்துத்தான் நாம் அடுத்த கட்டத்திற்குள் போயிருக்க வேண்டும்.. மக்கள் விரக்தியிலும், கண்ணீரிலும் கிடக்க பல சம்பவங்கள் நடந்துவிட்டன.. இருந்தாலும் நாம் இப்போதாவது சில உண்மைகளை உணர்ந்தாக வேண்டும்.. ஒன்று… நமது இலக்கை அடைவதற்காக பல அறிவியல் ஆயுதங்களை உருவாக்க வேண்டும், அதே போல பயணிக்க பல கப்பல்களையும் வடிவமைக்க வேண்டும். ஓர் ஆயுதம் உடைந்து போனால் பணி நின்றுபோகாமல் தொடர்வதற்கு கையில் இன்னொரு ஆயுதம் அவசியம், அதுவும் முறிந்துவிட்டால் அதற்கு அடுத்த ஆயுதம் அவசியம்… அதுபோல ஒரு கப்பல் மூழ்கிவிட்டால் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் அடுத்த கப்பலில் ஏறக்கூடியவாறு நம்மைச் சுற்றி பல நூறு புதிய கப்பல்களை உருவாக்கி ஓடவிட வேண்டும். எத்தனை கப்பல்கள் தாழ்ந்து போனாலும் காரியமில்லை நமது வெற்றிகரமான பயணம் தொடரும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். தமிழர்களால் உருவாக்கப்படும் அனைத்துக் கப்பல்களையும் அவைபாட்டில் ஓட அனுமதியுங்கள்.. மேலும் என்னென்ன புதிய கப்பல்கள் வருமோ அவையெல்லாம் வரட்டும், எல்லாத் தமிழ்க் கப்பல்களும் ஓடிச்செல்ல அரசியல் என்ற சமுத்திரத்தில் போதிய இடம் இருக்கிறது.. நமது கப்பல் மட்டுமே ஓட வேண்டுமென நினைக்கக் கூடாது, நினைத்தால் சந்தேகமே வேண்டாம் மறுபடியும் புதுமாத்தளன்தான் நமக்குப் பரிசாகக் கிடைக்கும். ஒவ்வொரு தமிழனும் தனது அறிவுக்கு எட்டியபடி கப்பல்களை உருவாக்கி பயணங்களை மேற் கொள்ள வேண்டும். அதேவேளை ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடைவதல்ல நமது நோக்கம் என்ற தெளிவு அனைவருக்கும் வரவேண்டும். தமிழர்களை ஒற்றுமைப்படாத இனமாக கடவுள் படைத்துவிட்டானே என்று எண்ணிக் கண்ணீர் விடாதீர்கள்.. சேர்ந்து நின்று வெல்ல ஆரியனையும், பிரிந்து நின்று வாழ திராவிடனையும் இறைவன் படைத்துள்ளான் என்று எண்ணுங்கள்.. தமிழன் ஒற்றுமையாக வேண்டியதில்லை என்பது இறைவனின் விருப்பமே.. தமிழுக்கு பின் தோன்றிய எத்தனையோ இனங்கள், மொழிகள் எல்லாம் ஒற்றுமையாக இருந்தும் அழிந்துவிட்டன, ஆனால் ஒற்றுமை இல்லாத தமிழ் மட்டும் எப்படி இத்தனை காலமாக அழிவடையாது வாழ்கிறது.. இன்று ஆங்கிலத்தைப் போல இணையத்தையே தமிழ் எப்படி வெற்றி கொண்டது எப்படி என்றும் எண்ணிப்பாருங்கள்.. ஆம்… பிரிந்து நின்று அவரவர் தகுதிக்கு ஏற்ப தனித்தனிக் கப்பல்களை உருவாக்கும் ஆற்றலாளரையே இறைவன் தமிழராகப் படைத்துள்ளான். இல்லாவிட்டால் தமிழரை இப்படி நாடு நாடாகப் பிரிய வைக்க இறைவன் துணிந்திருக்க மாட்டான் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.. தமிழர் பிரச்சனையைத் தீர்க்க ஏற்ற கப்பல்களை ஒவ்வொரு புலம் பெயர் நாட்டின் சூழலுக்கும் அமைவாக உருவாக்குங்கள்.. இதுதான் நீங்கள் புலம் பெயர்ந்த காரணம் என்பதை உணருங்கள்.. டேனிஸ்காரரும், பிரான்சியரும், ஆங்கிலேயரும், அமெரிக்கரும் நமது பிரச்சனையை தீர்க்கப் புறப்பட்டால் அதை மூழ்கடிக்கதஇதான் முடியுமா ? பிரிந்து பல திசைகளில் நகரும் கப்பல்களை எதிரியால் அழிக்க முடியாது என்பதே தமிழர் வாழ்வின் வெற்றிக்கான இரகசியமாகும்.. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு.. கண்களை துடைத்துக் கொண்டு உங்கள் நாட்டிலும் ஒரு புதிய கப்பலைச் செய்ய ஏராவை ஓடுங்கள்.. செய்துவிட்டுப் பாருங்கள்.. பகைவனே உங்கள் வெற்றிச் செய்தியை சொல்ல வீடுதேடி வருவதைக் காண்பீர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக