செவ்வாய், 18 மே, 2010

தேசியத்திற்காய் உழைக்க நினைப்போர் எம் மக்களுக்கு கைகொடுங்கள் – வன்னி மக்கள் பேரவை!

வன்னியில் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாத துயர்களைச் சுமந்த எமது மக்கள் சிந்தும் இரத்தக் கண்ணீரைத் துடைக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வன்னிமக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு: இன வன்முறையின் முழுமையான வடிவம் நேரடியாக ஒப்பேற்றப்பட்டு ஒரு ஆண்டு இன்றுடன் நிறைகிறது. எத்தனை முடியுமோ அத்தனை கொடுமைகளும் குறித்த சிறிய நிலப்பரப்பில் வைத்து இலட்சக்கணக்கான மக்கள் மீது திணிக்கப்பட்டன. 40ஆயிரத்தினைத் தாண்டிய உயிர்ப்பலியெடுப்புக்கள் 75ஆயிரத்தினைத் தாண்டிய காயமடைதல்கள், பட்டினி அவலம், அநாதரவாக்கப்பட்டமை என மிகப் பெரும் அநீதி
 மிகக் குறுகிய நாட்களில் அரங்கேற்றப்பட்டது. பாதுகாப்பு வலயம் எனக் கூறி அங்கு வரவளைக்கப்பட்ட மக்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இன்னமும் உறவுகளைத் தேடித் தேடியே வாழ்க்கையை நகர்த்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தாயகத்தில் வாழ்கின்றன. குறித்த உறவுகள் உயிருடன் உள்ளனரா? இல்லையா?, அவர்கள் இல்லை என்ற செய்தி தெரிந்தால் கூட அவர்களுக்கான பிதிர்க்கடன்களையோ, பிரார்த்தனைகளையோ மேற்கொள்ள முடியும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தினைச் சிந்திக்க முடியாதவகையில் ஒரு இலட்சம் வரையான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். மீள் குடியேற்றம் என்ற பெயரில் சொந்தக் கிராமங்களுக்கு மக்கள் அனுப்பப்பட்டாலும், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் 6 தகரங்களுடனும், இரண்டு தறப்பாள்களுடனுமே வாழ்வை முன்னெடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அள்ளி அள்ளி வழங்கினாலும் குறையாத வளம் நிறைந்த வன்னி மண்ணில் எல்லாவற்றையும் இழந்த நிலையில் மீண்டும் வாழ்வைச் செப்பனிடுவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் எமது மக்களுக்குச் செய்து கொடுக்கப்படவில்லை. மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை எமது மீனவர்கள் மீன்பிடிக்கின்ற நாயாறு உட்பட்ட பகுதிகளில் சிங்கள மீனவர்கள் வாடி அமைத்து மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பூநகரிக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை ஏற்படுத்தப்படும் அதேவேளை மீன்பிடிப்போருக்கு பாஸ் நடைமுறை மீண்டும் கட்டவிழ்த்துவிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. எந்தவித அடிப்படை வளங்களும் அற்றநிலையில் கல்வி பயின்று நாட்டின் முன்னணி மாணவர்களாக திகழ்கின்ற வன்னி மாணவர்கள் இன்று தமது கல்வியைத் தொடர்வதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். வன்னி அகதி மாணவர்கள் என்ற காரணத்தினால் தாயகத்தின் ஏனைய பல பாடசாலைகளில் இருந்து ஓரங்கட்டப்படுகின்ற குறித்த மாணவர்கள் தமது கல்வியினை தமது பாடசாலைகளில் தொடர முற்பட்டாலும் அவர்களுக்கான கற்றல் வசதிகள் முழுமையாக அற்றநிலையே காணப்படுகின்றது. வன்னியில் நிர்வாகக் கட்டமைப்புக்களில் சிறப்பாக பணியாற்றி அதனூடான வருமானத்தில் தங்கள் குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிகளை ஈடுசெய்த இளைஞர்கள், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களில் மறுக்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அவர்களுக்கான ஊதியம் மிகக் குறைவாகவே வழங்கப்படுகின்றது. குழந்தைகளுடன் சரணடைந்த போராளிகளின் குடும்பங்கள் பலவற்றின் தொடர்புகள் இதுவரையில் இல்லை. குறித்த குடும்பங்களின் குழந்தைகள், பிள்ளைகள் எங்குள்ளனர்? உயிருடன் உள்ளனரா? அல்லது கொல்லப்பட்டுவிட்டனரா? என்ற கேள்விகள், குறித்த குடும்பங்களின் உறவினர்களின் மனங்களில் இன்றுவரை மாறாத துயரத்தைத் தந்தவண்ணமே உள்ளன. தடுப்பில் உள்ள போராளிகளை உறவினர்களைச் சந்திக்கவிடாது தடுத்து அவர்களை காட்டுப்பகுதிகளுக்கும், சிங்களப் பகுதிகளுக்கும் அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்லாயிரம் போராளிகளின் நிலைகுறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதனைவிடவும் போராளிகளை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பப் பெண்கள் குடும்பத் தலைவர்கள் வீரச்சாவடைந்தோ அல்லது தடுத்துவைக்கப்பட்டோ உள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளுடன் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுவதை தெரிந்தவர்களிடம் ‘எங்களுக்கு விடுதலைப்புலிகளை விட்டால் யாரைத் தெரியும்’ என்று சொல்லிக் கதறிக் கண்ணீர் விடும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெறுகின்றன. அநாதரவான நிலையில் எடுக்கப்பட்டு வன்னியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இன்னமும் அநாதைகள் என்ற நிலையில் திக்குத் தெரியாமல் சிதறிப்போயுள்ளனர். எமது மக்கள் முள்ளிவாய்க்காலின் மற்றொரு வடிவத்தினை தற்போதும் அனுபவித்து வருகின்றனர் என்ற உண்மையை எமது தேசத்தின் மீதும் எமது மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம். எமது மக்களுக்கு இருக்கின்ற உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடிந்தவர்கள் முடிந்தவரையில் உதவிபுரிய முன்வரவேண்டும், முடிந்தால் ஒவ்வொரு கிராமத்தினையோ, ஒவ்வொரு சிறுவர் இல்லங்களையோ, ஒவ்வொரு பாடசாலையினையோ, ஒவ்வொரு குடும்பங்களையோ தத்தெடுத்து மேம்படப் பாடுபடவேண்டும் என அன்புரிமையுடன் வன்னிமக்கள் பேரவை கேட்டுக்கொள்கின்றது. தேசியத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பில் இருப்பவர்களே! உங்களுக்கான அன்பான வேண்டுகோள், போருக்காக ஆரம்பம் முதல் இறுதிவரை உழைத்த உங்கள் உறவுகளை நீங்கள் நிமிர்த்துவதே நீங்கள் தேசியத்திற்கும் தேசத்திற்கும் செய்யும் அளப்பரிய பணியாகும் என நாங்கள் நம்புகின்றோம். எங்கள் உறவுகளின் இரத்தக்கணீர்களைத் துடைக்க அணிதிரண்டு வருவீர்கள் என மிகப் பெரிய அவலத்தினை எதிர்கொண்டு ஓராண்டு நிறையும் இன்றைய நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி. 
வன்னி மக்கள் பேரவை
 18-05-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக