செவ்வாய், 18 மே, 2010

முள்ளிவாய்க்கால் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை ............

அன்று முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழனின் கதை முடிந்தது என்று முழக்கமிட்டவர்களுக்கு நேற்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம் பதில் சொல்லிருக்கும். சொல்லியிருக்கவேண்டும்…. ஆம்…ஈழத்தமிழனின் நாடு கடந்த தமிழீழ அரசவையின் முதல் அமர்வு வெற்றிகரமாக நேற்று ஆரம்பமாகி இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றது.
 எரிந்த சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் சக்தி பீனிக்ஸ் பறவைக்கு மாத்திரமல்ல ஈழத்தமிழனுக்கும் உண்டு என்று எங்களை அழித்துவிட்டோம் என்று கொக்கரித்தவர்களுக்கு புரிந்திருக்கும். எத்தனையோ நாடுகள் பார்த்திருக்க ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்க நிர்வாகமும் தனது செய்மதிகள் ஊடாக கவனித்துக்கொண்டிருக்க ஈழத் தமிழன் கொத்துக்கொத்தாக சிங்களப் பேய்களால் கொலைசெய்யப்பட்டு இன்று ஓராண்டு ஆகிவிட்டது. அன்று அந்தச் சிங்களப் பேய்களை ஏன் என்று கேட்க ஒருவரும் முன்வரவில்லை. நாடுகளுக்கிடையில் அமைதி ஏற்படுத்தவென உருவாக்கப்ட்ட ஐக்கிய நாடுகள் சபை கூட அந்தக் கொலைகளுக்கு மறைமுக ரீதியாக உதவி புரிந்தமையை என்றுமே ஈழத்தமிழன் மறக்கமாட்டான். எங்கள் நியாய ரீதியான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து அதைக் கொலை செய்துவிட்டது இந்தச் சர்வதேசம். இப்பொழுது நாங்கள் ஆயுதங்களை மௌனித்து விட்டு ஜனநாயக ரீதியாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்கின்றோம். அதற்காகவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு. எத்தனை கொடூரங்களைப் புரிந்து எங்களின் எத்தனை உறவுகளை அழித்து சர்வதேச நாடுகளில் நாங்கள் செய்த அகிம்சைப் போராட்டங்களை மிதித்து முள்ளிவாய்க்காலில் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். எங்களின் உரிமைகளை மிதித்தமையினால்தான் நாங்கள் உரிமைப் போராட்டம் நடத்தினோம். ஆனால் எங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளைத் தராமல் எங்களின் நியாயமான போராட்டத்தை இந்தச் சர்வதேசம் கபடத்தனமாக சிங்களத்துடன் சேர்ந்து நின்று அழித்துவிட்டது. ஆனால் இனி எல்லாவற்றுக்கும் சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஐ.நாவின் விதிகளுக்கு அமைவாக-சொந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக நாடு கடந்து நாங்கள் அமைத்துள்ள அரசை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் முதல்படிதான் நேற்றைய நாடு கடந்த தமிழீழ அரசவையின் முதலமர்வு. உலகத்திற்குத் தானே அதிபதி எனக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவினது அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த-பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா நகரின் சுதந்திர சதுக்க மண்டபத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் அமர்வு நடைபெற்று வருகின்றமை ஈழத் தமிழினத்தின் வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானதொன்றாகும். எந்த நாடு எங்களை முதலில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துத் தடைசெய்ததோ அந்த நாட்டில் எமது அரசவையின் முதல் அமர்வை நடாத்தி சர்வதேச்சின் மூடிய மனக்கதவுகளுக்கு நாங்கள் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கின்றோம். அது வேறு ஒன்றுமல்ல…. எரிந்த சாம்பலிலிருந்து ஈழத்தமிழனும் உயிர்த்தெழுந்து கொண்டுதான் இருப்பான் என்று………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக