செவ்வாய், 18 மே, 2010

முள்ளிவாய்க்கால் – மூச்சடங்கிய இறுதிக் கணங்கள்!

மாபெரும் இலட்சியவாதத்தின் வீழ்ச்சியும் அந்த இலட்சியவாதம் சரித்திரமாகியும் கொண்டிருந்த ஒரு தருணம் அது. நிலைமைகள், நிர்ப்பந்தங்கள், யதார்த்தங்கள், உண்மைகள் என எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவாக்கிய ஒரு நிலவரம் அது. அது இறுதிநாள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வலுமிக்க அமைப்பு
தனது இறுதிக் கணத்தை அன்றுதான் முடித்துக் கொள்கிறது என்று யாரும் எண்ணவில்லை. அந்த அமைப்பின் உயிர் நாடியாகிய துப்பாக்கிகள் அன்றுதான் இறுதியாக முழங்கிக் கொண்டிருக்கின்றன என்று யாரும் நினைக்கவில்லை. அதிலும் அந்தத் துப்பாக்கிகளின் இறுதி வேட்டைத் தீர்த்து, யாரோ ஒரு போராளி அன்று அந்த இறுதிக் கணத்தை உருவாக்கப் போகிறான் என்று எவரும் எண்ணவேயில்லை. எதிரியிடம் மண்டியிடுவதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு மரபு அன்றுடன் முடிவுக்கு வரும் என்றும் யாரும் கருதவில்லை. அந்தச் சயனைட் வில்லைகள் பெறுமதியற்றுப் போகும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு போதும் படையினரிடம் சரணடைய விரும்பாதவர்களும் வன்னிக்கு வெளியே போக முடியாதவர்களும் அன்று தங்களின் விதியை மாற்றிக் கொண்ட நாள் அது. பல புதிர்களும் மரபுகளும் அன்று தகர்ந்தன. விடுதலைக் கருவிகளாக, விடுதலைக்கான குறியீடுகளாக உவமிக்கப்பட்டவையும் கருதப்பட்டவையும் அன்று புதிராகின. அந்த நாள்தான் இறுதிநாள். ‘தனியொரு புலிவீரன் இருக்கும் வரை போரிட்டுக் கொண்டேயிருப்பான்’ என்ற வார்த்தைகள் உண்மையிலேயே யதார்த்தமாகிக் கொண்டிருந்த இறுதிக் கணம் அது. உண்மைக் கணம் அது. மாபெரும் இலட்சியவாதத்தின் வீழ்ச்சியும் அந்த இலட்சியவாதம் சரித்திரமாகியும் கொண்டிருந்த ஒரு தருணம் அது. நிலைமைகள், நிர்ப்பந்தங்கள், யதார்த்தங்கள், உண்மைகள் என எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவாக்கிய ஒரு நிலவரம் அது. எல்லா விளைவுகளினதும் இறுதி விளைவாக அரங்கேறிய ஒரு நாடகம் அன்று நடந்தது. அதை எப்படி விவரிப்பது? அன்று நடந்தவற்றை, அந்தத் துயர வெளியில் நிகழ்ந்தவற்றை எவ்வாறு விவரிக்க இயலும்? கொத்துக் கொத்தாகப் பிணங்கள். குலை குலையாகக் கொலைகள். படுகொலைகள். தற்கொலைகள். வீர மரபைப் போற்றும் விதமாக தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகள். இதெல்லாம் ஒன்றல்ல, இரண்டல்ல. தங்கள் மனதில் வளர்த்துக் கொண்ட அந்த எண்ணங்களுக்கு அவர்களே சாட்சியங்களானார்கள். பல போராளிகளும் தளபதிகளும் தங்கள் உயிரை அங்கே மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுதான் அவர்களுடைய தெரிவு. அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று அவர்கள் கருதியது. அதனால் அவர்கள் அந்த வழியைப் பின்பற்றினார்கள். இதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய போராட்டத்தில் கற்றுக் கொண்டபடி நடந்து கொண்டதாக இருக்கலாம். வன்னி மண்ணை விட்டு அவர்கள் போக விரும்பாதிருக்கலாம். அல்லது எதிரியிடம் சரணடைய மாட்டோம் என்று அவர்கள் கருதியிருக்கலாம். எதுவோ இந்த மரணங்கள் அப்படித்தான் நிகழ்ந்தன. இதைவிட, அன்றைய இறுதி யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டனர். அன்று ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் முடிவுக்கு வரப் போகின்றன. இரண்டு தரப்புத் துப்பாக்கிகளும் கனல்வது நிற்கப் போகிறது. இனி அப்படிக் குருதி சிந்தும் ஒரு நிலை இல்லாமற் போகப் போகிறது. படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரின் முடிவுப் புள்ளி நெருங்கிவிட்டது. அந்த இறுதிக் கணத்தை நோக்கிய போர் உக்கிரமாக நடந்தது. இறுதிக் கணத்தை எட்டும் உச்சம். அது எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடப்பாடுகளையும் இழந்திருந்தது. கட்டுப்பாடுகளையும் கடப்பாடுகளையும் இழந்த எதுவும் எல்லைகளையும் வரையறைகளையும் கொண்டிருப்பதில்லை. அதனால், அந்தக் கணமானது, எல்லா எல்லைக் கோடுகளுக்கும் அப்பால் அந்தர வெளியில் மிதக்கின்ற ஒரு பறவையின் இறகைப் போல, ஒரு காய்ந்த சருகைப் போல இரத்தம் சொட்டச் சொட்ட வன்முறையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த உலகம் என்பது பொய். அத்தனை விழுமியங்களும் பொய். அத்தனை சட்டங்களும் பொய். அத்தனை மனித ஆற்றலும் பொய். எனவே வல்லமை பெற்ற போர் வீரர்கள் தாங்கள் நினைத்ததை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். வேட்டை. மனித வேட்டை. மாபெரும் வேட்டை. அது ஒரு சுடலையாக, வேட்டைக்களமாக, குருதியும் தீயும் புகையும் அனலும் தவிப்பும் தாகமும் முனகலும் ஓலமுமாக அந்த நிலம் கொதித்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் சனங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றாக, ஆனால் வேறு வேறு மனநிலைகளுடன் நின்ற கணம் அது. அப்படி எல்லோரும் ஒன்றாக நின்ற இடமும் அதுவே. வரலாற்றில் அதுவொரு சாத்தியமே அற்றது என்ற விதியை மாற்றி சாத்தியமானது என்று உருவாகிய சந்தர்ப்பம். அப்படியொரு நிலை அன்று, அங்கே – முள்ளிவாய்க்காலில் மட்டும்தான் நடந்தது. அப்படி நிற்கவேண்டிய ஒரு நிலையை யாராலும் விலக்க முடியவில்லை. இப்படி வரலாற்றில் நிகழும் ஒரு அபூர்வ நிகழ்ச்சி அன்று, அங்கே, அந்தக் கொலை நிலத்தில், அத்தனை ஆயிரம் பேருக்குச் சரணாலயமாக இருந்த இடத்தில் நிகழ்ந்தது. பல ஆயிரம் சனங்களுக்குப் பாதுகாப்பளித்த அதே இடம் அதே கணத்தில் பல ஆயிரம் பேரைத் தின்றது. ஆயிரக் கணக்கானவர்களுக்கு ஆறுதலாக இருந்த மையம், நம்பியவர்களையே கைவிட்டது. யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை, முள்ளிவாய்க்காலில் மே 17 ஆம் நாள் அப்படி ஒரு நிகழ்ச்சிப் போக்கின் விதி முற்றுப் பெறும் என்று. இதைப் புலிகளும் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கமும் படைத்தரப்பும் எதிர்பார்க்கவில்லை. சனங்களும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் இப்படியான ஒரு நிலைபற்றிச் சிலர் ஏற்கனவே சிந்தித்து எச்சரிக்கை அடைந்திருந்தனர். ஆனாலும் அது முள்ளிவாய்க்காலில், மே 17 இல்தான் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றபோதும் அந்த நிகழ்ச்சிப் போக்கை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எந்த மதகுருவினாலும். எந்தத் தியாகியினாலும். எந்த வீரனாலும். எந்தப் போராளியாலும். எந்தத் தீர்க்கதரிசியாலும். எந்த அறிஞனாலும். எந்தத் தனவந்தனாலும் அந்த நிகழ்ச்சியின் போக்கை மாற்றிவிட முடியவில்லை. அந்த நிகழ்ச்சிப் போக்கு தன்னிஸ்டப்படி நடந்து கொண்டிருந்தது. அதுதான், எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடப்பாடுகளையும் இழந்திருந்ததே. எல்லா வீரக்கதைகளும் ஒரு தோல்வி நாடகத்துடன் நிறமிழந்து போகும் என்று யார் விதியுரைத்தது? – எல்லாத் தியாகப் பெறுமானங்களும் சிதறிப் போகுமென்றும். ஆனால், அதுதான் நடந்தது. எல்லாப் பதுங்கு குழிகளும் அன்றுடன் தங்களின் ஆயுளை முடித்துக் கொண்டன. ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் அங்கே சமனிலை கொண்டிருந்தன. ஒரு தரப்பின் பாதுகாப்பின்மையும் ஒரு தரப்பின் பாதுகாப்பும் அங்கே உருவாகியது. பலரும் கடந்த காலத்தின் அத்தனை சரி பிழைகளையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். நம்பிக்கைகள் முடங்கிப் போகும் போது உருவாகும் நிர்க்கதி நிலை இருக்கிறதே, அதைவிடக் கொடுமையானது வேறில்லை. ஆனால் அந்த நிலையை, அவர்கள் எதிர்கொண்டனர். கைகளை உயர்த்துவதற்கு ஒரு மன நிலையைத் தயார்ப்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஆனால், அப்படி அந்த மனதைத் தயார்ப்படுத்தவும் தேற்றவும் வேண்டியிருந்தது. சாவா சரணடைதலா என்ற தெரிவு வேறு கண்ணுக்கு முன்னே நின்று கைநீட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலையில், பலர் வன்னிக்கு வெளியே, அந்தப் போர்க்களத்துக்கு வெளியே, அந்தக் கொலை நிலத்துக்கு வெளியே போகத் துடித்தனர். பலர் அது கொலை நிலைமாக இருந்தாலும் அதை விட்டுப் போகமுடியாது தவித்தனர். இதுதான் அங்கே இருந்த யதார்த்தம். சாப்பாடில்லாமல், காய்ந்து வற்றிய – உலர்ந்த மனிதர்கள், நடைப் பிணங்களாக இருந்தவர்கள் தங்களை எந்த விதி மீட்டாலும் பரவாயில்லை என்று காத்திருந்தார்கள். வினோதங்களாகவே இருந்த நாள் அது. விபரீதங்களாகவும் இருந்த நாள் அது. அடுத்து என்ன நடக்கும் என்ற யாருக்கும் தெரியாது. யார் தப்பினார்கள்? யார் செத்து மாண்டார்கள்? யார் எங்கே போனார்கள்? யாருக்கு என்ன நடந்தது? யார் யாருக்கு என்ன நடக்கப் போகிறது? என்று ஒன்றைப் பற்றியும் தெரியாது. எந்தக் கட்டளைகளும் இல்லை. கட்டளைப் பீடம் தகர்ந்து விட்டது. அதை அங்குள்ள நிலைமைகள் ஏற்கனவே உணர்த்தின என்று சொல்கிறார் அந்த நிகழ்ச்சிகளுடன் சம்மந்தப்பட்டிருந்த ஒரு முக்கியமானவர். ஒரு பெரும் வாய், தன் கோரப்பற்களோடு திறந்திருப்பதைப் போல அந்தக் கணம் இருந்ததாக ஒருவர் அந்த நினைவுகளை மீட்கிறார். எதுவும் புரியாத நிலையில் பலர் இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியை, அந்த நிலைமையை அங்கே இருந்த பெண்களின் அழுகையும் குழந்தைகளின் கதறலும்தான் ஏதோ ஒரு வகையில் திருப்பியது போலத் தான் உணருகிறேன் என்ற சொல்கிறார் இன்னொருவர். தீயும் புகையும் இரத்தமும் பிணநாற்றமும் மலநாற்றமும் ஒன்றாக நாசியை நிறைத்தன. ஓலக்குரல்களால் செவி நிரம்பியது. அழுகையும் விசும்பலும் நெருப்பாய் எரிந்தன. ஊழியல்லவா! என்றாலும் விதியின் ரேகைகள் எங்கும் தேங்குவதில்லை. நிலைமை மெல்ல மெல்ல ஒரு திசைக்குத் திரும்பியது. பேராற்றின் திசை திரும்பல். பெருமழையின் இரைச்சல் அடங்கியதைப் போல, அந்தப் பொழிவு நின்று போனதைப்போல, ஆயிரக்கணக்கானவர்கள் நடந்தனர். தொங்கிய தலைகள். குமுறிய மனங்கள். ஆற்றாமையாலும் குற்றவுணர்ச்சியாலும் கொந்தளித்த இதயங்கள். ஒடுங்கிச் சிறுத்த தோள்களோடு நடந்தனர். எங்கே என்று தெரியாத பயணம் சிலருக்கு. எங்காவது போவோம் என்ற எண்ணம் பலருக்கு. துப்பாக்கியால் சூழப்பட்ட உலகொன்றிலிருந்து துப்பாக்கியால் சூழப்பட்ட உலகொன்றுக்கு எல்லோரும் நடந்து கொண்டிருந்தனர். சனங்களற்ற நிலமாக முள்ளிவாய்க்கால் தொலைவில் தகித்துக் கொண்டிருந்தது. புகை. தீ. இரத்தம். பிணக்குவியல். மலநாற்றம். நந்திக்கடலைக் கடந்து திரும்பிப் பார்க்கையில் மேலெழும்பும் புகையின் மத்தியில் -எரிந்த பனைகள் தூரத்தெரிந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக