புதன், 5 மே, 2010

சிங்களக் குடியேற்றம் !

கொக்கிளாய் பறவைகள் சரணாலயப் பகுதியை அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக கடந்த திங்களன்று பறவைகள் சரணாலயத்தின் ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலம் அழிக்கப்பட்டு பெற்றோல் வீசிறப்பட்டு தீவைக்கபட்டுள்ளது. இதன்காரணமாக 2000 தொடக்கம் 3000 வரையிலான தூக்கணாங்குருவிக் கூடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் 1000 ஏக்கர் பகுதியே அழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அவர்கள் இந்த அழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அரசியல்வாதிகளின் பின்புலத்துடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளபட்டதால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் காணப்படும் 13வகையான நாரை இனங்களில் மூன்று வகை இந்தச் சரணாலயத்திலேயே உள்ளன. அத்துடன் பெருந்தொகையான பெலிக்கன் பறவைகளும் வெளிநாட்டுப் பறவைகளும் இந்த சரணாலயத்தில் வசித்து வருகின்றன. மேலும் இந்தப் பகுதியில் ஒரு குட்டியும் 35 யானைகளும் வசித்து வருகின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை அழித்து விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இந்தப்பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொக்கிளாய் சரணாலயத்தில் இருந்து 9கி.மீற்றர் சுற்றாடலில் வசிப்பவர்கள் இந்த அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களில் சில முஸ்லிம் கிராமவாசிகளும் அடங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொக்கிளாய் பாரம்பரிய தமிழ்க் கிராமமாகும். மீன்வளம் நிறைந்த இந்தப் பகுதியில் சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டு அவற்றுக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக