புதன், 5 மே, 2010

"வலை"

இராணுவரீதியாகவும் ,சர்வதேச ரீதியாகவும் பலமான விடுதலை அமைப்பாக பரிணமித்த விடுதலைப்புலிகள் அமைப்பை மக்களிடம் இருந்தும் சர்வதேசத்திடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்த "திட்டம்" தீட்டியது சிறிலங்காவும் சர்வதேச வல்லாதிக்கமும். இதற்கான "நிகழ்ச்சி நிரலில்" முதலில்
 இருந்தது "சமாதானம்" என்ற பலம்மிக்க ஆயுதம்.இந்த பேராயுத்ததினை வழங்கியது நோர்வே. சமாதான புறாவாக செயலில் இறங்கிய நோர்வேயின் செயற்பாடுகள் தமிழ் மக்களை பின்னர் விசனத்துக்குள்ளாக்கியது வேறுவிடயம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நோர்வே , சர்வதேச வல்லாதிக்கங்களினாலும் சிறிலங்காவினாலும் மிகக் கச்சிதமாக துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டது.நோர்வே சமாதான குழுவினால் முன்மொழியப்பட்டவையும்,அவர்களின் நிகழ்ச்சி நிரலும் அவர்களுக்கு இந்த சர்வதேச வல்லாதிக்கங்களினால் தயாரித்து வழங்கப்பட்டவைதான். சிறிலங்காவில் காலகாலமாக மாறும் ஒவ்வொரு அரசாங்கமும் முதலில் "இராணுவ நடவடிக்கை" மூலம் தங்களின் பலத்தினை பிரயோகிக்கும்.பின்னர் அது இயலாமல் போக "சமாதானம்" என்ற நரிப்புத்தியை காட்ட ஆரம்பிப்பார்கள். இது ஜே.ஆர் காலம் தொடங்கி மகிந்த வரை தமிழினம் கண்ட படிப்பினை. சமாதான காலத்தில் , சிங்களம் மிகவும் கச்சிதமாக காய் நகர்த்தினார்கள்.முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பில் "தளம்பல்" நிலையில் உள்ளவர்களுக்கு "வலை" வீசினார்கள்.இதற்கு சில முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் வாதிகளும் பயன்படுத்தப்பட்டனர்.அவர்கள் பொதுவாகத்தான் "தூண்டில்" போட்டார்கள்.அவர்களின் அதிஸ்டம் "சுறா" சிக்கியது.சமாதான பேச்சுகளின் பின் தான், கருணா மனம் மாறினார் என்பதை விட அதற்கு முன்னரே அவர் ரகசியமாக தன் நெருங்கிய முஸ்லிம் சகாக்களின் ஊடாக தன் "விசனங்களை" பகிர்ந்து கொண்டார்.சமாதான காலத்தில் அவரை நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வெகு சுலபமாக "கருணாவை" நல்ல விலைக்கு வாங்கி மாகிந்தவிடம் விற்றார்கள். கருணாவின் விலகல் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பிலோ இல்லை சர்வதேச கட்டுமானத்திலோ பெரிதாக எதுவும் பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்று பலரும் கருதியது உண்மை . ஆனால் கருணா ஒரு "அடிபட்ட புலி" என்பதை முழுதாக யாரும் உணரமறுத்தார்கள். விடுதலைப்புலிகளை பொறுத்த வரை "கருணாவால்" ஏற்படப்போகும் சிக்கல்களையும் இடர்பாடுகளையும் உணர்ந்து அதை ஓரளவேனும் தடுக்க நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அதற்கான கால அவகாசம் அவர்களுக்கு இருக்கவில்லை. முதலில் சிறிலங்காவில், முக்கியமாக கொழும்பில் விடுதலைப்புலிகளின் வலைப்பின்னல் என்பது மிகவும் பலம் வாய்ந்ததாகவிருந்தது. அது கிட்டத்தட்ட 25 வருட அடிப்படை கட்டுமானத்தினை கொண்டது. பல ஆயிரம் பேர் அதில் இருந்தார்கள். அதில் பல உயர் பதவி வகித்த தமிழர்கள் தொடக்கம் சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் வரை அடக்கம். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கு தெரியாது தாங்கள் யார் யார் என்று..!!. அந்தளவுக்கு புலிகளின் வலைப்பின்னல் ரகசியமானதாக இருந்தது. சில சமயங்களில் எவராவது பிடிபட்டால் அவரை மட்டுமே கைது செய்யமுடியும். மற்றவர்களில் ஒருவரைக்கூட கைது செய்யவும் முடியாது. அவர் எந்த திட்டத்தில் எந்த வலைப்பின்னலில் இருக்கிறார் என்பதை கூட சிறிலங்கா புலனாய்வால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியாக மண்டையை பிய்த்துக்கொண்டிருந்த வேளைதான் "கருணா" என்ற பழம் பாலில் நழுவி விழுந்தது. ஆனால் கருணாவுக்கு கூட "முழுமையான" விடுதலைபுலிகளின் வலைப்பின்னல் கட்டமைப்பு விபரம் தெரியாது. அதுதான் பொட்டம்மானின் "மாஸ்ரர் பிளான்". ஆனால் கருணாவோ, தான் சம்பந்தப்பட்ட திட்டங்களில் கிழக்கிலும் கொழும்பிலும் யார் யார் சம்பந்தப்பட்டார்கள் என்பதை விடுதலைப்புலிகள் சுதாகரிக்கும் முன்பே விற்றுவிட்டார். இது கருணாவின் "மாஸ்ரர் பிளான்". இதன் அடிப்படையில் சிலர் கொழும்பில் ரகசியமாக கைதுசெய்யப்பட்டர்கள். ஆனால் இது வெளியில் தெரியாமல் செய்யப்பட்டது. இது சிறிலங்கா புலனாய்வின் "மாஸ்ரர் பிளான்". 30 வருடங்களாக கட்டி வளர்க்கப்பட்ட இயக்கத்தின் கட்டமைப்பையும்,புலனாய்வு வலைப்பின்னலையும், சர்வதேச கட்டுமானத்தினையும் கருணாவின் பிளவின் பின்னர் ஒரே வாரத்தில் மாற்றியமைப்பது என்பது மிகவும் கடினமான விடயம். இது விடுதலைப்புலிகளை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கியது. ஒருபுறம் சர்வதேச சதி ,மறுபுறம் சிறிலங்கா, இன்னொரு புறம் துரோகம் இப்படி இடிமேல் இடியாக வந்த சோதனைகளை விடுதலைப்புலிகளும் செயற்பாட்டாளர்களும் எப்படி தாங்கினார்கள்? எப்படி சமாளித்தார்கள்? கொழும்பில் தற்காலிகமாக விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன .காரணம் கொழும்பில் பல புலனாய்வு செயற்பாட்டாளர்கள் சிறிலங்காவின் விசேட புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் மிகவும் முக்கியமான பொறுப்பளர்களும் செயற்பாட்டாளர்களும் அடக்கம். கிழக்கிலும் உடனடியாக செயற்பாட்டில் இருந்த தாக்குதல் திட்டங்களும் புலனாய்வு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன .காரணம் மிக முக்கியமான உறுப்பினர்கள் கருணாவால் கொலைசெய்யப்பட்டார்கள்.சிலர் உயிருக்கு பயந்து கருணாவோடு இணைந்து கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் பல ஆயிரம் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள் "பிஸ்ரல் குழு" என்பது ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்களுக்களையும் சிறிலங்கா படையினரையும் கதிகலங்க வைத்தது. தனியாக பொலிஸார் வீதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை.காரணம் அவர்களில் பலர் சர்வசாதாரணமாக "போட்டுத்தள்ளப்பட்டார்கள்". ஆனால் ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் விடுதலைப்புலிகள் தங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் பல இயக்க உறுப்பினர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்கா அதிரடிப்படையால் கொல்லப்பட்டார்கள்.மக்களோடு மக்களாக கலந்திருந்த பல இயக்க உறுப்பினர்கள் ஒட்டுக்குழுக்களால் அடையாளம் காணப்பட்டனர். இதற்காக ஒட்டுக்குழுக்களும் சிறிலங்கா புலனாய்வும் சேர்ந்து காட்டிக்கொடுக்கும் ஒரு சிலரை விலைபேசி வாங்கினார்கள். இப்படி விலைபோனவர்கள் யார் யார் என்பதை அந்த கால கட்டத்தில் அடையாளம் காண கடினமானதாக இருந்தாலும், இப்போது அவர்கள் தாங்கள் யார் என்பதை அவர்களின் "முகமூடி" கிழிந்து காட்டிக்கொடுத்துவிட்டார்கள். ஒருகாலகட்டத்தில் வடக்கிலும் ,கிழக்கிலும்,கொழும்பிலும் தாக்குதல் திட்டங்களினை இடைநிறுத்தி அவற்றினை மறுசீரமைப்பு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சில தாக்குதல் திட்டங்களினை முழுமையாகவே கைவிடவேண்டிய நிலை தோன்றியது. இருந்தாலும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் எதிர்பாராத முனையில், சில தாக்குதல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் ஒருசில வெற்றியை தந்தன. ஆனாலும் அவற்றில் பல தோல்வியில் முடிய,உடனடியாக தாக்குதல் திட்டங்கள் இடைறுத்தப்பட்டன. இதேபோல வன்னியில் ஆழ ஊடுவிய சிறிலங்கா அணியினரால் பல இழப்புகள் ஏற்பட்டது .அவற்றில் முக்கியமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டது. இதை தடுக்க பல வழிகளில் போராடிய புலிகள், முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தினார்கள். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வும் அவர்களின் பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளும் இந்த செயற்பாட்டுக்கு உறுதுணையாகவிருந்தது. சிறிலங்காவிலும் ,தமிழீழத்திலும் தற்காப்பு நடவடிக்கையில் கட்டாயம் ஈடுபடவேண்டிய கட்டாய சூழ்நிலை விடுதலைப்புலிகளுக்கு உருவானது. வன்னியில் தற்காப்பு கட்டுமானங்களினை அவசியம் கட்டியெழுப்ப வேண்டிய சூழல் உருவானது. இதை அவர்கள் மக்களின் அளப்பரிய ஆதரவோடும் போராளிகளின் தியாகங்களினூடும் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய பலமாய் அசைக்கமுடியாத கட்டுமானமாய் அடித்தளமாய் சக்தி வாய்ந்த பேராயுதமாய் இருந்த சர்வதேச கட்டுமானத்தில் விரிசல்கள் விழ ஆரம்பித்தது. 30 வருட அடித்தளம் கொண்ட புலம்பெயர் தேசகட்டுமானம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நேர்த்தியான வழிநடத்தலில் தலைவனின் நேரடியான கண்காணிப்பில் இருந்த புலம்பெயர்தேச கட்டுமானத்தில் ஏன் விரிசல் விழுந்தது?யார் காரணம்? (பழசை கிண்டுவது நோக்கம் அல்ல.கடந்த காலங்கள் தான் நிகழ்காலத்தின் வழிகாட்டிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக