திங்கள், 17 மே, 2010

தமிழ்பேசும் உறவுகளுக்கு களமுனைப்போராளியின் வேண்டுகோள்........................

தமிழீழம்

17.05.2010


எம் உயிரிலும் மேலான தமிழ்பேசும் மக்களே!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களும்,நெருக்கடிகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை.

உலகமயமாக்கல் என்ற நவீன கொள்கைகளுக்குள்ளும்,உலக பயங்கரவாத எதிர்ப்பு என்ற முரண்பாடான வலைசிக்கல்களுக்குள்ளும் விடுதலைக்காக போராடும் தேசங்கள் காணாமல் போகின்றது என்பதே யதார்த்தம்.
இந்த நவீன கொள்கை ஒட்டுமொத்தமாக உலகதமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கி எமது போராட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த ஒரு நாட்டினது உதவியின்றி எம்கைகளை நம்பியே நாம் போராடினோம்.
எம்மை அழிக்கவந்தவரது கைகளை தடுக்க எங்களது வலிமையையே நம்பினோம்.ஆனால் சிங்களபேரினவாதமோ உலகெங்கும் ஓடிச்சென்று ஒப்பந்தங்கள் செய்து,ஆயுதங்களை குவித்து ஈழதேசத்தில் அரக்கதாண்டவத்தை அரங்கேற்றியது.சர்வதேசம் ஒருதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் சிங்கள பேரினவாதத்தின்
போலிப்பரப்புரைகளை நம்பியது எப்படி?உலகத்தின் தெருக்களெல்லாம் எம்மக்கள் கண்ணீரோடு திரண்டு நின்ற போதும் எமது போராட்ட நியாயத்தை சர்வதேசத்தின் செவிகளுக்குள் உரக்க சொல்வதற்கு நாம் தவறிவிட்டோம்
என்பதே உண்மை.

எம் வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளுடன் நாம் போரிட்டோம், தாங்க முடியாத சுமைகளை எம்மக்கள் சுமந்து கொண்டனர்.ஆனாலும் எமது நியாயமான குரலை,எவராலும் மனித நேயத்துடன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கனத்த மனதோடு காத்திருக்காமல் சர்வதேசத்தின் செவிகளுக்கு எமதுஉரிமையின் அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருப்போம்.

இப்போது  தாயகத்தில் நடப்பது என்ன?

காணமல்போதல்,கடத்தல்கள்,கைதுகள்,படுகொலைகள் மீண்டும் தொடர்கதையாகிறது.கட்டுப்படுத்த முடியாத களையாக கலாசார சீரழிவு தொடர்கிறது.தமிழினம்,தமிழ்நிலம்,சிங்கள மயமாக்கபடுகிறது.இந்நிலை எம் தேசியத்தை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதே உண்மை.
இந்நிலையில் தமிழினம் திரண்டெழுந்து உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.
இன்றுவரை தமிழ் மண்ணுக்காக போராடி தம்முயிர்விதைத்த உறவுகளை எங்கள்மனங்களிலிருத்தி அவர்களின் இலட்சியத்தை சுமந்தபடி நடப்போம்.

சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் புலனாய்வுரீதியான பொய்ப்பரப்புரைகள் உட்பட தமிழ்மக்களுக்குள்உலவுகின்றமுரண்பாடுகளை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும்,வழிகாட்டலையும்,
ஏற்று மண்ணுக்காக ஆகுதியான மாவீரர்களினதும்,மக்களினதும்,கனவுகளை வென்றெடுக்க உணர்வுரீதியாக ஒன்றுபட்டு ஒன்றுதிரள தமிழ்தேசியத்தின் பெயரால் வேண்டிக்கொள்கிறேன்.


                                       "புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்"

இவ்வண்ணம்,
இன்றுவரை களமுனையில்
களமாடும்புலனாய்வுப்போராளி.
மா.ஆதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக