திங்கள், 17 மே, 2010

இறுதி நாள் - May 18 .....


முள்ளிவாய்க்காலில் தமிழரின் வீரம்செறிந்த விடுதலைப் போருக்கு முடிவுரை எழுதி விட்டதாக சிங்கள தேசம் மார்தட்டுகிறது. இந்தப் பேரழிவின் முதலாவது ஆண்டு நிறைவை சிங்களதேசம் பூரிப்போடு கொண்டாடுகிறது. அவர்கள் எம்மை முழுமையாக அடிமை கொண்டதை.எமது நிலம் முழுமையாக விழுங்கப்பட்டு விட்டதை நினைவு கூர்ந்து கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.
 ஆனால் ஆயிரக்கணக்கான உறவுகளை தொலைத்த, இழந்த தமிழ்மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து கொள்ளவில்லை. மாண்டுபோன உறவுக்களுக்காகத் தமிழ்மக்கள் மௌன வணக்கம் செலுத்துகிறார்கள். இங்கே தான் இலங்கைத்தீவு இரண்டுபட்டு நிற்கிறது. ஒருபக்கம் கோலாகலம் கொண்டாட்டம். இன்னொரு பக்கம் இடிந்த முகங்களோடு மனிதர்கள். இப்படிப்பட்ட நிலையில் ஒன்றுபட்ட இலங்கையை அவர்கள் உருவாக்கப் போகிறார்களாம். சிங்களதேசம் தனது அரசியல், இராணுவ, இராஜதந்திர பலத்தைக் கொண்டு தமிழரையும், தமிழரின் தேசத்தையும் அடிமையாகவே நடத்த முற்படுகிறது. 2002 போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபின்னர் ஏற்பட்ட சூழல் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தப் போகிறதாம் சிங்களஅரசு. நல்லிணக்கம் என்பது விட்டுக் கொடுப்பின் ஊடாக உருவாக வேண்டியது. சிங்களதேசம் இப்போது எதையாவது விட்டுக் கொடுக்கின்ற நிலையில் இல்லை. தமிழ்மக்கள் முன்னர் தனிநாடு கேட்டார்கள். பின்னர் அதைவிட்டுக் கொடுத்து ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சிக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்கள். அப்படி இறங்கி வந்த தமிழர் தரப்பை சிங்கள தேசம் அரவணைக்கவில்லை. அவர்களின் நோக்கம், சிந்தனை எல்லாமே எப்படியான வழிகளில் தமிழரை அடக்க முடியும் என்பது பற்றியதாகவே இருந்தது. தனிநாடு இல்லை. சமஷ்டியும் இல்லை ஒற்றையாட்சிக்குள் தான் எந்தத் தீர்வும் வழங்கப்படும் என்று அடம்பிடித்தது. அதுமட்டுமன்றி இப்போது 13வது திருத்தத்தை தான் தீர்வாகச் சமர்பிக்கப் போகிறதாம். இதுகூட தமிழருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். பொலிஸ் அதிகாரம் இல்லாத, காணி அதிகாரம் இல்லாத, வடக்கு,கிழக்கும் இணைந்திராத தீர்வைத் தான் சிங்களதேசம் வழங்கப் போகிறதாம். எதையுமே விட்டுக் கொடுக்காத சிங்களதேசம் நல்லெண்ணத்தை உருவாக்கப் போகிறதாம். தமிழருக்கு சமஉரிமைகள் கொடுத்து மதித்து நடக்கப் போகிறதாம். தமிழரை மதிக்கின்ற அரசாங்கமாக- அவர்களை நம்புகின்ற அரசாங்கமாக இருந்தால் விட்டுக்கொடுப்புடன் சமஷ்டித் தீர்வுக்காவது இணங்கியிருக்காதா? தாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் தமிழர்கள் தமது சுயமரியாதையை, சுதந்திரதாகத்தை. என்று எல்லாவற்றையும் இழந்து நிர்வாணமாக மண்டியிட்டு நின்று திர்வைத் தேட வேண்டுமாம். அது எப்படி நியாயம். சிங்களதேசம் தமிழரை காலம்காலமாக எப்படி ஏமாற்றியதோ அதே வழியில்தான் இப்போதும் செயற்படுகிறது. அதன் ஒவவொரு நகர்வும், நடவடிக்கையும் தமிழரை எப்படியெல்லாம் அடக்கலாம், ஆளலாம் என்பது பற்றியதாகவே இருக்கிறது. இப்படிப்பட்டதொரு சூழலில் எப்படி நல்லெண்ணம் உருவாகும். காலத்தை இழுத்தடித்துக் காரியத்தை முடிப்பது தான் சிங்கள அரசின் திட்டம். அவர்களுக்குத் தேவையானது நல்லிணக்கசூழல் அல்ல. அவர்களுக்கு இப்போது தேவைப்படுவது வெளிநாடுகளின் ஆதரவு. நாடுகடந்த அரசைத்தோற்கடிக்க வெளிநாடுகளின் ஆதரவுதேவைப்படுகிறது. அதற்காகவே இப்படியொரு நாடகத்தை ஆடுகிறது. முள்ளிவாய்க்காலுடன் தமிழரின் ஆயுதப்பலம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சிங்கள அரசு முழங்கியது. அத்தோடு தொடங்கியது தமிழரின் அழிவுக்காலம். தமிழர்கள் கூனிக்குறுகி மண்டியிட்டு நிற்கவேண்டிய நிலை வரும் வரைக்கும் அவர்கள் விடப்போவதில்லை. தமிழரை வடக்கிலும், கிழக்கிலும் சிறுபான்மையினராக்கி, எதுவுமேயற்ற நடைப்பிணங்களாக்கும் வரைக்கும் சிங்களஅரசு எம்மை விட்டுவைக்கப் போவதில்லை. இது தான் யதார்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக