வியாழன், 3 ஜூன், 2010

இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சீற்றத்தைத் தூண்டியுள்ளது




காசாவிற்கு உதவுவதற்கு கப்பல் தொடரணியில் சென்றிருந்த ஆதரவளார்களில் கிட்டத்தட்ட 19 பேரை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சர்வதேச அளவில் சீற்றமான எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகம் இந்த இரத்தம் தோய்ந்த நடவடிக்கைக்கு உட்குறிப்பான ஒப்புதலை அடையாளம் காட்டி, இஸ்ரேலிய நடவடிக்கையைக் குறைகூறாமல் உயிரழப்புக்கள் பற்றி வெறுமனே வருத்தம் தெரிவித்துள்ளது
.


தொண்டு நடவடிக்கையாளர்களையும் முக்கியமான உதவிப் பொருள்களையும் அதிகாலையில் கொண்டு வந்திருந்த பல கப்பல்கள் தொடரணியை, கமாண்டோக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அதிகாலையில் படகுகளின் தளத்தில் இறங்கித் தாக்கினர். இறப்பு எண்ணிக்கையானது 10ல் இருந்து 20 வரை என்று தகவல்கள் கூறியுள்ளன. அதில் உதவி ஏற்பாட்டாளர்கள் குறைந்தது 30 என்று எண்ணிக்கையைக் கூறுவதுடன் 50 பேருக்கும் மேலாக காயமுற்றிருப்பர் எனக்கூறியுள்ளனர். காயமுற்றவர்களில் இஸ்ரேலின் தீவிர இஸ்லாமிய இயக்கத் தலைவரான ஷேக் ரயிட் சலாவும், லெபனான் நாட்டு மனிதாபிமானப் பணிக்குழுவின் தலைவ ர் டாக்டர் ஹனி சுலைமானும் இருந்தனர்.


கப்பலில் மீது ஏறி தலைமை மாலுமியைக் காயப்படுத்தியதோடு இஸ்ரேலிய கடற்படைப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கப்பலில் இருந்து அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதன் ஒளிபரப்பு ஹீப்ரூ மொழியில் ஒரு குரல் “அனைவரும் வாயை மூடுங்கள்” என்ற கூறுவதுடன் முடிவடைகிறது. தொடரணியில் முதலில் வந்த Mavi Marmara என்னும் துருக்கியக் கப்பலின் மேல்தளத்தில் எடுக்கப்பட்ட துருக்கியத் தொலைக்காட்சிப் படங்கள் மக்கள் காயமுற்று தளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுகிறது. ஹிஜப்பில் இருக்கும் ஒரு பெண் இரத்தக்கறை நிறைந்த தூக்குப் படுக்கையை பிடித்திருப்பது காணப்படுகிறது.


தன்னுடைய படைவீரர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. “எங்கள் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்தது. அவர்கள் வன்முறையைத் பாவித்தனர், அது 100 சதவிகிதம் தெளிவு” என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் பிபிசி இடம் கூறினார். கப்பல் சர்வதேச நீர்நிலையில் இருந்ததால் இஸ்ரேலியத் தாக்குதல் கடற்கொள்ளை எதிர் நடவடிக்கையாக இருந்தது மேலும் தளத்தில் இருந்தவர்கள் எதிர்க்கும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்ற உண்மை பற்றி அவர் ஏதும் கூறவில்லை.


எப்படியும், தொடரணிக்கு ஏற்பாடு செய்திருந்த Free Gaza Movement ன் செய்தித் தொடர்பாளர் ஆட்ரி பொம்சே பிபிசியிடம் “உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி எவ்விதச் சான்றும் இல்லை” என்றார்.


“கத்திகள், கோடரிகள் அல்லது மற்றவற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது துருக்கியக் கப்பலில் நடந்ததை அப்படியே நேரடியாகக் காட்டுவது, நீங்கள் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் சுடுவதைக் காண்கிறீர்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு சான்றுகள் ஏதும் இல்லை.” என்றார் பொம்சே.


காசா விடுதலை இயக்கத்தின் (Free Gaza movement) செய்தித் தொடர்புப் பெண்மணியான கிரேடா பேர்லின் கூறினார்: “கப்பல் மேல்தளத்திற்கு வந்து சாதாரணக் குடிமக்களை அவர்கள் தாக்கியுள்ளது இழிந்த செயலாகும். நாங்கள் சாதாரணக் குடிமக்கள். குடிமக்களை எப்படி இஸ்ரேலிய இராணவத்தினர் இப்படித் தாக்கலாம்? பாலஸ்தீனியர்களைப் பொறுப்பற்ற முறையில் தாக்கலாம் என்பதால் அவர்கள் எவரையும் அவ்வாறு தாக்கலாம் என்று நினைக்கிறார்களா?’


பணியில் ஈடுபாட்டிருந்த ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சைப்ரஸ் நாட்டு உறுப்பினர் Kyriacos Triantafyllides, “தொண்டு செயற்பாட்டாளர்கள் “இஸ்ரேலிடம் இருந்து வலுவான பின்விளைவை எதிர்பார்த்தனர், ஆனால் படையெடுத்துவந்து இராணுவ நடவடிக்கை போல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.” என்றார்.


கப்பல்கள் மூன்று துருக்கியக் கொடியின் கீழ் இருந்தவை, இதில் முக்கிய பயணிகள் கப்பலும் அடங்கியிருந்தது. கப்பல் தொடரணி ஒரு துருக்கிய உதவிக் குழுவினால் வழிநடத்தப்பட்டது. முக்கிய கப்பலான மாவி மர்மராவில் இருந்த பெரும்பாலான பயணிகள் துருக்கியர்கள் ஆவர். இஸ்ரேலின் நடவடிக்கை “கடற்கொள்ளைக்கு ஒப்பானது” என்று துருக்கிய அதிகாரி ஒருவர் கூறினார். இஸ்ரேலிய குற்றச்சாட்டான, கப்பலில் இருந்த காசாப் பகுதிக்குச் செல்ல இருந்தவர்கள் சிலர் ஆயுதம் ஏந்தியிருந்தனர், இஸ்ரேலிய வீரர்களை தாக்கினர் என்பதை மறுத்தார்.


துருக்கியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்தான்புல்லின் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகத்தைச் சூழ்ந்து கொள்ள முயன்றனர். பின் நகரத்தின் முக்கியச் சதுக்கத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். லண்டனில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளும் செயற்பாட்டாளர்களும் லெபனான், நெடுகிலும் ஆர்ப்பரித்து, “எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள், ஆயுதம் கொடுங்கள், காசாவிற்கு அனுப்புங்கள்” என்று கோஷமிட்டனர்.


சிரியாவிலும் ஜோர்டானிலும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.


பல உத்தியோகபூர்வ ஆதார இடங்களில் இருந்தும் கண்டனங்கள் வெளிப்பட்டுள்ளன. இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாகிய துருக்கி அதன் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டு, மூன்று கூட்டு இராணுவப் பயிற்சி நடப்பதாக இருந்தவற்றையும் இரத்து செய்தது. இஸ்ரேலின் தூதர் காபி லெவி துருக்கிய வெளியுறவு அமைச்சரகத்திற்கு அழைக்கப்பட்டார். “குடிமக்களை இலக்கு வைத்த விதத்தில் இஸ்ரேல் மீண்டும் மனித வாழ்வு, சமாதான முயற்சிகளுக்கு அதன் அவமதிப்பைக் காட்டியுள்ளது…. இந்த கண்டிக்கத் தக்க நிகழ்வு பொதுக் கடலில் நடந்தது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், இது நம் இரு நாடுகளின் உறவுகளில் சீர்செய்யமுடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று அமைச்சரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.


சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மற்றும் லெபனிய பிரதம மந்திரி சாத் ஹரிரியும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் ஒரு போரைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்தனர். சிரியாவும் லெபனானும் “Freedom Flotilla தளத்தில் நிராயுதபாணிகளான குடிமக்கள் மீது மிருகத்தனத் தாக்குதலை நடத்திய விதத்தில் இஸ்ரேல் இழிந்த குற்றத்தைச் செய்துள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


காசாவில் இருக்கும் ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவரான இஸ்மெயில் ஹனியே, ஐ.நா. தலைமைச் செயலாளர் பான்கி மூனைச் சந்தித்து “இக்கப்பல்களில் இருந்த ஒற்றுமைக் குழுக்களின் பாதுகாப்பை காக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்குமாறும், அவர்கள் காசாவிற்கு வருவதைப் பத்திரமாக ஏற்பாடு செய்யுமாறும்” தெரிவித்தார். முஸ்லிம்களும் அரேபியர்களும் இத்தாக்குதலுக்கு விடையிறுக்க “எழுச்சி” பெறுமாறும் அவர் கூறினார்.


பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்நிகழ்வை “ஒரு படுகொலை” என்று விவரித்தார். பாலஸ்தீனியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவரான சாயிப் எரக்கட் இத்தாக்குதல் “ஒரு போர்க்குற்றம் ஆகும்” என்றார்.


அரபு நாடுகள் குழுவின் தலைமைச் செயலரான அம்ர் மூசா இன்று ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, இத்தாக்குதல் “பயங்கரவாதச் செயல்” என்றார்.


கப்பலில் பயணிகளைக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து விசாரணை வேண்டும் எனக் கோரின. அயர்லாந்து அரசாங்கம் உதவித் தொடரணியில் சென்றிருந்த அதன் குடிமக்கள் எட்டு பேர் பற்றி “பெரும் கவலையை” வெளியிட்டுள்ளது. வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டின், “15 பேர் கொல்லப்பட்டது, 50 பேர் காயமுற்றது என்றும் தகவல் உறுதியானால், அது காசாவிற்கு மிகவும் தேவைப்படும் பொருட்களை எடுத்துச் சென்றிருந்த மனிதாபிமானக் குழுமீது இஸ்ரேலிய இராணுவம் எடுத்த நடவடிக்கை முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல” என்றார்.


ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாள் பான் கி-மூன் “காசாவிற்குப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்த படகுகள் மீது நடத்திய தாக்குதல்களில் கொலைகளும் காயங்களும் ஏற்பட்டன என்ற தகவல்களினால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம் என்ன நடந்தது என்பது பற்றிச் சரியாகத் தெரிய ஒரு விசாரணை வேண்டும் என்று அறிக்கை விடுத்தது. “உயிரிழப்புக்கள், காயங்கள் பற்றித் தான் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், இச்சோகத்தைச் சூழ்ந்த நிலைமையை அறித்து கொள்ள முயல்வதாகவும்” அமெரிக்கா கூறியுள்ளது.


கனடாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாகு அதை இடை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டார். மேலும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவை இன்று சந்திப்பதாக இருந்ததையும் இரத்து செய்தார். அரசியல் அளவில் சங்கடத்திற்கு உட்பட்ட வெள்ளை மாளிகை இதற்கு உத்தரவிட்டிருக்கலாம்.


இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் ஆக்கிரோஷ அறிக்கைகளை வெளியிட்டவகையில் இதை எதிர்கொண்டார். பாதுகாப்பு மந்திரி எகுட் பரக் இறப்புக்களுக்குக் காரணம் காசா உதவிக் கப்பல் தொடரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்று குற்றம் சாட்டினார். “காசாவில் பட்டினி ஏதும் இல்லை என்றும் அங்கு மனிதாபிமான வகை நெருக்கடி ஏதும் இல்லை” என்றும் உறுதியாகக் கூறினார். இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் டானி டானன் இத்தொடரணியில் “குற்றம் சார்ந்த பயங்கரவாதிகள்” இருந்தனர் என்றார்.


இஸ்ரேல் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காசா எல்லைப் பகுதி முழுவதும் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதும் அதில் அடங்கும். Haaretz ல் எழுதிய அமோஸ் ஹாரெல், “சில சூழ்நிலையில் இரு தரப்பினரும் நிலைமையைச் சமாதானப்படுத்தம் நடவடிக்கைகளில் தோற்றால், அது ஒரு மூன்றாம் இன்டிபடா அல்லது பாலஸ்தீனிய எழுச்சியில் முடியலாம்” என்றார்.


இத்தாக்குதல் சர்வதேச நீர்நிலையில் நடைபெற்றது. துருக்கிய கடல்துறை உதவிச் செயலாளர் ஹாசன் நைபொக்ளு, “கப்பலின் தலைமை மாலுமி எங்களை 4.30 அதிகாலையில் கூப்பிட்டு, இஸ்ரேலிய கடற்படை அவர்களை வழிமறித்தது என்றார். பலர் காயமுற்றனர் என்பதை நாங்கள் அறிந்தோம். அதன்பின் கப்பல்களுடன் எங்களுக்கு தொடர்பின்றிப் போய்விட்டது….


இஸ்ரேலானது கப்பல்களை தரையில் இருந்து 70 கடல் மைல்களுக்கு அப்பால் வழிமறித்தது. சர்வதேச சட்டத்தின்கீழ் அவ்வாறு செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடையாது” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.


தொடரணி வரிசையில் மற்ற இரு கப்பல்கள் அமெரிக்கக் கொடியின்கீழ் இருந்தன. 6 கப்பல்களைக் கொண்ட அணி வரிசை 10,000 டன்கள் உதவிப் பொருட்களை எடுத்துக் கொண்டு, ஞாயிறன்று துருக்கிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வடக்கு சைப்ரஸில் இருந்து புறப்பட்டது. இவை பின்னர் 600 தீவிர ஆர்வலர்களைக் கொண்டிருந்த மாவி மர்மராவின் தலைமையில் வந்தன. கப்பல்களில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் துருக்கியர் ஆவர். ஆனால் பயணிகளில் ஐரோப்பியர்களும், அமெரிக்க குடிமக்களும்—வட அயர்லாந்து சமாதான செயலர் நோபல் பரிசு பெற்ற Mairead Corrigan Maguire போன்றோரும் இருந்தனர்.


தொடரணியின் மீதான தாக்குதல் காசாவை முற்றுகையிடும் முடுக்கிவிடப்பட்டுள்ள நடவடிக்கைகளில் சமீபத்தியது ஆகும். இதில் இஸ்ரேலும் எகிப்தும் ஒத்துழைக்கின்றன. ஏனெனில் ஹமாசின் இஸ்லாமிய இயக்கம் 2007 ல் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் புதன் அதிகாலையில் இஸ்ரேல் காசா நகரத்தின் கிழக்கே உள்ள Beit Hanoun மீது வான் தாக்குதலை நடத்தியது. காசாவின் எகிப்துடனான தெற்கு எல்லைக்கு அருகே உள்ள ராபாவில் உள்ள நிலத்தடிப் பாதைகள் மீது குண்டுவீசியது. அதில் 22 பேர் காயமுற்றனர், ஒரு 15 வயதுச் சிறுவனும் அதில் அடங்கியிருந்தார். இத்தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டன. ஒரு பெரும் வெடிப்பு எல்லையில் நடந்தது அது ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டி மூலம் நடைபெற்றது.2008-09 காசா மீது இஸ்ரேல் தாக்கி 16 மாதங்களுக்குப் பின்னர்—அதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர், 50,000 பேர் வீடிழந்தனர், பெரும்பாலான வீடுகள் அழிந்துபோயின. ஆனால் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் அல்லது வெடிகுண்டுத் தாக்குதல்கள் மிகக் குறைவுதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காசா இஸ்ரேல் மற்றும் எகிப்தின் முடக்கம் தரும் முற்றுகையினால் அதன் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதைக் காண்கிறது. மறு கட்டமைப்பு தடுப்பிற்கு உள்ளாகிவிட்டது. மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


ஒவ்வொரு வாரமும் காசாவிற்கு 15,000 டன்கள் மனிதாபிமான உதவிப்பொருட்களைத் தான் அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இது தேவையில் கால் பகுதிதான் என்று ஐ.நா. கூறியுள்ளது. காசா மக்கள் உற்பத்தித்திறன் உடைய கிராமப்புற நிலங்களைக் கைவிடுமாறு இஸ்ரேல் கட்டாயப்படுத்தியுள்ளது. அவற்றுள் பல Strip எனப்படும் பகுதியைச் சூழ்ந்துள்ள வேலிக்குள் உள்ளன. இதை இஸ்ரேல் ஒரு இடைத் தடைப்பகுதி என அறிவித்துள்ளது. 2008-09 தாக்குதல் மதிப்புடைய விளைநிலங்களை அழித்து, அப்பகுதியின் பல இடங்களையும் இஸ்ரேலிய வெடிப்பொருட்களில் இருந்து வெளிப்பட்ட நச்சு உலோக கலவைப் பொருட்கள் மாசுபடுத்தியுள்ளன. காசாவில் செயல்படும் வங்கிகளுடன் இஸ்ரேலிய மத்திய வங்கி செயற்பாடுகளை நிறுத்திவிட்டது. இதையொட்டி கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வணிக வாழ்வையும் பெரும் பாதிப்பிற்கு உட்படுத்தி ஹமாஸ் அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு சிறு பகுதியைக்கூட ஊதியமாகக் கொடுக்க முடியாமல் செய்துள்ளது. இதில் ரமல்லாவில் இருக்கும் பாலஸ்தீனிய அதிகாரம் கொடுக்கும் நிதியும் அடங்கும். தன்னுடைய பங்கிற்கு எகிப்து காசாவின் தெற்கு எல்லையை மூடி, ஒரு நிலத்தடி எஃகுச் சுவரையும் எழுப்பியுள்ளது. அது சுரங்கப்பாதைகள் மூலம் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்துவிடும். எகிப்துடனான தன் எல்லை முழுவதிலும் இஸ்ரேல் ஒரு சுவரை எழுப்புகிறது. “இது ஹமாஸுக்கு இடர் கொடுக்கும்—அது ஒன்றுதான் பயங்கரவாதத்தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய ஒரே பாதை என்று Jerusalem Post எழுதியுள்ளது.Opertion Cast Lead ல் இருந்து ஹமாஸ் ஒரு நடைமுறை போர்நிறுத்தத்தை செயல்படுத்தி காசாவில் உள்ள மற்ற போராளிக் குழுக்கள் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால் இது இஸ்ரேலுக்குப் போதவில்லை. அது ஹமாஸை அப்பகுதியில் இருக்கும் ஈரான் சார்பு என்றும் அது அகற்றப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக