வியாழன், 3 ஜூன், 2010

தேசிய தலைவரை தவிர்த்து யார்?-கண்மணி

வீரம் செறிந்த போராட்டம் ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்திருக்கிறது. அடக்கமுடியா ஆற்றலோடு அளவில்லா இழப்புகளை சந்தித்தப்பின்னும் இன்று ஒரு சிறு தீவிலே நடைபெற்ற சிறப்பு வாய்ந்த இனவிடுதலை சமர் இன்று உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. யாராலும் அடக்கமுடியாது என்று இறுமாப்போடு இயங்கத் தொடங்கியிருக்கும் சிங்கள பாசிச ஆட்சியாளன் ராசபக்சே மனம்திறந்து `தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த நேர்க்காணலில்,
`புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை' என்று கூறியதின் மூலம் மீண்டும் தேசிய தலைவரின் வீரம் செறிந்த புலிப்படையின் களமாக வன்னிமண் அடையாளம் காணப்படும் என்பதை அகிலமே புரிந்து கொண்டிருக்கிறது.


நாம் பலமுறை அழுத்தமாக சொல்வதைப்போல அடக்குமுறையாளர்கள் எந்த நேரத்திலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்வது கிடையாது. உலகத்தின் பாதையெல்லாம் ரோமை நோக்கித் திரும்பட்டும் என்ற கொக்கரித்த ரோமாபுரி சாம்ராஜ்ஜியம் சரிந்து போனதை காலம் பதிவு செய்து வைத்திருக்கிறது. அப்படியிருக்க, அடையாளம் இல்லாத ஒரு சிறு நரிக்கூட்டம் சீறி வரும் புலிகளை ஒடுக்கியதாகக் கூறுவதே நகைப்புக்குரியது. அடக்குமுறைக்கும் உயிருக்கும் அஞ்சுபவர்களுக்கே இந்த அடக்குமுறையாளர்களின் அட்டகாசம் அச்சத்தை ஏற்படுத்தும்.


ஆனால் எதைக்குறித்தும் கவலைப்படாத தமது இன விடுதலை ஒன்றே குறிக்கோளாய்க் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் விடுதலைக் கனவை யாரால் அணைக்க முடியும் என்பதை இவர்களே சொன்னால்தான் நமக்குப் புரியும். வரலாறு தமது தேவைகளை முன்னிருத்தியே நடைபயில்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது ஏதோ ஒரு இயல்பான தேவையற்ற ஒரு நிலைக்காக ஏற்படுவதல்ல. அது ஒரு தேவையை முன்னிருத்தி தம்மை முழுமையாக ஒப்படைக்க முன்வரும்போது பேரெழுச்சி கொள்கிறது. இதை எந்தஒரு ஆற்றலாலும் ஒடுக்க முடியாது. அப்படி ஒடுக்க நினைத்த சிந்தனையாளர்கள் மக்களின் கோபக் கனலில் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தத்துவங்கள் தேச பக்தர்களின் கால்களுக்குக் கீழே குப்பைகளாக மிதிக்கப்பட்டிருக்கிறது. நமது போராட்டமும்கூட 1977 வரை சம உரிமை கேட்டுத்தான் நடத்தப்பட்டது. எங்களை உங்களுக்கு சமமாக மதியுங்கள் என்றுதான் தமிழீழ விடுதலைக்கான போராளிகள் கோரிக்கை வைத்தார்கள். அது கோரிக்கை போராட்டங்களாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது.


காரணம் கடந்த காலங்களில் போராட்டங்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தார்கள். அவர்கள் தமது உரிமையை கோரிக்கையின் மூலம் பெற்றுவிடலாம் என்கின்ற போலி நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. மக்களுக்கான விடுதலை என்பது கோரிக்கைகள் மூலம் மனுக்கள் மூலம் இதுவரை கிடைத்ததில்லை. அது இடைவிடாத ஆற்றல் வாய்ந்த மக்களின் ஆளுமையால்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த போராட்டங்களை எப்படியாவது ஒடுக்குவதற்கு இல்லையென்றால் இந்த போர் குணம் மிக்க சிலரை நீர்த்துப்போக செய்வதற்கு அரசியல் ஆற்றல்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.


அரச பயங்கரவாதத்தை பொருத்தமட்டில் அச்சுறுத்தும், சிறையில் அடைக்கும், சித்ரவதை செய்யும், இறுதியில் கொன்றொழிக்கும். இதுதான் நமது தமிழீழ மண்ணிலும் நடைபெற்றது. இந்த அரச பயங்கரவாதத்திற்கு எப்படி பதில் சொல்வதென்று கடந்த கால தலைவர்களுக்கு புரியவில்லை. அவர்களுக்கு அரச பயங்கரவாதத்தின் மொழி புரியாத மொழியாக இருந்தது. ஆனால் அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களம் மட்டும் தெரிந்தவனுக்கு சிங்களத்தில்தான் நாம் பதில் சொல்லியாக வேண்டி இருக்கிறது. யாருக்கு என்ன மொழி புரியுமோ, அந்த மொழியில்தான் நாம் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதை புரிந்து கொள்வான். கோரிக்கை, ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை போராட்டம் என்ற சாத்வீக மொழிகள் சிங்களனுக்கு புரியவில்லை. காரணம், அவனிடம் அடக்குமுறையும் அரச அதிகாரமும் அராஜக ராணுவமும் இனவெறியும் கொண்ட கட்டமைப்பு மிக பாதுகாப்பாக இருந்தது.


ஆகவே இதை வைத்துக் கொண்டுதான் அவன் எமது உறவுகளோடு எதிர் மொழி பேசிக் கொண்டிருந்தான். இந்த மொழி எமது உறவுகளுக்குப் புரியவில்லை. அவன் மொழி நமக்குப் புரியவில்லை. அப்பொழுதுதான் அவனுக்கு என்ன மொழி புரியுமோ அதே மொழியில் பதில் சொல்ல, கிழக்கு வானிலே ஒளி கீற்றாய், தமிழர் வாழ்விலே நம்பிக்கையாய், விடுதலைப் போராட்டத்தில் எழுச்சியாய், எம்மிடையே எமது தேசியத் தலைவர் தோன்றினார். அவர் அவனுக்கு, அவனுக்கு புரிந்த மொழியிலேயே பதில் சொன்னார். தடுமாறினான். அடடா... தமிழனுக்கும் நம் மொழி தெரியுமோ? என்று சஞ்சலப்பட்டான். மேலுமாய் அடக்குமுறை கருவிகளை கூர்மைப்படுத்தியபோது, அதைவிட நேர்த்தியாக அவனுக்கு புரிந்த மொழியை இலக்கண சுத்தத்தோடு எமது தேசிய தலைவர் அவனுக்கு எடுத்துரைத்தார். பின்னங்கால் பிடாரியில் பட, சிங்களன் ஓடி ஒளிந்தான்.


இனி எமது தேசிய தலைவர் இருக்கும்வரை தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்களின் பாதுகாப்பு அரணாய், தமிழினத்தின் அடையாளமாய், உலகத் தமிழர்களுக்கு ஒப்பற்ற தவப்புதல்வனாய், இருண்ட வானிலே ஒளிவட்டமாய் எமது தேசிய தலைவர் தோன்றியதை சிங்களவனும் மனமுவந்து ஒப்புக்கொண்டான். இப்படித்தான் எமது விடுதலைப் போராட்டத்திலே கருவி களம் தோன்றியது. தேசிய தலைவர் கூறுவதைப் போல நாம் விரும்பி கருவியை கரங்களிலே ஏற்கவில்லை. அது நம்மேல் திணிக்கப்பட்டது. நாம் எப்படி போராட வேண்டும் என்பதை நமக்கு நமது பகைவன்தான் கற்றுக் கொடுத்தான். நமது போராட்டப்பாதையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை சிங்கள அரச பயங்கரவாதம் தான் நமக்கு போதித்தது.


நாம் விருப்பப்படாமலேயே நம்மிடம் ஒரு வன்முறை திணிக்கப்பட்டது. அவனுக்கு வன்முறை எனும் ஆதிக்க மொழி மட்டுமே தெரிந்திருந்தபோது, நாம் நமது இனத்தைக் காக்க விருப்பம் இல்லாமலேயே அவனின் மொழியை கற்றுக் கொண்டோம். அவனாக நம்மிடம் கருவிகளை ஒப்படைத்தான். அவனாகவே தோற்று ஓடினான். அவன் ஒருபோதும் நம்மிடம் வெற்றிக் கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட போது அவனுக்குள் அச்சம் ஆட்டிப்படைத்தது. ஆகவே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள உலகமெல்லாம் சுழன்று பிச்சைக்காரனைப்போல் கரம் ஏந்தினான். இந்தியாவின் கால்களை நக்கி, கருவிகளை பெற்றுக் கொண்டான். சீனத்தின் அடிமையாக நின்று படையை பெருக்கிக் கொண்டான். ஆனால் அத்தனை அடக்குமுறைகளையும் தன்னந்தனியாக நின்று சமாளித்த இந்த உலகில் யாருக்கும் நிகரில்லா ஆற்றல் வாய்ந்தவனாக எமது தேசியத் தலைவரின் படை களத்திலே இருந்தது.


போர் ஓய்ந்தது. நிலைமைகள் மிக சுமூகமாக மாறிவிட்டது என்றெல்லாம் சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போருக்கான காரணம் நாம் மேலே பல்வேறு தருணங்களிலே குறிப்பிட்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் வதைமுகாமிலே நிகழ்ந்த ஒரு நிகழ்வு சொல்வதற்கு நமக்கு நா எழவில்லை. எழுதுவதற்கு கரங்கள் அசையவில்லை. கண்ணீரின் கனம் தாங்காமல் எமது எழுத்துக்கள் நொண்டி நொண்டி நடக்கிறது. ஆனாலும் எமது நியாயத்தை எடுத்துரைக்க இச்சம்பவத்தை பதிவு செய்தே தீரவேண்டும். இதை ஒரு தமிழீழ உறவு எம்மிடம் பதிவு செய்தபோது நெஞ்சம் வெடித்தது. இரவு முழுக்க உறக்கம் இல்லாமல் வானத்தையே வெறித்துப் பார்த்த ஒரு நிலை உருவானது. திரும்பத் திரும்ப அந்த நிகழ்வு எம்மை திக்குமுக்காடச் செய்தது. இப்படி நிகழுமா? என்ற எண்ணி நாம் அழ முடியாமல், எமது உணர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் தவித்தோம்.


ஆனாலும்கூட எமது போராட்டத்தின் நியாயத்தை நாம் ஏன் எமக்கான ஒரு நாடு வேண்டும் என்ற அடிப்படை நிலையை எடுத்துரைக்க நிச்சயமாக இந்த நிகழ்வை பதிவு செய்தே தீர வேண்டும். சிங்களன் அமைத்துள்ள முள்வேலியால் சூழப்பட்ட அந்த வதைமுகாமில் ஒரு சிறுகுழந்தை அலுமினிய தட்டொன்றை ஏந்திக் கொண்டு தண்ணீர் வேண்டும் என்று சென்றுக் கொண்டிருக்கிறது. தன்னந்தனியாய் தட்டேந்திச் செல்லும் அந்த குழந்தையைப் பார்க்கும்போது பாருக்கெல்லாம் படி அளந்த எமது இனம், தட்டேந்தி தண்ணீருக்கலையும் கொடுமையை எண்ணி மனம் இறுக்கமாகிறது. ஒரு சிங்கள சிப்பாய் அந்த நாயிடம் அந்த குழந்தை தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறது. அந்த நாய், தமது சிறுநீரை அந்த தட்டிலே கழித்து குழந்தையை குடிக்கச் சொல்கிறான். குழந்தைக்கு தண்ணீரா, சிறுநீரா என்று தெரியாமல் அதை குடித்த கொடுமையை அவர் பதிவு செய்த போது உச்சி முதல் உள்ளங்கால் வரை எமது குருதி கொதித்தது.


இந்த நிகழ்ச்சி உங்களையும் கொதிக்க செய்திருந்தால் நீங்கள் தமிழினத்தின் போராட்டத்திலே பங்கேற்க வரவேண்டும். நாம் நமக்கான அடிப்படை உரிமைகளுக்காக போராடிய காலம் எல்லாம் நிறைவடைந்துவிட்டது. இப்போது நாம் உயிருடன் இருப்பதற்காக போராடவேண்டி இருக்கிறது. இந்த அரக்கத்தனத்தை அறுத்தெறிவதற்காக களம்காண வேண்டி இருக்கிறது. நம் இனத்தின் வெற்றி என்பதைவிட, நம் இனத்தின் வாழ்வை உறுதி செய்வதற்காக நாம் இந்த போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. போராட்டம் என்பது வானிலிருந்து வந்ததல்ல. இந்த மண்ணிலே நிகழ இருப்பது. இந்த மண்ணே நாம் வாழ்வதற்கான போராட்டத்தை வலியுறுத்துகிறது. நமக்கான தேவையை அது உறுதி செய்கிறது.


ஆகவே நாம் போராட்டத்தை நிகழ்த்தியே தீர வேண்டும். இது நம்முடைய விருப்பமல்ல. நாம் விரும்பாமலேயே நம் தலைமீது முள்முடி சூட்டப்பட்டது. நமது விருப்பத்திற்கு மாறாக நாம் சிலுவையில் அறையப்பட்டோம். இப்போது நாம் உயிர்ப்பதற்கான நேரம். உயிர்த்தே தீர வேண்டும். நமது விடுதலை உயிர்ப்பாக எழவேண்டும். சாம்பலிலிருந்து எழும் பினிக்ஸ் பறவையைப் போல முள்ளிவாய்க்காலிலும் அழிவுக் களத்திலிருந்து நம்முடைய ஆற்றல் முன்னைக் காட்டிலும் எழுச்சியோடு எழ வேண்டும். தேசிய தலைவர் நம்மை வழிநடத்துவார். தேசிய தலைவரின் பார்வையும், அவரின் சிந்தனையும் எப்போதும் நம்மை நோக்கியே இருக்கும். அவர் தியாகத்தின் விலைநிலம். தத்துவத்தின் மழை. அவர் பொறுமையின் எல்லை. இலட்சியத்தின் உறுதி. அவரைத் தவிர்த்து இனி நமக்குத் தலைவர் இல்லை.


இது ஆயிரம் ஆண்டானாலும் நம்மிடையே ஆட்சியாளராய் அவர் இருப்பார். தமது தாய், தந்தை, பிள்ளைகள், உறவுகள் என யாராக இருந்தாலும் எமது தமிழ் மக்களில் ஒருவர் தான் என அனைவரையும் சரிநிகராய் எடைப்போட்ட சமத்துவத்தின் நாயகனாக எம் தலைவர் இன்று களத்திலே நம்மோடு இருந்து கொண்டிருக்கிறார். சிங்களனும், சிங்களனின் அடிவருடிகளும் ஆயிரம் பரப்புரைகள் செய்யட்டும். வரும் ஆடிக் காற்றிலே அந்த இலைகள் அடித்துச் செல்லப்படும். உறுதியாக இருப்போம். உறுதியாக முன்னேறுவோம். எழுவோம். காயங்களை துடைத்துக் கொள்வோம். தேசியத் தலைவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு மீண்டும் போருக்குச் செல்வோம். தமிழீழம் அடையும்வரை நாம் தடுமாறாமல் உழைப்போம். எம்மை வீழ்த்த இனி ஒருவன் உலகில் பிறக்க வேண்டும். இதுவரை எவனும் இல்லை என்பதை ஆதிக்க ஆற்றல்களுக்கு எடுத்துரைப்போம்.


உலக வரலாற்றிலே தமிழினம் மட்டும்தான் வீரத்தின் அடையாளமாய், அறத்தின் சின்னமாய் சிறந்து விளங்கியது என்பதை நாளைய சமூகம் படித்தறியட்டும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்பிக்கையோடு முன்னேறுங்கள். இந்த ஆதிக்க ஆற்றல்கள் நமது உயிரை மட்டும்தான் எடுக்க முடியும். நமக்குள் புதைந்துள்ள நமது விடுதலையை ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரச பயங்கரவாத பேயரசுகள் நமது உடலை காயப்படுத்தத்தான் முடியும். நமது உடலின் உறுப்புக்களை வெட்டி எறியத்தான் முடியும். ஆனால் முழுமையான நம் தேசத்தை நாம் கட்டியமைப்போம். நமது தேசம், நமது உறவுகளின் எலும்பாலும், தசையாலும், சாம்பலாலும் உருவாக்கப்பட்டது. இது உலகிற்கே உன்னத அடையாளமாய் இருக்கும். இந்த தேசத்தை எழுப்ப நாம் உறுதியோடு செயல்படுவோம். தேசிய தலைவரின் கரங்களைப் பற்றி அவரோடு இணைந்தே பணியாற்றுவோம். தமிழீழம் அமையும்வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக