வெள்ளி, 4 ஜூன், 2010

‘வன்னி அகதி முகாம்களில் மக்கள் திண்டாட்டம் இந்திய நட்சத்திரங்களுடன் இங்கு கூத்தாட்டம்’



வன்னி அகதி முகாம்களில் மக்களை திண்டாடவிட்டு தலைநகரில் இந்திய நட்சத்திரங்களுடன் இலங்கை அரசாங்கத் தரப்பினர் கூத்தாடுகின்றனர். பொதுமக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் நடிப்பிற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கோ நாட்டின் தேசிய பிரச்சினைக்கோ தற்போதைய அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை வழங்க முடியாது. எரிபொருள்களின் மீதான வரியை குறைக்காது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியைக் குறைப்பதால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பயன்? எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது
.


இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ‘ஐஃபா’ நிகழ்வுகள் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ஜே.வி.பி. யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பணிகள் மீது கவனம் செலுத்தாது அநாவசியமான வேலைசெய்து காலத்தை வீணடிப்பதுடன் அரசாங்கம் பொறுப்பற்றவகையில் செயற்படுகின்றது. இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்வை இலங்கையில் நடத்துவதால் எவ்விதமான நன்மையும் நாட்டுக்கு கிடைக்கப் போவதில்லை.




வாழ்க்கை செலவு அதிகரித்து பொது மக்கள் கஷ்டப்படுகின்றார்கள் வடக்கில் அகதி முகாம்களில் இன்றும் உணவின்றி சிறை வாழ்க்கையை தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயுள்ளன. சம்பள உயர்வை கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள் தொழில் வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.


அதேபோன்று உள்நாட்டில் சுகாதாரம் கல்வி போன்ற துறைகளில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இதை தவிர இலங்கைக்கு எதிராக சர்வதேசம் மீண்டும் மனித உரிமைகள் பிரச்சினையை விசாரிக்க உள்ளது. இவ்வாறு நாடு பல சிக்கல்களில் இருக்கும் போது இந்திய திரைப்பட நட்சத்திரங்களுடன் அரசதரப்பினர் கூத்தாடுவது அநாகரிகமானது.


கடந்த காலங்களில் தேசியப் பிரச்சினைகளை மூடிமறைக்க உள்நாட்டு யுத்தத்தையும் தேர்தல்களையும் காரணம் காட்டி வந்த அரசாங்கம் தற்போது “ஐஃபா நிகழ்வுகளால் பொதுமக்களின் அவதானத்தை திசை திருப்புகின்றது. அரசாங்கத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இலங்கைக்கு அபிவிருத்தியடைய கிடைத்த சந்தர்ப்பங்கள் கைநழுவப்போகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக