வெள்ளி, 4 ஜூன், 2010

அரசியற் கட்சியா ? ஊடக அமைப்பா??

“பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காமல் அவற்றுக்குத் தீர்வு காண்பதே புத்திபூர்வமான சமுகமொன்றின் வளர்ச்சிக்கான பணி’ என்று சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறான நிலையில் இன்று இலங்கைத் தமிழரின் அரசியல் முன்னெடுப்புகள் உள்ளன என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப் போனால், தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அப்படித்தான் உள்ளது.
போர் முடிந்ததற்குப் பின்னர் தொடருகின்ற அரசியற் போக்கு மிகவும் கவலைக்குரியதாகவும் சிங்கள அதிகாரவர்க்கத்துக்குத் தொடர்ந்து பலியாகும் இயல்பைக்
கொண்டிருப்பதாகவுமே இருக்கிறது.


முப்பது ஆண்டுகளாக நீடித்த பெரும் போருக்குப் பின்னரான அரசியற் சூழலில், அதுவும் இந்தப் போரில் பெரும் பின்னடைவைச் சந்தித்து மக்கள் நிராதரவாக நிற்கும் நிலையில் புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கும்போது, அதற்கு மாறான “பலி’ அரசியலே முன்னெடுக்கப்படுகிறது. பலி அரசியல் என இங்கே குறிப்பிடப்படுவது மக்களை வரலாற்றின் முன்னே மீண்டும் பலியிடப்படுவதையே குறிப்பதாகும்.


சிறுபான்மை மக்களின் அரசியல் நெருக்கடிகளை அந்தந்தச் சமுகங்களின் அரசியற் தலைமைத்துவச் சக்திகள் புரிந்து கொண்டதாக இல்லை. அப்படி அவை இந்த நெருக்கடியைப் புரிந்திருந்தால், அதற்கான உபாயங்களை நோக்கி தங்கள் செயற்பாடுகளை வகுத்திருக்கும். பதிலாக தமக்குப் பழக்கப்பட்ட அரசியல் வழிமுறைகளைப் பின்பற்றும் பாரம்பரியப்போக்கே இந்தச் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் சகல கட்சிகளும் அடக்கம்.


விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நெருக்குவாரங்கள் அற்றுச் சுயமாக இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்றுள்ளது. இதேவேளை, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூடிய ஆசனங்களையும் கூட்டமைப்புப் பெற்றிருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் அது இந்தத்தடவை எட்டு ஆசனங்களை இழந்து வீழ்ச்சியைக் கண்டுள்ளது.


எனினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமுகம் இலங்கை அரசும் தங்களுடனே பேசவேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கூறிவருகின்றனர். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவலங்களைப் பற்றியும் தாமே வெளிப்படுத்தி, அறிக்கைகளை விடுத்து, கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.


ஆகவே கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை வகிப்பதாக பொதுப்போக்கில் உணரப்படுகிறது. இந்த வகையில் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் கூட்டமைப்பின் செய்திகளுக்கே அதிக முன்னுரிமை அளித்து வருகின்றன. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை கூட்டமைப்பே ஊடகங்களில் பெற்றுமிருக்கிறது. அல்லது அந்த இடத்தை ஊடகங்கள் அதற்கு வழங்கி வருகின்றன.


ஆகையால் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், கூட்டமைப்பு ஒரு முன்னணிப் பார்வையைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.


இனப்பிரச்சினை தமிழ் பேசும் மக்களைப் பாதித்திருந்தாலும் கடந்த காலத்தில் மிகவும் கசப்பான அனுபவங்களையும் சகித்துக் கொள்ளவே முடியாத பெரும் அவல நிலையையும் தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு பெருந்தொகுதியினர் சந்தித்திருக்கின்றனர். இவ்வளவுக்கும் இவர்கள் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்காக தங்களால் முடிந்த அளவுக்கு உச்சமான பங்களிப்புகளைச் செய்தவர்கள்.


கடந்த ஐம்பது ஆண்டுகளாக இன ரீதியான ஒடுக்குமுறைக்கெதிராகவும் தமிழ் அடையாளம், தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம் என்ற சொற்பதங்களுக்காகவும் ஒன்றுபட்ட ஆதரவை வழங்கியவர்கள். ஆனால், இன்று இவ்வளவு பங்களிப்புக்குப் பின்னர் வாழ்க்கை நிலையிலும் இந்த அரசியல் நிலையிலும் இந்த மக்கள் அநாதைகளாகவே இருக்கின்றனர். குறிப்பாக போரினால் பத்து லட்சம் மக்கள் வரையில் இந்தப் பாதிப்புகளைத் தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள். அதிலும் எல்லையோர மக்கள்.


இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய வாழிடங்களை விட்டு உள்நாட்டில் அகதிகளாகவே இருக்கின்றனர். இதில் வன்னியிலிருந்த மக்களின் துயரம் இன்னும் அதிகமானது. அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் உட்பட சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது உண்மையாக இருந்தாலும் வன்னியிலிருந்த மக்களின் பாதிப்புகள் நிரந்தரமானவையும் நீண்டவையும் அதிக தாக்கத்தையுடையவையுமாகும்.


எனவே இந்த நிலையில், எதிர்கால மற்றும் நிகழ்கால அரசியற் போக்கு எவ்வாறு அமையப் போகிறது? அதற்கான செயற்பாடுகள் இப்போது என்ன அடிப்படையில் இருக்கின்றன? நம்பிக்கை அளிக்கக்கூடிய புள்ளிகள் ஏதாவது தெரிகின்றனவா? அல்லது இப்போதிருக்கும் அவலந்தான் தொடர்கதையா? என்பவை போன்ற கவலைகள் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றன.


கூட்டமைப்பு புலிகளின் காலத்தில் இயங்கியதை விடவும் அது இப்போது எந்த வகையில் புதிய பாதைகளை வகுத்திருக்கிறது? அது மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் புதிய பயணம் என்ன? அந்தப் பயணத்தில் அது எட்டிய புள்ளிகள் எவை? மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அது எந்த வகையில் மேற்கொண்டு வருகிறது? இந்தப் பிரச்சினைகளின் வகைப்பாடுகளை அது வகுத்திருக்கிறதா இனங்கண்டிருக்கிறதா? அவ்வாறு வகுத்திருந்தால் அவை எவை?


உடனடியான பிரச்சினைகளுக்கான தீர்வு, நீண்ட கால அடிப்படையிலான பிரச்சினைக் கான தீர்வு என்ன என்பதையிட்டு அதன் திட்டங்களும் செயற்பாடுகளும் எப்படி இருக்கின்றன? வரலாற்றின் போக்கை மாற்றக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்களை அது வைத்திருக்கிறதா? போருக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து அதன் புரிதலும் செயற்பாடுகளும் என்ன? போரின் போதும் இதுவரையான அரசியற் காலத்திலும் நடந்த செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பாதிப்புகளுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு அது மேற்கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன? இந்தப் பாதிப்புகளை சர்வதேச மயப்படுத்திச் சிந்திக்கும் ஒரு வேலைத்திட்டத்தில் அடைந்த இலக்குகள் எவை? அல்லது இவை எதுவுமே இல்லையா?


இப்படி ஏராளம் கேள்விகள் கூட்டமைப்பின் மீது எழுகின்றன. இந்தக் கேள்விகளை யாரும் புறந்தள்ள முடியாது.


ஒரு தலைமைத்துவ அமைப்பாக கூட்டமைப்பு தன்னை உருவகித்துக் கொண்டால் அந்தத் தலைமைத்துவத்துக்குரிய தார்மீகப் பொறுப்புகளையும் பண்புகளையும் கடமைகளையும் ஆற்றல்களையும் அறிவையும் விவேகத்தையும் கண்ணியத்தையும் உறுதியையும் செயல் வேகத்தையும் அது கொண்டிருக்க வேண்டும். இது அவசியம்.


ஆனால், அப்படி கூட்டமைப்பு இந்தத் தகுதிகளையோ அடிப்படைகளையோ கொண்டிருக்கிறதா என்ற கேள்விபகிரங்கமாக இங்கே முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அரசியற் பாடத்தின்படி ஏகபிரதிநிதித்துவம் என்பதில் இருந்து சகல நிலையிலுமான ஜனநாயகத்துக்கான மறுப்புகள் வரை நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் மகத்தானவை. அத்தகைய அரசியற் போக்குகள் நெருக்கடிக் குள்ளாகும் போது அவற்றின் விளைவுகளை மக்களே அதிகம் சந்திக்கின்றனர் சந்தித்துள்ளனர் என்ற வகையில் இப்போது கூட்டமைப்பு முன்வைக்கும் ஏகபிரதிநிதித்துவத்திலிருந்து அதன் அரசியற் செயற்பாடுகள் வரையில் எல்லாவற்றையிட்டும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டியுள்ளது.


இவை தொடர்பாக விவாதங்களை நடத்தவும் விமர்சனங்களை முன்வைக்கவும் கேள்விகளை எழுப்பவும் வேண்டியுள்ளது. காரணம் இன்னொரு பின்னடைவுக்கோ இன்னொரு அவலத்துக்கோ இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கோ போகமுடியாது என்பதால். விமர்சனங்களில்லாத, விவாதங்களில்லாத, கேள்விகளில்லாத அரசியல் தமிழ் மக்களுக்கான பின்னடைவையே தந்திருக்கிறது.


புலிகளின் ஏகபிரதிநிதிக் கோட்பாட்டை தொடர்ந்து ஏற்க மறுத்து வந்தவர்கள், அல்லது அதை விமர்சித்து வந்தவர்கள் சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர். இவர்களுடைய பல நேர்காணல்களும் பேச்சுகளும் இதற்கு ஆதாரம். அத்தகைய ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டையோ நிலைப்பாட்டையோ மறுத்து வந்த இவர்கள் இப்போது புதிதாக ஏகபிரதிநிதிகள் தாமே என்பது கேள்விகளை எழுப்புகிறது. இதுதவிர, ஏகப்பிரதிநிதித்துவ அடையாளம் என்பது அரசியல் தீர்வு தொடர்பான அணுகு முறைக்கு இப்போது ஒரு தேவை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கான அடிப்படைகளை ஏற்படுத்தியிருக்கிறதா?


அடுத்தது, இதுவரையான கூட்டமைப்பின் தொழிற்பாடு என்பது, பெரும்பாலும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதாகவே இருக்கிறது. பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது மட்டும் ஒரு அரசியற் கட்சியின் பணியாக இருக்க முடியாது. பிரச்சினைகளைப் பேசத்தான் வேண்டும். ஆனால் தனியே பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் எந்தப் பயனும் கிட்டிவிடப்போவதில்லை. பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்கு வழிகளையும் தேடவேண்டும்.


போருக்குப்பின்னரான நிலைமைகளை எவ்வாறு ஏனைய சமுகங்கள் கையாண்டிருகின்றன என்றோ, சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் தனிமைப்பட்டுப் பலவீனப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அரசியலை எவ்வாறு முன்னிலைப்படுத்துவது என்றோ, மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொண்டுவருவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட கவனிக்கத்தக்க பொறிமுறையின் தேவை பற்றியோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியோ கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.


அத்தகைய தேடல் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதாகவோ அந்தத் தேடல்களின் மூலம் மக்களுடைய தேவைகளோ பிரச்சினைகளோ தீர்ந்தமாதிரியும் தெரியவில்லை. ஆனால், பிரச்சினைகள் தீர்ந்து விடாமல், அவற்றைப் பராமரித்துக்கொண்டு, அவற்றை வைத்தே அரசியல் நடத்துகின்றது கூட்டமைப்பு என்பது பகிரங்கமான குற்றச்சாட்டாகும். இதேவேளை அதிக குற்றச்சாட்டுகளையும் சந்தேகங்களையும் கண்டனங்களையும் கூட்டமைப்பு தொடர்ந்து பரவலாகச் சந்தித்து வருகிறது என்பதையும் இங்கே நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.


நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியதைப் போல, கூட்டமைப்பானது ஒரு அரசியற் கட்சியா அல்லது அது ஒரு ஊடக அமைப்பா என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கதே. ஒரு ஊடக அமைப்புச் செய்யும் காரியங்களையே தன்னுடைய பிரதான அரசியற் பணியாக கூட்டமைப்பும் செய்து வருகிறது. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதும் செய்திகளை வெளியிடுவதும் அவர்களுடைய கவலைகள், தேவைகளைப் பற்றிப் பேசுவதும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செய்கின்ற பணியாகும். இதைத்தான் கூட்டமைப்பும் அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியற் பணியாக மேற்கொண்டு வருவதை அவதானிக்கலாம்.


ஊடகவியலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் இந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கான வசதிகளோ உரிய மதிப்போ, அதற்கப்பாலான பிற அங்கீகாரங்களோ அவர்களுக்கு இலகுவில் கிட்டிவிடுவதில்லை. ஆனால், அரசியலாளர்கள் என்ற அடிப்படையிலும் தமிழ்த்தேசியத்துக்கான குரலாளர்கள் என்ற வகைப்பாட்டிலும் கிடைக்கின்ற அனைத்து வளங்களுடனும் கூட்டமைப்பினர் செய்து வருகின்ற பரப்புரைப் பணி, ஊடகப் பணி, உண்மையில் இத்தனை தியாகங்களைச் செய்திருக்கும் மக்களுக்கு இவ்வளவு இழப்புகளைச் சந்தித்திருக்கும் சனங்களுக்கு எந்தப் பெரிய நன்மைகளையும் பெற்றுத்தரப் போவதில்லை.


பிரச்சினைகளை அம்பலப்படுத்துதல் அல்லது பகிரங்கப்படுத்துதல் என்பது இன்று மிகச் சாதாரண விசயம். தவிர, தமிழ் அரசியற் கட்சிகள் கண்டு பிடித்த உண்மைகளையும் அவை விடுத்த கண்டனங்களையும் விட அதிகமான கண்டனங்களையும் உண்மைகளையும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா அமைப்புகளும் சில வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றை விட மேலதிகமான உண்மை எதனையும் கூட்டமைப்பு கண்டு பிடித்ததா? அல்லது புதிதாக எதற்காவது உச்சமான கண்டனங்களைத் தெரிவித்து அதன் பயனைக் கண்டதா?


கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளைப் பற்றியும் அவர்களுடைய அந்தப் பணியை ஊடகங்களும் பிற சர்வதேச அமைப்புகளும் செய்து வருகின்றன. எனவே அவற்றைப் பிரதான அரசியற் பணியாகக் கொள்வதை விடுத்து கூட்டமைப்பு புதிய பணிகளை மேற்கொள்ளவேண்டும்.


ஒரு அரசியற் கட்சி என்பது அதனுடைய செயற்பாடுகளினூடாகவே பலம் பெறுவதாகும். செயற்பாடுகள்தான் அந்தக்கட்சிக்குப் பலத்தைக் கொடுக்கமுடியும். இப்போது கூட்டமைப்புக்கு ஒரு வலுவான மக்கள் அபிமானம் ஆதரவுத்தளம் இருப்பதாக யாரும் சொல்லக்கூடும். இதைப் போல பன் மடங்கு ஆதரவுத்தளத்தையும் பலத்தையும் வைத்திருந்த அரசியல் வரலாற்றின் கடந்த காலப் பின்னடைவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான காரணங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.


மக்கள் ஆதரவு என்பது காந்திக்கும் இருந்தது. ஹிட்லருக்கும் இருந்தது. சிலுக்குவுக்கும் இருந்தது. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இருந்தது. மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்துக்கும் இருக்கிறது. அன்னை தெரேசாவுக்கும் இருந்தது. ஆகையால் இந்த நிலையில் மக்களின் ஆதரவை எந்தத் தளத்தில் வைத்து எப்படி மதிப்பிடுவது என்றே பார்க்க வேண்டும். அந்த ஆதரவின் பெறுமானம் என்ன? அந்த ஆதரவை எவ்வாறு பெறுமானமாக்குவது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.


ஆகையால் கூட்டமைப்பின் இத்தகைய பிரதான இயல்புகளையிட்டும் அது தொடர்ந்து கொண்டிருக்கும் செயல்களையிட்டும் இப்போது இவ்வாறு நெற்றிக்கு நேரே விவாதங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டியுள்ளது இன்றைய அவசியமாகும். இந்த விவாதங்கள், கேள்விகள், விமர்சனங்கள் எல்லாவற்றையும் ஆக்கபூர்வமான பயணத்துக்காகவே முன்வைக்கப்பட்டதாக கருதிக் கொண்டு இவற்றை கூட்டமைப்பும் சரி, பிறரும் சரி அணுகவேண்டும். அதை விடுத்து, இங்கே பகிரங்கமாக அடிப்படைகளுடன் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு வழமையைப் போல ஊகநிலைப்பட்ட எதிர்வாதங்கள், நியாயப்படுத்தல்கள், அவதூறுகளால் பிரச்சினையையும் விசயங்களையும் மூடிமறைக்க முயலக்கூடாது. அதற்கு அவசியமில்லை.


பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடும் வாழ்வோடும் குருதியோடும் தொடர்ந்து யாரும் விளையாடக்கூடாது. அப்படி எந்தச் சக்தி விளையாடுவதையும் மக்கள் அனுமதிக்க முடியாது. ஏனெனில் மக்கள் இன்னொரு முள்ளிவாய்க்காலையோ இன்னொரு வாகரையையோ இன்னொரு கஞ்சிகுடிச்சாற்றையோ விரும்பவில்லை. அதற்கு அவர்கள் தயாருமில்லை.


எங்களுடைய இன்றைய நாளைய அரசியல் போக்குக்கு என்ன தேவை, அதற்கு எவையெல்லாம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே இங்கே முக்கியமானவை. ஆகவே அந்த அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவேண்டும்.


சுருக்கமாகச் சொன்னால், அரசியற் தீர்வு, அதற்கான பொருத்தமான, யதார்த்தமான அணுகுமுறைகள், அதற்கான புத்திபூர்வமான நடவடிக்கைகள், சர்வதேச, பிராந்திய சக்திகளைக் கையாளும் அரசியல் இராசதந்திர பொறிமுறைகள், பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை, பாதிப்பின் உண்மைத்தன்மை, பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தரப்பைக் கட்டுப்படுத்துதல், பாதிப்புக்குக் காரணமான தரப்பினரை குற்றங்களுடன் இனங்காட்டி நடவடிக்கை எடுத்தல், பாதிப்புகளுக்கான நீதி மற்றும் நிவாரணம், இவற்றைப் பெறுவதற்கான சர்வதேச ஆதரவுப்பலம் போன்றவற்றில் கொண்டிருக்கும் அக்கறைகளும் புரிதல்களுமே இன்றைய நாளைய அரசியலைத் தீர்மானிக்கப்பபோகின்றன. இவற்றை கூட்டைமைப்பு கொண்டிருக்கிறதா அல்லது கொண்டிருக்கக்கூடிய அக்கறையையாவது கொண்டிருக்கின்றதா என்பதே இங்கே முன்வைக்கப்படும் கேள்வியாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக